செய்திகள்

வரலாறு காணாத வகையில் பூண்டு விலை உயர்வு: ஒரு கிலோ ரூ.450க்கு விற்பனை

இல்லத்தரசிகள் அதிர்ச்சி

சென்னை,ஜன. 31–

கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலை சற்று குறைந்துள்ள நிலையில், பூண்டு வரத்து குறைந்து உள்ளதால் வரலாறு காணாத அளவுக்கு ஒரு கிலோ பூண்டு ரூ.450 வரை விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் மற்றும் இல்லத்தரசிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

அன்றாட சமையலில் பயன்படுத்தப்படும் விளை பொருட்களில் ஒன்று பூண்டு. குறிப்பாக, அசைவ உணவு தயாரிப்பில் பூண்டு அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது.

நீலகிரி, திண்டுக்கல் மாவட்டங்களில் பூண்டு பயிரிடப்பட்டாலும், மாநிலத்தின் பெரும்பான்மையான தேவையை ஈடு செய்வதற்கு, பிற மாநிலங்களில் இருந்து பூண்டு இறக்குமதி செய்யப்படுகிறது.

இதேபோல, கோத்தகிரி, மஞ்சூர், ஆடாசோலை, தேனோடு, கம்பை, அணிக்கொரை உள்பட பல்வேறு இடங்களில் மலைப் பூண்டு பயிரிடப்பட்டு உழவா் சந்தை உள்ளிட்ட பல்வேறு சந்தைகளுக்கு விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது.

இந்த நிலையில், பூண்டு அறுவடைக் காலம் தொடங்கிவிட்ட நிலையிலும் வழக்கத்துக்கு மாறாக, சென்னை கோயம்பேடு சந்தைக்கு பூண்டு வரத்து 70 சதவீதம் குறைந்து உள்ளது. இதனால் கோயம்பேடு காய்கறி சந்தையில் பூண்டு விலை புதிய உச்சத்தை தொட்டு உள்ளது. வழக்கமாக ஒரு கிலோ பூண்டு ரூ.100 முதல் ரூ.125 வரை விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது கிலோவுக்கு ரூ.420 முதல் ரூ.450 வரை அதிகரித்துள்ளதால் சில்லறை வியாபாரிகளும், இல்லத்தரசிகளும் கவலை அடைந்துள்ளனர். கடந்த 2 வாரங்களில் மட்டும் கிலோவுக்கு ரூ.150 முதல் 250 வரை உயர்ந்து உள்ளது.

வறட்சி, வெள்ளப்பெருக்கால் பூண்டு விளைச்சல் பாழானதே, விலை உயர்வுக்கு காரணம். உத்தரபிரதேசத்தில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பூண்டும், நடப்பாண்டில் விளைச்சல் குறைந்துள்ளது.அடுத்த ஒரு மாத காலத்திற்கு விலை ஏற்றம் இருக்கும் என வியாபாரிகள் கூறியுள்ளனர்.

ஏற்கெனவே தக்காளி, வெங்காயம் விலை ஏற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தற்போது மலைப் பூண்டு விலை உயர்வால் பெரும் சுமை ஏற்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *