திருவனந்தபுரம், செப். 3–
வயநாடு பகுதியில் மீண்டும் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக, இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
கேரள மாநிலம் வயநாடு அருகில் உள்ள மூன்று மலை கிராமங்களில் கடந்த சில வாரங்களுக்கு முன் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவு காரணமாக 400க்கும் அதிகமானோர் பலியாகினர் என்பதும் ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளை இழந்து பரிதவித்து வருகின்றனர் என்பதை அறிவோம்.
நிலச்சரிவுக்கு வாய்ப்பு
இந்த நிலையில் வயநாடு பகுதியில் மீண்டும் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் ஆய்வு அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த ஆய்வறிக்கையில் வயநாடு பகுதியில் கனமழை பெய்தால் மீண்டும் நிலச்சரிவு ஏற்படும் என்றும் அண்மையில் நிலச்சரிவு ஏற்பட்டு குவிந்துள்ள பாறை கற்கள் மற்றும் மண்ணுடன் சேர்ந்து அப்பகுதியில் மீண்டும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் உள்ள பாறைகள் மற்றும் மண்ணை அகற்றி முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.