வாழ்வியல்

வயலிலிருந்து பயிர்களைக் கொண்டு செல்ல உதவும் புதுவிதமான சாதனம் :சென்னை ஐஐடி கண்டு பிடிப்பு


அறிவியல் அறிவோம்


மோனோரயில் வடிவ சாதனம்: இலகுரக மோனோரயில் போன்ற இந்தப் போக்குவரத்து சாதனத்தின் மூலம் பண்ணைகளில் இருந்து வேளாண் விளைபொருட்களை அருகில் உள்ள சேகரிப்பு மையங்களுக்கு குறைந்த செலவில் எடுத்துச் செல்ல முடியும்.

ஐஐடி மெட்ராஸ் குழுவினர், வேளாண் விவசாயிகளுக்கான அரசுசாரா நிறுவனமான பொது விவசாயிகள் சங்கத்துடன் இணைந்து, தமிழ்நாட்டின் கரூர் மாவட்டம் நஞ்சை தோட்டக்குறிச்சி கிராமத்தில் உள்ள பண்ணையில் முன்வடிவ கம்பிவட சாதனத்தை (prototype cableway system) வெற்றிகரமாகப் பரிசோதனை செய்துள்ளனர்.

இதுகுறித்து இயந்திரவியல் துறை பேராசிரியர் சங்கர் கிருஷ்ணபிள்ளை கூறுகையில்,”வரவிருக்கும் ஆண்டுகளில் குறிப்பாக அறுவடைக்குப் பிந்தைய பணிகளை மேற்கொள்ள கடுமையான ஆள்பற்றாக்குறையை இந்திய விவசாயிகள் சந்திக்க நேரிடும். மோனோ ரயில் கருத்துரு அடிப்படையில் உள்ளூர் பட்டறைகளில் தங்கள் பகுதியில் கிடைக்கும் உபகரணங்களைக் கொண்டு எளிய முறையில் வேளாண் போக்குவரத்து சாதனத்தை உருவாக்க முடியும். இந்தியப் பண்ணைகளில் இதனை எளிதாக நிறுவி, விளைபொருட்களைக் கொண்டு செல்வதில் தொழிலாளர்களின் தேவையைக் குறைக்கலாம். தரைக்கு மேலே இந்த சாதனம் இயக்கப்படுவதால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் இடையூறுகளும் மிகக் குறைவாகவே இருக்கும்,” எனக் குறிப்பிட்டார்.

வேளாண் பயன்பாட்டிற்காக உருவாக்கப்பட்டுள்ள இந்த சாதனம் மிகவும் எளிதான வடிவமைப்பு மற்றும் உதிரிபாகங்களைக் கொண்டுள்ளது. தண்டவாள அமைப்பிலான கம்பிகளையோ, கம்பங்களையோ கூடுதலாகச் சேர்த்து, ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை வரம்பை எளிதாக நீட்டித்துக் கொள்ளலாம். எதிர்காலத்தில், சூரியஒளி மின்சக்தியில் சார்ஜ் செய்யப்பட்ட பேட்டரி பவர்பேக் மூலம் டிராலிகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. புதிய சாதனத்தின் நன்மைகள்: வேளாண் பணிகளைச் செய்வதில் நிகழும் தொழிலாளர் பற்றாக்குறையை குறைந்த செலவில் ஈடுகட்ட முடியும். வேளாண் விளைபொருட்களை தலைச்சுமையாக சேகரிப்பு மையங்களுக்கு எடுத்துச் செல்வதற்கு சிறிய பண்ணையில் கூட 32 பேரை பணியமர்த்த வேண்டியிருக்கும். ஆனால், இதே வேலையை புதிய போக்குவரத்து சாதனத்தை கொண்டு செய்யும் போது வெறும் 4 தொழிலாளர்கள் மட்டுமே இருந்தால் போதுமானதாகும். சேகரிப்பு மையங்களுக்கு தலைச்சுமையாக விளைபொருட்களை குறிப்பாக பழங்களை எடுத்துச் செல்லும்போது ஏற்படும் சேதங்களைத் (bruising of fruits) தவிர்க்க இந்த போக்குவரத்து சாதனம் உதவுகிறது. போக்குவரத்து சாதனத்தை நிறுவ குறைந்த அளவு இடம் மட்டுமே தேவைப்படுகிறது. குறிப்பிட்ட உயரத்திற்கு மேல் இயக்கப்படுவதால் பயிர்களுக்கும் இடையூறு இருக்காது. எனவே, இந்தப் போக்குவரத்து சாதனத்தைப் பயன்படுத்தும்போது சுற்றுச்சூழலில் மிகக் குறைந்த அளவே தாக்கம் ஏற்படுகிறது. ரயில்தண்டவாள அமைப்பில் இயக்கப்படுவதால் வழக்கத்தைவிட இதில் எரிசக்திப் பயன்பாடு குறைவு. இதனை இயக்க இரு முனைக்கும் தலா ஒருவர் என இரண்டுபேர் இருந்தாலே போதுமானது. எனவே இப்போக்குவரத்து சாதனத்தை இயக்குவதற்கான செலவு குறைவாகவே இருக்கும்.

போக்குவரத்து சாதனம் எவ்வாறு செயல்படுகிறது?

போக்குவரத்து சாதனம் பண்ணையோர நெடுகிலும் கான்கிரீட் அடிப்பகுதியுடன் கூடிய இரும்புக் கம்பங்களை(steel posts erected on concrete shoes) நடும் எளிய உள்நாட்டு வடிவமைப்பைக் கொண்டதாகும்.

6 மீட்டர்கள் இடைவெளியுடன் இந்த கம்பங்கள், வலிமையுடன் கூடிய இலகுரக தண்டவாள அமைப்பு மூலம் இணைக்கப்படும். பெட்ரோல் என்ஜினைக் கொண்டு முன்னும் பின்னும் இயக்கப்படும் இழுவை அலகு மூலம் வேளாண் விளைபொருட்கள் ஏற்றிச் செல்லப்படும்.

ஒவ்வொரு டிராலியும் ஏறத்தாழ 40 கிலோ எடைகொண்ட பொருளை அதாவது தலைச்சுமையாகக் கொண்டு செல்லும் அளவுக்கு ஏற்றிச் செல்லக் கூடியவை. தண்டவாள அமைப்பை அவ்வப்போது தேவைப்படும் தூரத்திற்கு ஏற்ப அதிகரித்துக் கொண்டே போகலாம். இதற்குத் தேவையான உதிரிபாகங்கள் அனைத்தும் உள்ளூரிலேயே கிடைக்கும் என்பதால் அந்தந்தப் பகுதிகளில் உள்ள பட்டறைகளிலேயே உபகரணங்களைத் தயாரிக்க முடியும். தமிழ்நாட்டில் கரூர் மாவட்டத்தில் உள்ள நஞ்சை தோட்டக்குறிச்சி கிராமத்தில், பொது விவசாயிகள் சங்கத் தலைவர் டி.என்.சிவசுப்பிரமணியத்தின் விவசாய நிலத்தில் இந்தப் போக்குவரத்து சாதனம் நிறுவப்பட்டது. சோழமண்டலம் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் இருந்து பெறப்பட்ட சிஎஸ்ஆர் நிதியின் மூலம் இந்த சாதனம் நிறுவப்பட்டு உள்ளது.

பேராசிரியர் சங்கர் கிருஷ்ணபிள்ளை தலைமையிலான ஐஐடி மெட்ராஸ் குழுவினர், தன்னார்வத் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து ஜூலை 2020 முதல் தொடர்ச்சியாக பல மாதங்களாகப் பரிசோதனைகளைமேற்கொண்டனர்.

சுமை ஏற்றப்பட்ட ஐந்து டிராலிகளுடன் 200 மீட்டர் தூரத்திற்கு சோதனைகள் நடைபெற்றன. இந்த சாதனத்தை இயக்க இரு முனைகளிலும் தலா ஒருவர் தேவைப்பட்டனர். வேளாண் சுமைகளை தொடர்ச்சியாகவும், நம்பிக்கையுடனும் ஏற்றிச் செல்ல முடியும் என இப்பரிசோதனை எடுத்துக் காட்டுகிறது. கம்பிவடத்திற்கான உபகரணங்களை உள்ளூர் பட்டறைகளிலேயே தயாரித்து, முற்றிலும் உள்நாட்டுத் தயாரிப்பாக இந்த சாதனத்தை உருவாக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *