வாழ்வியல்

வயலில் களை எடுக்க உதவும் புதிய ரோபோ!

இந்தியா உள்பட பல நாடுகளில், வேளாண்மைத் தொழிலுக்கு ஆட்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. களத்தில் இறங்கி வேலை பார்ப்பதற்கு ஆட்களை நம்பாமல், ரோபோக்களை இறக்கிவிட, பலரும் சிந்தித்து வருகின்றனர்.

இந்த நிலையில், ‘அகெரிஸ் ஸ்வாக்போட்’ என்ற வேளாண் பணி ரோபோ ஒன்றை, கடந்த நான்கு ஆண்டுகளாக உருவாக்கி, பரிசோதித்து வருகிறது அதை தயாரிக்கும் நிறுவனம். நான்கு சக்கரங்களைக் கொண்ட அகெரிஸ் ஸ்வாக்போட், மெல்ல வயலில் உருண்டுச் சென்று, களைகளைப் பிடுங்கும்.

பயிர்களுக்கு நோய் அடித்திருக்கிறதா என்பதை சோதித்து விவசாயிக்கு சொல்லும். அறுவடைக் காலம் நெருங்கும்போது, மகசூல் எவ்வளவு கிடைக்கும் என்பதை துல்லியமாக கணிக்கவும் உதவும். இந்த ரோபோவிற்கு, இயந்திரக் கரமும், கேமிராவும் அதி நவீன புத்திசாலி மென்பொருளும் இருக்கிறது என்பதை சொல்லவேண்டியதில்லை.

இதை உருவாக்கி வரும் அதே விஞ்ஞானிகள், ‘டிஜிட்டல் பார்ம்ஹேண்ட்’ என்ற விவசாய எடுபிடி வேலைகள் செய்யும் ரோபோவையும் வடிவமைத்து வருகின்றனர். இந்த ரோபோ, வளரும் நாடுகளில் உள்ள சிறு விவசாயிகளும் வாங்கி பயன்படுத்தும் விலையில் இருக்கும் என்று தெரிகிறது.

டிஜிட்டல் பார்ம்ஹேண்ட் ரோபோவால் களை எடுப்பது, பூச்சி மருந்து அடிப்பது போன்ற வேலைகளையும் செய்யும் விதத்தில் வடிவமைத்து வருகின்றனர் அதன் கண்டுபிடிப்பாளர்கள். 2020ல் ஆஸ்திரேலியாவில், முதலில் இந்த ரோபோக்கள் விற்பனைக்கு வரும். அடுத்து, பிற நாடுகளை எட்டிப் பார்க்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *