செய்திகள்

வயநாடு நிலச்சரிவில் சிக்கி 284 பேர் மரணம்: ஒரே நாளில் 98 சடலங்கள் மீட்பு

Makkal Kural Official

வயநாடு, ஆக. 1
கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் முண்டக்கையில், மேப்பாடி சூரல்மலை ஆகிய மலைப்பகுதிகளில் கடந்த திங்களன்று நள்ளிரவில் பெய்த அதிகனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழப்பு இன்னும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இன்று ஒரே நாளில் 98 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. 200க்கும் மேற்பட்டவர்களை காணவில்லை.
மீட்கப்படும் சடலங்கள் சூரல்மலை பள்ளிகளில் ப்ரீசரில் வரிசையாக வைக்கப்பட்டு அடையாளம் காணப்பட்டு வருகிறது. அடையாளம் காணமுடியாத அளவுக்கு சடலங்கள் சிதைந்து காணப்படுகின்றன. மருத்துவமனையில் ஏராளமானோர் குவிந்து வருகின்றனர். அவர்கள் தங்களது உறவினர்களை காணாமல் கண்ணீருடன் நிற்பது காண்போர் நெஞ்சை கரைய செய்கிறது.
இதற்கிடையில் கேரளாவில் சனிக்கிழமை வரை கனமழை தொடரும் என அறவிக்கப்பட்டுள்ளது. எர்ணாகுளம், மலப்புரம், கண்ணூர், கோழிக்கோடு, இடுக்கி, திருசூர், ஆலப்புழா, பாலக்காடு, பத்தனம்திட்டா, கோட்டயம் ஆகிய 10 மாவட்டங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கோழிக்காடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இடுக்கி, எர்ணாகுளம், திரிசூர், பாலக்காடு, மலப்புரம் மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. பத்தனம்திட்ட, ஆலப்புழ, கோட்டயம் மாவட்டங்களில் மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
கரைபுரண்டு ஓடும் காட்டாற்று வெள்ளம் ஒருபுறம், மரக்குவியல்கள், காங்கிரிட் குவியல்கள் மத்தியில் சிக்கி கிடக்கும் சடலங்கள் ஒருபுறம், தொடரும் கனமழை ஒருபுறம் என உணவு, குடிநீர், கண்ணுறக்கம் இன்றி நிவாரண பணிகளில் முப்படையினரும் உயிரை பணயம் வைத்து பணியாற்றி வருகின்றனர்.
கனமழை தொடரும் மாவட்டங்களில் கல்வி நிலையங்கள் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
சூரல்மலையில் பாலம் அமைக்கும் பணியில் ராணுவீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையில் நிலச்சரிவு பாதிப்புகளை கண்டறியவும் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறவும் ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தி நாளை காலை வயநாடு மாவட்டத்துக்கு வருகை தர உள்ளனர்.
இந்த நிலையில் நாளை காலை 11.30 மணியளவில் முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *