செய்திகள்

வயநாடு தொகுதி எம்.பி.யாக பதவி ஏற்றார் பிரியங்கா காந்தி

Makkal Kural Official

‘உங்களின் குரலாக ஒலிப்பேன்’ என உரை

புதுடெல்லி, நவ. 28–

அரசியல் சாசன புத்தகத்தை கையில் வைத்தபடி, வயநாடு எம்.பி.யாக இன்று பிரியங்கா பதவி ஏற்றுக் கொண்டார். அவருக்கு அவரது கட்சியினர் வாழ்த்து தெரிவித்தனர்.

பாராளுமன்ற தேர்தலில் இரு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ராகுல், ரேபரேலியை தேர்வு செய்ததன் மூலம், வயநாடு காலியான தொகுதியாக அறிவிக்கப்பட்டது. இதனால் வயநாடு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. முதன்முறையாக, பிரியங்கா போட்டியிட்டு 6,22,338 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். அவர், 4,10,931 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, சாதனை படைத்தார்.

இந்நிலையில், இன்று பாராளுமன்றத்துக்கு கேரள பாரம்பரிய உடை அணிந்து வந்து, அரசியல் சாசன புத்தகத்தை கையில் வைத்தபடி, வயநாடு எம்.பி.,யாக பதவி ஏற்றார். அவருக்கு பாராளுமன்ற சபாநாயகர் ஓம் பிர்லா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

பாராளுமன்ற விவாதம் மற்றும் பொதுக்கூட்டங்களில் அரசியலமைப்பு சாசன புத்தகத்தை கையில் ஏந்தி பேசுவதை, ராகுல் வழக்கமாக கொண்டுள்ளார். அதே பாணியில், அரசியல் சாசன புத்தகத்துடன் எம்.பியாக பிரியங்கா பதவி ஏற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் நான்டட் மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரசின் ரவீந்திர வசந்த்ராவ் சவானும் எம்.பி.யாக பதவி ஏற்றுக் கொண்டார்.

உங்களின் குரலாக ஒலிப்பேன்

பிரியங்கா தனது நன்றி உரையில், “எனது அன்புக்குரிய வயநாடு சகோதர, சகோதரிகளே, என் மீது நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு நான் என்றென்றும் கடமைப்பட்டுள்ளேன். இந்த வெற்றியை உண்மையில் உங்களின் வெற்றியாக நான் உணரச் செய்வேன். உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நான் உங்களின் நம்பிக்கைகளையும் கனவுகளையும் புரிந்து கொண்டுள்ளேன். உங்களில் ஒருவராக உங்களுக்காக போராடுவேன். நாடாளுமன்றத்தில் உங்களின் குரலாக ஒலிப்பேன். உங்கள் அன்புக்கும் நன்றி.” எனக் குறிப்பிட்டிருந்தார்.

கேரளா வயநாடு மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்தி தனது முதல் தேர்தலில் தனது சகோதரர் ராகுலின் சாதனையை முறியடித்தார். பல எதிர்பார்ப்புகளை மீறி அவர் வயநாட்டில் 4,10,931 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

எம்.பி.யாக பதவி ஏற்ற சகோதரி பிரியங்கா காந்தியை ராகுல் காந்தி பல்வேறு கோணங்களில் புகைப்படம் எடுத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *