செய்திகள் வாழ்வியல்

வயிற்றில் இருக்கும் சரியான பாக்டீரியாக்களே மன அழுத்தத்தைக் குறைக்க உதவும்: புதிய ஆராய்ச்சி முடிவு

Makkal Kural Official

நல்வாழ்வுச் சிந்தனைகள்


“வயிற்றில் இருக்கும் நுண்ணுயிரிகளைக் கொண்டு மனநோய்களுக்கு சிகிச்சை அளிக்க முடியுமா என்பதை இப்போது கண்டறிய முடியும். உளவியல் துறையில் இது பெரும்பங்கை வகிக்க முடியும்,” என்றார் விஞ்ஞானி ஜேன். மன பதற்றம் அல்லது மன அழுத்தத்துடன் தொடர்புடைய சிறப்பு வகை பாக்டீரியாக்கள் குறித்து ஜேன் ஆராய்ச்சி செய்து வருகிறார். வயிற்றில் இருக்கும் பாக்டீரியா மன அழுத்தத்தை குறைக்குமா ?

மன உளைச்சல், வயிற்றில் பிரச்னைகளை ஏற்படுத்தும் . ஆனால் தற்போது வயிற்றில் இருக்கும் சரியான பாக்டீரியாக்கள் மன அழுத்தத்தைக் குறைக்க உதவும் என்பது புதிய ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.

“சமீபத்தில் மனச்சோர்வு அடைந்தவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் மனச்சோர்வு அல்லது பதற்றத்தைக் குறைக்க உதவும் சில பாக்டீரியாக்கள் இருப்பதைக் கண்டறிந்தோம்,” என்று அவர் குறிப்பிட்டார்.

“மனச்சோர்வு அடைந்தவர்களின் கவலைக்கு இந்த பாக்டீரியா காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணமாக உள்ளதா என்பதையும் நாம் இப்போது கண்டுபிடிக்கலாம்.”

மனச்சோர்வடைந்த மக்களில் அமைதியின்மைக்கான காரணத்தைக் கண்டுபிடிப்பது ஒரு சிக்கலான பணி. ஆனால் இப்போது ஒரு துப்பு நம் கையில் கிடைத்துள்ளது. இதன் மூலம் பாக்டீரியா அல்லது நுண்ணுயிரி இல்லாததால் அமைதியின்மை அதிகரிக்கிறதா என்பதை நாம் கண்டறியலாம்.

​​“மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட சிலருக்கு உணவில் இந்த பாக்டீரியா இல்லாததால் மன அழுத்தம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஆனால் இதுபோன்ற பல பாக்டீரியாக்கள் உணவில் இருந்து மட்டுமல்லாமல் நமது டிஎன்ஏ காரணமாகவும் நம் உடலில் உற்பத்தியாகின்றன என்பதை எங்கள் ஆராய்ச்சியில் கண்டறிந்துள்ளோம்,” என்று ஜேன் ஃபோஸ்டர் குறிப்பிட்டார்.

நம் வயிற்றில் இருக்கும் பாக்டீரியாக்கள் நமது மரபணுக்களுடன் தொடர்புடையதா அல்லது நமது உணவு மற்றும் வாழ்க்கை முறையுடன் தொடர்புடையதா என்பதை நம்மால் இன்னும் முழுமையாகப் புரிந்து கொள்ள முடியவில்லை.

இருப்பினும் சீரான உணவு மற்றும் உடற்பயிற்சி, நமது வயிறு மற்றும் மனதை ஆரோக்கியமாக வைத்திருக்கும் என்பதை அனைவரும் ஒப்புக்கொள்கின்றனர்.

குடலின் செயல்பாடு என்ன?

ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் சுமார் 50 பில்லியன் டாலர்கள் செரிமானத்தை மேம்படுத்த உதவும் உணவுப் பொருட்களுக்காக செலவிடப்படுகிறது.

”பலருக்கு செரிமான பிரச்சனைகள் எதுவும் இருப்பதில்லை. இருப்பினும் தாங்கள் எப்போதும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதற்காக அவர்கள் அதற்கு சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக்கொள்கிறார்கள்,” என்று நெதர்லாந்தில் உள்ள நிஜோ புட் ரிசர்ச் கம்பெனியின் வணிக மேம்பாட்டு மேலாளர் மார்ட்டின் ஹாம் கூறினார்.

”இரண்டு வகையான சப்ளிமெண்ட்டுகள் உள்ளன. முதலாவது புரோபயாடிக்குகள் – நமது வயிற்றில் உள்ள அதே வகையான பாக்டீரியாக்களை அவை கொண்டுள்ளன.

இரண்டாவது பிரீபயாடிக்குகள். நம் குடலில் உள்ள நுண்ணுயிரிகளை வளர்க்கும் நார்ச்சத்து கொண்டவை இவை. ஆனால் இந்த சப்ளிமெண்ட்ஸ் நம் வயிற்றின் பெருங்குடலை அடையும் போது மட்டுமே பயனுள்ளதாக இருக்கும்,”என்று மார்ட்டின் ஹாம், பிபிசியிடம் தெரிவித்தார்.

பெருங்குடலை அடைவதற்கு முன் அவை சிறுகுடலின் வழியாக செல்ல வேண்டும். அதன் நீளம் நமது உடலின் நீளத்தை விட மூன்று மடங்கு அதிகம். இந்த சப்ளிமெண்ட்ஸ் நீண்ட தூரம் பயணிக்க வேண்டும். அப்போதுதான் பலன் கிடைக்கும். நமது மரபணுக்களை நம்மால் மாற்றமுடியாது. சப்ளிமெண்ட் தொடர்பாகவும் நம்மால் ஒரு முடிவுக்கு வரமுடியாவிட்டால், காய்கறி உணவுகளைச் சமைத்துச் சாப்பிட்டு நமது வாழ்க்கை முறையை சீராக்குவதில் கவனம் செலுத்துவதே நம்மிடம் இருக்கும் ஒரே வழி.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *