சிறுகதை

வன்மம் – மு.வெ.சம்பத்

திருமுகம் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வருபவர். அவர் ஓவியம் வரைவதில் வல்லவர். அவரது பெரும்பாலான வருமானம் ஓவியம் வரைவதில் ஈட்டுவதே. நிறைய நிறுவனங்கள் ஓவியம் வரைய இவரை அணுகுவது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருந்தது. திருமுகத்துக்குத் துணையாக தமிழ்வேல், பேரழகன், பழனி மற்றும் சித்திரவேல் இருந்து உதவினார்கள். திருமுகம் அவர்களுக்கு மாதாமாதம் அவர்கள் குடும்பத் தேவைக்கேற்ப பண உதவி செய்தார். திருமுகத்திற்கு சுற்று வட்டாரத்தில் நல்ல மதிப்பு இருந்தது. அவர் பொதுக் காரியங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொள்வார். விதண்டாவாதம் திருமுகத்திற்கு பிடிக்காத ஒன்றாகும். நிறைய விஷயங்களில் இவர் தன்னை முன்னிலைப் படுத்திக் கொள்ள மாட்டார். இவருக்கு எதிரியே அவரது கோபமே. எதுவும் சரியாக இருக்க வேண்டுமென நினைப்பவர் திருமுகம். சிறு தவறைக் கூடத் தாங்க மாட்டாதவர் திருமுகம். திருமுகம் பணம், காசு, நகை போன்றவைகள் படோடோமானவை, எந்த ஒரு வேளையிலும் மனிதனை தன்னிலை மறக்கச் செய்யும் என்று கூறுவார். பணமில்லாமல் இவ்வுலகத்தில் வாழ முடியாது என்பதையும் கூறுவார். தன்னிலை மறந்து சில நேரங்களில் தெய்வப் பாட்டுக்களை நன்கு உரக்கப் பாடுவார். இவர் ஆலயங்கள் செல்வது மிகவும் அரிதான ஒன்று தான். என் மனதிற்குள்ளேயே இறைவன் இருக்கிறார் என்பார். யாராவது மிகவும் துன்பப்பட்டு இவரிடம் வந்தால் அவர்கள் துன்பம் எதனால் வந்ததென ஆராய்ந்து அறிவுரை கூறுவார்.

திருமுகத்திற்கு எதிர்த்த வீட்டில் உள்ள ஆறுமுகம் மீது அளவு கடந்த அன்பு வைத்திருந்தார். அவரை சிறு வயது முதலே கொஞ்சி அவருடன் விளையாடி அகம் மகிழ்ந்ததை இன்றும் கூறுவார். ஆறுமுகம் தற்போது தானே ஒரு வியாபாரம் தொடங்கி நல்ல முறையில் நடத்தி வருகிறார். நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஆறுமுகம் திருமுகம் வீட்டிற்கு வந்து திருமுகத்துடன் சில நகைச்சுவை கதைகள் கேட்டு ஆனந்தமடைவார். ஆறுமுகமும் தனது கடையில் நடந்த சுவையான சம்பவங்களைக் கூறி எல்லோரையும் மகிழ வைப்பார். ஆறுமுகம் வந்தாலே, வெங்கலக் கடையில் ஆனை புகுந்தது போன்றது தான் என்று திருமுகம் கூறுவார். அப்படியொரு சிரிப்பொலி அவர் வந்தால் வீட்டில் கேட்கும்.

திருமுகம் அன்று முக்கியமான, துரிதமாக தர வேண்டிய ஒரு ஓவியம் முடிப்பதில் முனைந்திருந்தார். அன்று இரண்டு உதவியாளர்கள் விடுமுறையில் சென்றதால் சாப்பிடாமல் கூட மும்மரமாக வரைவதில் திருமுகம் இருந்தார். அவர் எதிர் பார்த்தபடி ஓவியம் அமைந்ததும் தான் சற்று ஆயாசமாக மூச்சு விட்டார். வரைந்த படத்தை வாங்க வந்தவர்கள் அசந்து போய் திருமுகத்தை பாராட்டு மழையில் மட்டுமல்ல, பண மழையிலும் நனைய வைத்தார்கள். அவர்கள் படம் எடுத்துக் கொண்டு நகர்வதற்கும், ஆறுமுகம் உள்ளே வருவதற்கும் சரியாக அமைந்தது. ஆறுமுகம் திருமுகத்தை எப்போதும் அய்யா என்றே அழைப்பார். அய்யா நீங்கள் தற்போது வரைந்த ஓவியத்தைப் புகைப்படம் எடுத்தீர்களா, நான் பார்க்க ஆவலாக உள்ளேன் என்றார். திருமுருகன் சிரித்துக் கொண்டே எடுத்தாச்சு நாளை பார்க்கலாம் என்றார். ஆறுமுகம் இதற்குப் பின் அய்யா இது என்ன புது பை தொங்குகிறது என்றார். திருமுகம் சிரித்துக் கொண்டே வந்தவர்கள் தந்தது என்றார். அதில் பதினைந்தாயிரம் உள்ளது என்று சிரித்துக் கொண்டே சொன்னார். அய்யா நீங்கள் எனக்கு அந்தப் பையைத் தர முடியுமா என ஆறுமுகம் கேட்க, பணத்ே தாடு வேணுமானால் எடுத்துக் கொள் என்றார். பதறிய ஆறுமுகம் வேண்டாம் வேண்டாம், பை மட்டும் தான் வேண்டும் என்றார்.

இதற்குப் பிறகு ஆறுமுகம் வரும் போது எல்லாம் திருமுருகள் ஆறுமுகா அந்தப் பை ராசியான பையாக உள்ளது. தற்போது இருபதாயிரம் பணம் உள்ளது என்றார். ஆறுமுகம் அய்யா பணம் எனக்கு வேண்டாம் பை மட்டுமே என்றார். அடுத்தடுத்த நாட்களில் ஆறுமுகம் வந்த வேளையில் எல்லாம் திருமுருகன் அங்குள்ளவர்களிடம் இந்தப் பை மீது ஆறுமுகம் ஆசைப்படுகிறார் . அவர் என்றாவது ஒரு நாள் நமக்குத் தெரியாமல் எடுத்துக் கொள்ளப் போவது போன்று தோன்றுகிறது என்றார் திருமுகம். பதறிய ஆறுமுகம் அய்யா அனுமதி இல்லாமல் நான் தொட மாட்டேன் என்றார்.

நாட்கள் நகர நகர ஆறுமுகத்துடன் திருமுருகன் வீட்டில் தொங்கிக் கொண்டிருந்த பையை இணைத்து நிறையவே பேசி நகைத்தார்கள். ஆறுமுகம் பெரும்பாலும் சிரித்து விட்டு மழுப்பினாலும். வரவ ர அந்தப் பையையும் தன்னையும் இணைத்துப் பேசுவது ஆறுமுகம் மனதில் ஒரு வன்மத்தை தோன்றச் செய்தது . அன்று வெளியூர் செல்ல பயணித்த திருமுகம் அந்தப பையை ஆறுமுகம் அப்பாவிடம் தந்து விட்டு நான் வந்ததும் வாங்கிக் கொள்கிறேன் என்றதும் ஆறுமுகம் மனதின் எண்ண ஓட்டம் மிகையானது.

ஊரிலிருந்து வந்த திருமுகம் மறக்காமல் அந்தப் பையை வாங்கி அந்த இடத்தில் மாட்டி வைத்தார். ஆறுமுகம் வந்து பார்த்து விட்டு அய்யா என்ன விளையாட்டு இது என்றார். திருமுகம் புதிராக அது யாருக்கு சேருமோ அங்கு கட்டாயம் சென்று சேரும் என்றார். ஆறுமுகம் மறக்க நினைத்தாலும் அந்தப் பை அவர் கண்முன்னேயே நின்றது. மேலும் அய்யா பையை வைத்து ஆடிய கூத்துக்களும் நினைவில் ஓடிய வண்ணமே இருந்தது.

அடுத்த சில நாட்களில் திருமுகம் உடல் நலம் குன்றி மிகவும் பலவீனமடைந்தார். நல்ல மருத்துவ சிகிச்சை மேற்கொண்டாலும் அவரது உடல் எதிர் பார்த்த அளவில் ஆரோக்கியம் அடையவில்லை. அன்று திருமுகம் உடல் நிலை மிகவும் மோசமடைந்ததை அடுத்து அவர் மருத்துவமனையில் சேர்க்கப் பட்டார். நல்ல வைத்தியம் பார்த்தும் எதிர் பார்த்த பலனில்லாமல் அவர் தனது பூவுலக வாழ்க்கையைத் துறந்தார்.

இரண்டு நாட்கள் கழித்து ஆறுமுகம் வீட்டிற்கு வந்த திருமுகம் ஆட்கள் ஆறுமுகம் அப்பாவிடம் ஒரு கடிதாசியைத் தந்தார்கள். அதில் ஆறுமுகம் விரும்பிய பை அவனிடமே வந்து சேர்ந்ததை நானறிவேன். அது அவனுக்கே உரித்தானது அதனால் அதை பத்திரமாக பாதுகாத்தேன் என்று எழுதியிருந்தது. வந்தவர்கள்ஆறுமுகம் அப்பாவிடம் கைப்பேசியில் எடுத்த படத்தைக் காட்டினார்கள். அதில் ஆறுமுகம் திருமுகத்தை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்த போது யாரும் அறியா வண்ணம் அவர் பையை எடுத்ததைக் காட்டியது. கொதித்த ஆறுமுகத்தின் அப்பாவின் கால்களில் விழுந்த ஆறுமுகம், அய்யா அவர்கள் இந்தப் பையை வைத்து அவர் செய்த விளையாட்டுக்கள் என் மனத்தில் ஒரு வன்மத்தை ஏற்படுத்தி அதை கையகப் படுத்த வேண்டுமென எண்ணத்தை ஏற்படுத்தி அது இந்த அளவில் கொண்டு போய் விட்டது என்றார். இந்தாருங்கள் அந்தப் பை என்று அழுது கொண்டே அப்பாவிடம் தந்து, இப்போதும் இந்தப் பையில் அய்யா தோன்றி உனக்குத்தான் இது என்று கூறுவதாக மாயத் தோற்றம் தெரிகிறது என்றார். வன்மத்தால் தனது மதிப்பை இழந்த ஆறுமுகம் என்ன பேசுவது என்றறியாமல் அய்யா என்னை மன்னித்து விடுங்கள் என்று கதறினார். யாரும் எதுவும் கூற முடியாமல் அனைவரும் ஆறுமுகத்தையே பார்த்துக் கொண்டிருந்தனர். வன்மத்தால் வந்த வினை தான் என ஒருவர் கூறி விட்டு ஆசைக்கும் வன்மத்திற்கும் நாம் அடிமையாகக் கூடாதென்றார்,

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *