போபால், பிப். 07–
வந்தே பாரத் விரைவு ரெயிலில் கொடுக்கப்பட்ட உணவில் கரப்பான் பூச்சி இறந்து கிடந்ததாக பயணி ஒருவர் அளித்த புகாருக்கு ஐஆர்சிடிசி மன்னிப்பு கேட்டுள்ளது.
மத்தியபிரதேசத்தைச் சேர்ந்த சுபேந்து கேசரி என்பவர் கடந்த 1 ஆம் தேதி ராணி கமலாபதி ரயில் நிலையத்திலிருந்து, ஜபல்பூருக்கு வந்தே பாரத் ரயிலில் பயணித்துள்ளார். அப்போது ரெயிலில் அவருக்கு வழங்கப்பட்ட உணவில் கரப்பான் பூச்சி இறந்து கடந்துள்ளது. உணவில் கரப்பான் பூச்சி கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த கேசரி, ஜபல்பூரில் இறங்கியவுடன் அங்கிருந்த மேற்கு மத்திய ரயில்வேயில் இதுகுறித்து புகார் ஒன்றையும் அளித்துள்ளார்.
மன்னிப்பு கேட்ட ஐஆர்சிடிசி
இதையடுத்து 2 நாட்களுக்கு பிறகு இச்சம்பவம் குறித்து தனது எக்ஸ் தளத்திலும் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார்.
‘நான் பிபரவரி 1 ந்தேதி ரயில் எண். 20173ல் ராணி கமலாபதி ரயில் நிலையத்திலிருந்து, ஜபல்பூருக்கு வந்தே பாரத் ரயிலில் சென்றேன். அப்போது எனக்கு ரயில்வே சார்பில் வழங்கப்பட்ட உணவில் கரப்பான் பூச்சி இறந்து கிடந்தது. அந்த கரப்பான் பூச்சியை பார்த்து நான் அதிர்ச்சியடைந்தேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் புகார் அளித்த கடிதத்தின் படத்தையும் அதில் காட்டியிருந்தார். மேலும் புகாரின் சாட்சியாக அவருடன் பயணித்த சக பயணியின் பெயரையும் அதில் குறிப்பிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து, இந்த பதிவு அதிகமாக பகிரப்பட்டு வந்த நிலையில், ஐஆர்சிடிசி டாக்டர் கேசரியிடம் மன்னிப்பு கேட்டுள்ளது.
ஐயா உங்களுடைய இந்த மோசமான அனுபவத்திற்கு நாங்கள் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு, சம்பந்தப்பட்ட உணவு விநியோகருக்கு அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், குறிப்பிட்ட பகுதிகளுக்கு கண்காணிப்பு கேமராக்களும் பொறுத்தப்பட்டுள்ளன என ஐஆர்சிடிசி பதிலளித்துள்ளது.
தொடர்ந்து 3ஆம் தேதி பகிரப்பட்ட இந்த பதிவு 40,000 பார்வையாளர்களை கடந்துள்ளது. பலர் இதற்கு கண்டனங்களையும், தங்கள் கருத்துகளையும் தெரிவித்துள்ளனர்.