சிறுகதை

வந்த வழியே சென்றது – மு.வெ.சம்பத்

சக்தி, கோவிந்தன், ஆதித்தன் மூவரும் ஒரே வகுப்பில் படிப்பவர்கள். இவர்கள் வாரம் ஒரு முறை ஏதாவது ஒரு உணவு விடுதிக்குச் செல்வார்கள்.

சக்திக்கு தினமும் நடந்த நிகழ்வுகளை இரவில் ஒரு புத்தகத்தில் எழுதும் பழக்கம் கொண்டவர். புத்தகத்தில் பக்கத்தை இரு பகுதிகளாகப் பிரித்து ஒன்றில் தான் செய்த நல்லதையும் மற்றொன்றில் தான் செய்த தவறு மற்றும் சந்தித்த சோதனைகளையும் எழுதுவார். தான் செய்த வரவு மற்றும் செலவு கணக்குகளைத் தவறாமல் எழுதுவார்.

கல்லூரிப் படிப்பு கடைசி பரிட்சை முடிந்ததும் மூவரும் ஒரு நட்சத்திர உணவு விடுதிக்கு மிகவும் ஆசைப்பட்டு உணவருந்தச் சென்றார்கள். இருவரும் தங்களால் இயன்ற பணத்தை சக்தியிடம் தந்து அவரையே எல்லாவற்றையும் பார்த்துக் கொள்ளச் சொன்னார்கள். அன்று இரவு 7 மணிக்கு நட்சத்திர உணவு விடுதிக்கு வந்தார்கள். வாசலில் நின்றிருந்தவர்கள் வணக்கம் கூற கோவிந்தன், ஆதித்தன் இருவரும் ஒரு மிரட்சியுடன் பதில் வணக்கம் கூறி ஒரு விதமான பதைபதைப்புடன் உள்ளே நுழைந்தார்கள். அப்போது அங்கு வந்த ஒருவர் நீங்கள் திறந்தவெளிக் கூடத்திற்குச் சென்று அங்கு உங்களுக்கு வேண்டியதை தேர்வு செய்து நிதானமாக உண்ணலாம் என்றதும் மூவரும் அங்கு சென்றனர்.

சக்தி அவர் அப்பாவுடன் இங்கு வந்து பழக்கம் ஆனதால் அவரையே உணவை தேர்வு செய்யச் சொன்னார்கள் கோவிந்தனும் ஆதித்தனும். சில உணவு வகைகள் சற்று இடைவெளியில் மேஜைக்கு வந்தது. கோவிந்தன். ஆதித்தன் நன்கு ரசித்து சாப்பிட்டார்கள். பிறகு கொடுக்க வேண்டிய தொகைக்கான ரசீது வந்ததும் சக்தி பணம் கொடுத்ததும் ஆதித்தியன் இவ்வளவு தொகையா என சுற்றுப்புறத்தை மறந்து கத்த, சக்தி பேசாமலிரு என்றார். நல்ல உணவு தான் என்றாலும் யானைப் பசிக்கு சோளப் பொறி போல் இருக்கே என்று கோவிந்தன் மற்றும் ஆதித்தன் ஒரே குரலில் கூற, சக்தி அவர்கள் பகுதியில் உள்ள வழக்கமான உணவு விடுதிக்கு அவர்களை அழைத்துச் சென்று அவர்கள் வயிற்றை நிரப்பினார். மீதமுள்ள தொகையை மூவரும் பிரித்து எடுத்துக் கொண்டதும் அவரவர் வீடு நோக்கி சென்றார்கள்.

காலங்கள் உருள, சக்தி ஒரு வங்கிப் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். மற்ற இருவரும் வெளியூர் சென்று விட்டார்கள். நாளாக நாளாக தொடர்பு என்பது இவர்களிடையே அறுந்த வலை போல் ஆனது.

அன்று வங்கியில் பணி செய்து கொண்டிருக்கும் போது அங்கு உடன் வேலை பார்க்கும் நடேசன் காசாளராக தற்போது பணி புரிபவர் சக்தியிடம் வந்து தான் அவசரமாகப் போக வேண்டியுள்ளதால் மீதமுள்ள ஒரு மணி நேரத்தை நீங்கள் பொறுப்பேற்றுக் கொண்டால் நான் செல்லுவேன் என்றார்.

மேலும் தான் இக்கட்டான சூழலில் இருக்கிறேன் என்றதும் வேறு வழியின்றி சக்தி ஒத்துக் கொள்ள, நடேசன் அடுத்தடுத்து பரபரப்பாகி பணப் பெட்டியைத் திறந்து மளமளவென்று இருப்புத் தொகையைக் கூறி சரியாக உள்ளது என்று கூறி விட்டு கிளம்புகையில் தடுமாறிய நடேசன் கீழே விழுந்த பையை எடுத்துக் கொண்டு பணம் எண்ணி பாதுகாப்பு பெட்டகத்தில் சேர்க்கும் அதிகாரியிடம் நான் புறப்படலாமா, பணம் சரியாக உள்ளதெனக் கூற, அவர் சரியெனக் கூற, உடனே அதி விரைவாக நடேசன் சென்றார்.

அதன் பின் யாதொரு வரவும் செலவுமின்றி நேரங்கள் கழிய, சக்தி கணினிக்கும் தனது கையிருப்புக்கும் உள்ள பணத்தை சரி பார்க்கையில், ரூபாய் ஒரு லட்சம் அதாவது இரண்டு 500 ரூபாய் கட்டுக்கள் குறைந்து காணப்பட்டன. பதறிய சக்தி அதிகாரியிடம் கூற அவரும் வந்து சரி பார்க்கையில் குறைவு தென்பட, நடேசனை உடனே தொடர்பு கொள்கையில் அவரது கைப்பேசி தொடர்பு கொள்ளும் நிலையில் இல்லையென கூறியது.

இதற்கடுத்து எடுத்த நடவக்கையில் சக்தி தான் அந்தப் பணத்திற்கு பொறுப்பென மண்டல அலுவலகத்தில் வந்த அதிகாரி கூற வேறு வழியின்றி சக்தி தன் கணக்கிலிருந்து அந்த பணத்தைக் கட்டினார். தான் உதவி செய்யப் போய் மாட்டிக் கொண்டோமே என வருந்தினார். நடேசன் கிளம்பும் போது கீழே குனிந்து எதோ செய்தார் என்று சக்தி வங்கியின் மேலாளரிடம் கூறி உள்ளுறை மின் சுற்று தொலைகாட்சியின் மூலம் பாருங்கள் என்றதற்கு அதை அவர்கள் மேலோட்டமாக பார்த்து அந்த மாதிரிக் காட்சிகள் வரவில்லையே என்றார்கள்.

சக்தி பணம் வங்கிக்கு கட்டிய பின், அந்த அதிகாரி பணத்தை எண்ணாமல் நடேசனை அனுப்பியது தவறோ என மனதில் நினைத்தார். ஆனால் கடைசியில் பழி சக்தி மேல் விழுந்தது தான் மிச்சம்.

மேலும் மேலாளர் சக்தியிடம் ஒரு நாள் கிழே விழப்போனார் என்றீர்கள். இன்று கீழே குனிந்தார் என்கின்றீர்கள். ஏன் நிலையில்லாமல் கூறுகிறீர்கள் என்றார். நீங்கள் குருட்டுத் தனமாக அவன் மீது நம்பிக்கை வைத்தீர்கள். வங்கி மேலாளர் என்ற பதவியில் உள்ள என்னிடம் கலந்து கொண்டீர்களா , இல்லையே எனக் கூற, சக்தி இவரிடம் பேசுவதால் எந்த ஒரு தீர்வும் கிடைக்கப் போவதில்லை என்று எண்ணி அந்த அறையிலிருந்து வெளியே வந்தார்.

சக்தி இதையெல்லாம் அப்பாவிடம் கூற, அவர் தனது மகனின் நேர்மையில் நம்பிக்கை வைத்து நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்தார். இந்த வழக்கு புதிதாக வந்த நீதிபதி அவர்கள் வசம் விசாரணைக்கு வந்தது. நீதிபதி அவர்கள் வாதியைக் கண்டதும் ஒரு கணம் அதிர்ச்சியடைந்து பல நினைவுகள் அவர் கண் முன் நிழலாடியது.

வழக்கு விசாரணையின் போது வங்கி சார்ந்த வக்கீலிடம் நீதிபதி கேட்டார்.

சக்தி நிரந்தர காசாளர் கிடையாது. உதவி செய்யவே வந்தார். பணம் சரியாக உள்ளதா என்று சரி பார்ப்பதில் அங்குள்ள அதிகாரி மற்றும் மேலாளருக்கு பொறுப்பில்லையா, எப்படி அவர்கள் நடேசனை அனுமதித்ததார்கள். அவசரமாக நடேசன் சென்றதன் காரணம் என்ன, அவரிடம் ஏதும் எழுத்துப் பூர்வமாக அவர் செல்லும் காரணம் பற்றி கடிதம் வங்கி வாங்கியதா என்று கேட்டார். எப்படி ஒருவர் மட்டும் காணாத பணத்திற்கு பொறுப்பாவார் என்று கூறி விட்டு, சக்தியை நோக்கி நீதிபதி அவர்கள் நீங்கள் அன்று நடந்ததை எழுத்து மூலம் தரமுடியுமா என்றதும் சக்தி நான் தினமும் இரவில் நடந்ததை எழுதும் வழக்கமுடையவன். அதை வேண்டுமானால் காண்பிக்கிறேன். மேலும் மூடிய மின் சுற்று தொலைகாட்சியின் மூலம் பாருங்கள். அவர் குனிந்து எதையோ எடுத்தார் என்று கூற நீதிபதி அவர்கள் வங்கி வக்கீலிடம் அந்த காட்சிகளை எங்களது ஆட்கள் பார்க்க ஆவண செய்யுங்கள் என்றார்.

மேலும் அடுத்த விசாரணையின் போது நடேசன் நீதிமன்றத்தில் நேர் முகமாக வர வேண்டுமெனக் கூறி, இரண்டு நாட்கள் வழக்கை ஒத்திப் போட்டார்.

அன்று வழக்கு தொடங்கியதும் ,நடேசன் அங்கு நேரில் விசாரணைக்கு ஆட்படுத்தப் பட்டிருந்தார். நீதிபதியிடம் அவர் கேட்ட மூடிய மின் சுற்று தொலைகாட்சியின் படங்கள் மற்றும் சக்தி தந்த பேப்பர் எல்லாம் சமர்ப்பித்தார்கள். நீதிபதி உடனே நடேசனை விசாரணை செய்யலாம் என்றார். சக்தி வக்கீல் கேட்ட கேள்விகளுக்கு மழுப்பலாகவே பதில் சொன்ன நடேசன் ஒரு கட்டத்தில் சமாளிக்க முடியாமல் நான்தான் அந்த பணத்தை எடுத்தேன். பையில் வைக்கும் போது கீழே விழுந்ததை எடுத்ததை யாரும் காணா வண்ணம் நான் அதை கறுப்புப் பை கொண்டு மறைத்து எடுத்தேன். சக்தி ஒரு நிரபராதி. எனக்கு உதவி செய்யவே வந்தார் என்றார் நடேசன். இந்தாருங்கள் ரூபாய் ஒரு லட்சம் என நடேசன் நீட்ட சக்தி வக்கீல் உங்களுக்கு என்ன அவசரத் தேவை. கையாடல் செய்யும் அளவுக்கு என்றதும் நடேசன் நான் பணம் வாங்கியவர் அன்று மாலைக்குள் தரா விட்டால் உனது வாழ்க்கையை பாழ் பண்ணி விடுவேன் என்று மிரட்டியது தான் காரணம்.

சரி இப்போது எப்படி வந்தது இந்தப் பணம் என்றதும் எனது மனைவிக்குத் தெரியாமல் அவர் நகையை விற்று கொணர்ந்த பணம் இந்தாருங்கள், விற்றதற்கான அத்தாட்சி என்று கூற நீதிபதி வங்கி வக்கீலிடம் வங்கி மேலதிகாரி மற்றும் பணத்தை சரி பார்த்து வைக்கும் அதிகாரிகளின் பொறுப்பட்ட தன்மையை சாடி விட்டு சக்தி நிரபராதி என்றும் நடேசன் தான் குற்றவாளி என்று கூறி விட்டு, வங்கி சக்தி மேல் எடுத்த நடவடிக்கைகைை ரத்து செய்து அவர் பணி செய்ய அனுமதிக்க வேண்டும் மற்றும் அவர் வராத நாட்கள் பணி நாட்களாக கொள்ள வேண்டும் என்று கூறினார்.

நேர்மையானவர்கள் என்றும் தண்டிக்கப்படக்கூடாது , நடேசன் மீது வங்கி நடலடிக்கை மேற்கொள்ளலாம் என்று தீர்ப்பு அளித்தார்.

துன்பத்திலிருந்து மீண்ட சக்தி வெளியே வரும் பொழுது நீதிபதி உதவியாளர் வந்து தங்களை நீதிபதி அழைத்து வரச் சொன்னார் என்றார்.

சக்தி தயக்கத்துடன் அவர் அறையில் நுழைய, நீதிபதி நான் தான் கோவிந்தன் என்று கூற, நன்றாகவே மாறியிருந்த கோவிந்தனை நோக்கி சக்தி மகிழ்வுடன் கை கூப்ப, உன்னைக் கண்டதும் நீ இரவில் எழுதும் புத்தகம் நினைவில் வந்தது. அதனால் அதைக் கேட்டேன். நீ தவறு செய்திருக்க மாட்டாய் என்ற எண்ணம் இன்று நிரூபணமாகி உள்ளது என்றார்.

சரி ஒரு நாள் உங்கள் வீட்டிற்கு வருகிறேன் பேசுவோம் என்று கூறி வெளியே செல்ல

நேர்மைக்கு என்றும் அழிவில்லை. நம்பிக்கை தான் வாழ்வின் ஊன்றுகோல் என்று சக்தி கூறார்.

அவர் அப்பா வந்த பழி வந்த வழியே சென்றது நல்ல காலம் என்று கூறி சக்தியை அணைத்துக் கொள்ளும் வேலையில் அங்கு வந்த வக்கீல் நீங்கள் வங்கியில் கட்டிய பணத்தைத் திருப்பித் தருமாறும் நீதிபதி தீர்ப்பில் கூறியுள்ளார் என்றார் . அந்த பணத்தைக் கொடுத்துவிப்போக வந்தோம் என் சொல்லி அதைக்கொடுத்தனர்.

சக்தி அப்பா அது நான் உழைச்ச பணமாச்சே என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *