செய்திகள்

வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 3,870 பேருக்கு கடந்த நிதியாண்டில் ரூ.47 கோடி உதவித்தொகை

மாநில கண்காணிப்புக்குழு கூட்டத்தில் ஸ்டாலின் தகவல்

சென்னை, ஏப்.12-–

‘கடந்த நிதியாண்டில் (2022–23) வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 3 ஆயிரத்து 870 பேருக்கு ரூ.47 கோடி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது’ என ஆதிதிராவிடர் நலத்துறை மாநில கண்காணிப்பு குழு கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மாநில அளவிலான உயர்நிலை விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியதாவது:-–

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுடைய வாழ்க்கை தரம் உயர தனி அக்கறை செலுத்தி திட்டங்கள் தீட்டி வருகிறோம். வன்கொடுமைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை குறைந்தபட்சம் ரூ.85 ஆயிரத்தில் இருந்து ஒரு லட்சம் ரூபாயாகவும், அதிகபட்சம் 8 லட்சத்து 25 ஆயிரம் ரூபாயில் இருந்து 12 லட்சம் ரூபாயாகவும் உயர்த்தப்பட்டது.

கடந்த நிதியாண்டில், 3 ஆயிரத்து 870 பேருக்கு 47 கோடி ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. வன்கொடுமையால் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தை சேர்ந்த 723 பேருக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம், கல்வி உதவித்தொகை, வீட்டுமனை பட்டா ஆகிய உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

தீண்டாமை கடைபிடிக்கப்படாமல் பொதுமக்கள் அனைவரும் நல்லிணக்கத்துடன் வாழும் கிராமங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அந்த கிராமங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திடும் பொருட்டு ரூ.10 லட்சம் நிதி வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் கடந்த நிதியாண்டில் 37 கிராமங்கள் பயன் அடைந்துள்ளன.

ஆதிதிராவிட மக்கள் கல்வி சார்ந்த திட்டங்களுக்காக 2 ஆயிரத்து 206 கோடியே 70 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் சென்று உயர்கல்வி பயில மாணவர்களுக்கான வருமான உச்சவரம்பு 8 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டு, திருத்தி அமைக்கப்பட்ட இந்த திட்டத்தின் கீழ் 18 மாணவர்களுக்கு 3 கோடியே 66 லட்சம் ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.

இணைப்புச்சாலைகள்,

சோலார் விளக்குகள்

கடந்த நிதியாண்டில், தாட்கோவால் செயல்படுத்தப்படும் பொருளாதார மேம்பாட்டு திட்டங்களின் மூலம் 20 ஆயிரத்து 544 பேர் மற்றும் 296 சுய உதவிக் குழுக்கள் பயனடைந்துள்ளனர். இந்த நிதியாண்டில் 68 ஆயிரத்து 225 பேர் பயனடையும் வகையில் 285 கோடியே 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான செயல்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

பழங்குடியின கிராமங்களுக்கு இணைப்புச்சாலைகள், தெரு விளக்குகள், சோலார் விளக்குகள் மற்றும் குடிநீர் வசதிகள் வழங்கும் சிறப்பு திட்டத்தின்கீழ், கடந்த ஆண்டு 135 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. வீடற்ற இருளர் உள்ளிட்ட பழங்குடியினருக்கு 4 ஆயிரத்து 324 வீடுகள் 420 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு வருகின்றன.

பழங்குடியினரின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் வகையில், விரிவான பழங்குடியினர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு 94 கோடியே 99 லட்சம் ரூபாய் செலவில் உட்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சிறப்பு கூறுகள் திட்டம் என அழைக்கப்பட்டு வந்த, ஆதிதிராவிடர் துணைத் திட்டத்தின் கீழ் இந்த நிதியாண்டில் மாநில திட்ட ஒதுக்கீடான 77 ஆயிரத்து 930 கோடி ரூபாயில், ஆதிதிராவிடர் துணைத் திட்டத்திற்காக 17 ஆயிரத்து 75 கோடி ரூபாய் மற்றும் பழங்குடியினர் துணை திட்டத்திற்காக ஆயிரத்து 595 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நீண்ட நாள் கோரிக்கை

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான துணைத்திட்டம் செவ்வனே செயல்படுத்தப்படுவதை உறுதிசெய்ய தனிச் சட்டம் ஒன்றை இயற்ற வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருகிறது. உரிய ஆலோசனைக்கு பின்னர், அடுத்த சட்டமன்ற கூட்டத் தொடரில் இதற்கான சட்டமுன்வடிவை அறிமுகப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *