செய்திகள்

வரதராஜபெருமாள் கோவில் மணியக்காரர் மாரடைப்பால் சாவு

காஞ்சீபுரம்,ஜன.17-

காஞ்சீபுரம் பெருமாள் கோவில் சன்னதி தெருவில் வசிப்பவர் கே.என்.சீனிவாசன் (54). இவர் பல ஆண்டுகளாக உலக பிரசித்தி பெற்ற காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவிலில், மணியக்காரராக பணியாற்றி வருகிறார்.

காஞ்சீபுரம் அடுத்த பழையசீவரத்தில், நேற்று மாலை பார்வேட்டை உற்சவம் நடைபெறும். அதற்காக, நேற்று முன்தினம் இரவு, காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் இருந்து உற்சவர் பல்லக்கில் புறப்பட்டார். காஞ்சீபுரம் நத்தப்பேட்டை, நசரத்பேட்டை, ராஜாம்பேட்டை, சங்கராபுரம், புளியம்பாக்கம், வாலாஜாபாத், வழியாக பழையசீவரம் கிராம தெருக்கள் வழியாக சுற்றி வந்து தூக்கி சென்றனர். நேற்று காலை 9.30 மணியளவில் வரதராஜபெருமாள் உற்சவர் பழையசீவரம் மலை மீது கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள மண்டபத்தில் இறக்கி வைத்தனர். அப்போது உற்சவருடன் சென்ற கோவில் மணியக்காரர் சீனிவாசனுக்கு அங்கு மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி கீழே விழுந்தார்.

உடனடியாக, அவரை செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். டாக்டர்கள் பரிசோதித்ததில் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பிறகு, அவரது உடல் காஞ்சீபுரம் பெருமாள் கோவில் சன்னதி தெருவிற்கு வந்தது.

இத்துயர செய்தி கேள்விப்பட்டதும், கோவில் செயல் அலுவலர் என்.தியாகராஜன், மற்றும் கோவில் அர்ச்சகர்கள், பணியாளர்கள், அஞ்சலி செலுத்தினார்கள். மாரடைப்பால் உயிரிழந்த கோவில் மணியக்காரர் சீனிவாசனுக்கு ஒரு மனைவியும், ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *