கேரள அரசு அறிவிப்பு
திருவனந்தபுரம், ஜன.17-
வயநாடு நிலச்சரிவில் காணாமல் போனவர்களை இறந்தவர்களாக அறிவித்து நிவாரண நிதி வழங்கப்படும் என கேரள அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து கேரள வருவாய்த்துறை அமைச்சர் ராஜன் திருச்சூரில் நிருபர்களிடம் கூறியதாவது:-
கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் சூரல்மலை, முண்டகை பகுதியில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 30-ந்தேதி ஏற்பட்ட நிலச்சரிவில் 263 பேர் இறந்ததாகவும், 32 பேர் காணாமல் போனதாகவும் போலீஸ் தரப்பில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. இறந்த வர்களின் குடும்பங்களுக்கு அரசு அறிவித்த நலத்திட்ட உதவிகள், நிவாரண நிதி வழங்கப்பட்டு வருகிறது.
வழக்கமாக ஒருவர் காணாமல் போனால் 7 ஆண்டுகளுக்கு பின்புதான் அவர் மரணம் அடைந்ததாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும். ஆனால் வயநாடு நிலச்சரிவில் காணாமல் போனதாக உறுதி செய்யப்பட்ட 32 பேரை இறந்தவர்கள் பட்டியலில் சேர்த்து அவர்களது குடும்பத்தினருக்கு, நிவாரண உதவிகள் மற்றும் வீடுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆட்சேபனை 30 நாட்களுக்குள் தெரி விக்கலாம். காணாமல் போன வர்களை இறந்த வர்களாக உறுதி செய்ய பஞ்சாயத்து மற்றும் மாநில அளவில் 2 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. அதன்படி கிராம நிர்வாக அதிகாரி, பஞ்சாயத்து செயலாளர், போலீஸ் அதிகாரி ஆகியோர் அடங்கிய குழுவினர் காணாமல் போனவர்களின் பட்டியலை தயார் செய்து மாவட்ட பேரிடர் நிவாரண ஆணையகத்திடம் தாக்கல் செய்ய வேண்டும். அதை உறுதி செய்து அந்த ஆணையம் மாநில குழுவுக்கு சிபாரிசு செய்யும்.
அதனை உள்துறை கூடுதல் தலைமை செயலாளர், வருவாய், உள்ளாட்சி துறை முதன்மை செயலாளர்கள் ஆகியோர் சரி பார்த்த பின்னர் காணாமல் போனவர்கள் குறித்த இறுதி அறிக்கை அரசுக்கு தாக்கல் செய்யப்பட்டு 30 நாட்களுக்கு பின் இறப்பு சான்றிதழ் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.