செய்திகள்

வரலாறு காணாத அளவாக சீர்காழியில் ஒரே நாளில் 44 செ.மீ. மழை

டெல்டா மாவட்டங்களில் 20 ஏக்கர் பயிர்கள் வெள்ள நீரில் மூழ்கின

பூம்புகார், நவ. 12–

சீர்காழி நகரில் வரலாறு காணாத அளவுக்கு ஒரே நாளில் 44 செ.மீ. அளவுக்கு மழை கொட்டி உள்ளது.

கனமழையால் டெல்டா மாவட்டங்களில் 20 ஆயிரம் ஏக்கர் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டி வருகிறது. மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக இடைவிடாமல் கனமழை பெய்து வருகிறது.

குறிப்பாக சீர்காழி, பூம்புகார், திருவெண்காடு, வைத்தீஸ்வரன் கோவில் மற்றும் கொள்ளிடம் பகுதிகளில் தொடர்ந்து வரலாறு காணாத அளவுக்கு மழை பெய்து வருகிறது. இதனால் பல குடியிருப்பு பகுதிகளில் மழை வெள்ள நீர் புகுந்துள்ளதுடன், விவசாய நிலங்களும் தண்ணீரில் மூழ்கியுள்ளது

சீர்காழி நகரில் மட்டும் ஒரே நாளில் 43.6 செ.மீ., கொள்ளிடத்தில் 31.5 செ.மீ., சிதம்பரத்தில் 30.7 செ.மீ. அண்ணாமலை நகரில் 28 செ.மீ, புவனகிரியில் 21 செ.மீ, கே.எம்.கோவிலில் 19 செ.மீ என்று மழை பதிவாகி உள்ளது. குறிப்பாக மயிலாடுதுறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் 10 செ.மீட்டருக்கு அதிகமாக மழை பதிவாகி உள்ளது. இன்றும் தொடர்ந்து இடைவிடாது மழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக சீர்காழி, வைத்தீஸ்வரன் கோவில், சட்டநாதபுரம், திருமுல்லைவாசல், கொள்ளிடம், பூம்புகார், திருவெண்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 500 க்கும் மேற்பட்ட வீடுகளை சுற்றி மழைநீர் சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், வாகன ஓட்டிகள் தட்டு தடுமாறியபடி சென்று வருகின்றனர்.

சீர்காழி தட்சிணாமூர்த்தி நகர், கோவிந்தராஜ் நகர், ரணியன் நகரில் தெருக்களில் 2 அடி உயரத்துக்கு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் அங்கு வசிக்கும் மக்கள் அத்தியாவசிய தேவைக்கு கூட வீட்டை விட்டு வெளியேற முடியாமல் தவிக்கின்றனர்.

18 கடலோர கிராமங்களில்

கடல் சீற்றம்

தேனூர் கதவணையில் இருந்து பிரதான வாய்க்காலான முடவன் வாய்க்காலில் பல்வேறு இடங்களில் கரைகள் உடைந்தும் கரை வழிந்து தண்ணீர் அப்பகுதியில் உள்ள 100-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் புகுந்துள்ளது.

கனமழையால் டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்கள் வெள்ள நீரில் மூழ்கி உள்ளன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

சீர்காழி தாலுகாவிற்கு உட்பட்ட 18 கடலோர கிராமங்களில் கடல் சீற்றம் காரணமாக செல்லனாறு, வெள்ள பள்ளம் உப்பனாறு, கோதை ஆறு உள்ளிட்ட முகத் துவார ஆறுகளின் வழியாக கடல் நீர் உட்புகுந்ததால் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர் நீரில் மூழ்கியுள்ளது.

வெளுத்து வாங்கிய கனமழை காரணமாக நாங்கூர், திருநகரி, நெய்த வாசல், வேட்டங்குடி, மாதானம் உள்ளிட்ட பகுதிகளில் 20,000 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள நெல் பயிர்கள் வெள்ள நீரில் மூழ்கி அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து 2 நாட்களாக இடைவிடாது பெய்து வரும் கனமழையால் சில இடங்களில் மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தும், மின் கம்பிகள் அறுந்து விழுந்தும் கிடக்கிறது.

இதனால் முன்னெச்சரிக்கையாக சீர்காழி, வைத்தீஸ்வரன்கோயில், திருவெண்காடு, திருமுல்லைவாசல், பொறையாறு மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று மாலை 6 மணிக்கு துண்டிக்கப்பட்ட மின்இணைப்பு இன்று வரை வழங்கப்படவில்லை.

மீட்புப் பணிகளில்

அமைச்சர் மெய்யநாதன்

மயிலாடுதுறை மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சரான மெய்யநாதன் இன்று காலை அங்கு நேரடியாக சென்று மீட்புப் பணிகளைப் பார்வையிட்டார்.

மழை குறித்து மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா கூறியதாவது: வெள்ள நீர் வெளியேற்றுவதில் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். போர்க்கால அடிப்படையில் மீட்டு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன என தெரிவித்தார்.

மழை சேதம் குறித்து விவசாயிகள் கூறுகையில், மயிலாடுதுறையில் கால்வாய்கள் சுத்தம் செய்யவில்லை. அதனால் ஆண்டுதோறும் விவசாய நிலங்கள் சேதமடைந்து வருகிறது. இதனால் அரசு இழப்பீடு வழங்க வேண்டும். கால்வாய்கள் பராமரிக்க வேண்டும் என தெரிவித்தனர்.

கோவில் குளம் தடுப்புச் சுவர்

இடிந்து விழுந்தது

தொடர் கனமழையில் பிரசித்தி பெற்ற சிதம்பரம் இளமையாக்கினார் கோயில் குளம் தடுப்புச் சுவர், நேற்று நள்ளிரவு இடிந்து விழுந்தது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

ஏற்கெனவே தெற்கு கரை தடுப்புச் சுவர் இடிந்து விழுந்தது. கடந்த அண்ணா தி.மு.க. ஆட்சியில் புதிய தடுப்புச் சுவர் அமைக்க ரூ. 5.37 கோடி நிதி ஒதுக்கீடு செய்து புதிதாக தடுப்புச் சுவர் கட்டப்பட்டது. தற்போது கிழக்கு கரை தடுப்பு சுவர் இடிந்து விழுந்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *