செய்திகள்

வயது முதிர்ந்த தமிழறிஞர்களுக்கான உதவித்தொகை திட்டம்: 31ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

சென்னை, மார்ச்.7-

வயது முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில், வயது முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 2022–2023ம் ஆண்டுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பிக்க விரும்புபவர்களுக்கு 1.1.2022 அன்று 58 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். ஆண்டு வருவாய் ரூ.72 ஆயிரத்துக்குள் இருக்க வேண்டும். வட்டாட்சியர் அலுவலகத்தில் இணைய வழியில் (ஆன்லைன்) பெறப்பட்ட வருமானச் சான்று, தமிழ்ப்பணி ஆற்றியதற்கான ஆதாரங்கள் மற்றும் தமிழ்ப்பணி ஆற்றிவருவதற்கான தகுதிநிலைச் சான்றை தமிழறிஞர்கள் 2 பேரிடம் பெற்று விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.

விண்ணப்பப்படிவத்தை நேரிலோ அல்லது தமிழ் வளர்ச்சித்துறையின் www.tamilvalarchithurai.tn.gov.in என்ற வலைதளத்திலோ இலவசமாகப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதந்தோறும் உதவித்தொகையாக ரூ.3 ஆயிரத்து 500-ம், மருத்துவப்படியாக ரூ.500-ம் வழங்கப்படும். விண்ணப்பங்கள், அந்தந்த மாவட்டங்களில் கலெக்டர் அலுவலகத்தில் இயங்கிவரும் மண்டல தமிழ் வளர்ச்சி துணை இயக்குனர்கள், மாவட்ட தமிழ் வளர்ச்சி துணை இயக்குனர், மாவட்ட தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலகங்கள் வாயிலாக மட்டுமே அனுப்பப்பட வேண்டும்.

சென்னை மாவட்டத்தில் உள்ளவர்கள் மட்டும் இயக்குனர், தமிழ் வளர்ச்சி இயக்ககம், தமிழ் சாலை, எழும்பூர், சென்னை–8 என்ற முகவரிக்கு நேரடியாக அனுப்பலாம். விண்ணப்பங்கள் அனுப்புவதற்கான கடைசி நாள் இம்மாதம் 31-ந் தேதி ஆகும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *