சிறுகதை

வந்தது ஞானம் – ராஜா செல்லமுத்து

வெளுத்து வாங்கும் மழையில் நண்பன் வீட்டிற்கு சென்ற ரமேஷ் வெளியே வர முடியாமல் தவித்தான்.

எப்படி வீட்டுக்குச் செல்வது? என்று எத்தனித்த போது அவன் எப்போதும் ஓலா, ஊபரில் டூவீலர் தான் போட்டுச் செல்வான்.

அன்று மழை பெய்ததால் டூவீலர் எதுவும் வரவில்லை. அரை மணி நேரத்திற்கு மேலாக இருசக்கர வாகனத்தைப் போட்டு போட்டு நொந்து போனவன் கடைசியில் ஆட்டோவிற்கு மாறினான்.

மழை கொஞ்சம் வெறித்திருந்ததால் ஆட்டோ வருவதற்கு இன்னும் ஐந்து நிமிடங்கள் இருக்கிறது என்று காட்டியது.

நண்பனிடம் பேசிவிட்டு வீட்டை விட்டு வெளியேறினான். ரமேஷ். செல்பாேனைப் பார்த்த பாேது அந்த ஆட்டோ ஓட்டுனர் பெயர் கைலாசம் என்ற பெயர் காட்டியது.

. கைலாசம் நல்ல பெயராக இருக்கிறதே என்று நினைத்துக் கொண்ட ரமேஷ் ,அஞ்சு, நாலு மூணு, ரெண்டு, ஒன்று என்று நிமிடங்கள் குறைந்து ரமேஷ் நிற்கும் இடத்திற்கு வந்து நின்றது ஆட்டாே.

நெற்றியில் திருநீறு, காதில் கடுக்கன், கழுத்தில் ஸ்படிக மாலை என்று வித்தியாசமான ஒரு தோரணையில் ஒருவர் ஓட்டுனராக வந்தார் .

ஓட்டுநரின் போஸைப் பார்த்த ரமேஷுக்கு இவர்தான் கைலாசம் என்று பார்க்காமலே தோன்றியது.

சார் OTP நம்பர் சொல்லுங்க என்றார் அந்த ஓட்டுனர் .6782 என்றான் ரமேஷ்.

OTP எண்ணைக் குறித்துக் கொண்ட ஓட்டுநர் முழுவதும் மூடப்பட்டிருந்த ஆட்டோவில் துணிகளை மேலே எடுத்துப் போட்டான்.

என்ன சார் .ஏன் இப்படி மூடி வச்சிருக்கீங்க? என்றபோது

இல்ல சார் மழைக்காக என்று அந்த ஓட்டுநர் சாெல்ல

உங்க பேரு தான் கைலாசமா ? என்று ரமேஷ் கேட்ட போது

ஆமா சார் என் பேர்தான் கைலாசம் என்று சொன்னபடியே ஆட்டோவை ஓட்டினார்.

பலத்த மழை நின்றாலும் வெறித்த மழையில் சிறு சிறு தூறல்கள் விழுந்து கொண்ட தான் இருந்தது.

கைலாசம் நல்ல பேருங்க. இயக்குநர் பாலசந்தராேட மகன் பெயர் கைலாசம் தெரியுமா ? என்று ரமேஷ் கேட்க

தெரியாது சார் .நான் கேள்விப்பட்டிருக்கேன் என்றார் ஆட்டோ ஓட்டுநர்.

சார் காலையில ஒரு சவாரி போனேன். அவங்களுக்கு 87 ரூபாய் காட்டுச்சு. ஆனா மூன்று ரூபாய் அதிகமா கொடுக்கலாம் சார் . ஆனா அவங்க குடுக்கல. அதே 87 மட்டும் தான் குடுத்தாங்க.

அவங்கள பாக்க ஐடி கம்பெனில வேலை பார்க்கிறது மாதிரி தெரிஞ்சுச்சு.

87 ரூபாய்க்கு கரெக்டா 87 ரூபாய் சில்லறை எடுத்து கொடுத்தாங்க பாருங்க. அப்படி நான் யாரையும் பாத்ததில்ல.

நான் அதிகமாக கேக்கலை அவங்களும் குடுக்கல. நான் மனசுக்குள்ள நினைச்சுகிட்டேன். இந்த மாதிரி ஆளுங்க எல்லாம் நம்மள மாதிரி ஏழைகளுக்கு கொடுக்க மாட்டாங்க. ஆஸ்பத்திரிக்காரனுக்குக் தான் அதிகமா செலவழிப்பாங்கன்னு நான் புரிஞ்சுகிட்டேன் சார் .

என்ன மனுசங்க சார் இவங்க. நான் ஏழை தான் சார். ஆட்டோ ஓட்டி தான் சாப்பிடுறேன். ஆனா வாரத்துக்கு ஒருமுறை என் கையால சமைச்சு இல்லாதவங்களுக்கு சாப்பாடு கொடுக்கிறேன் சார் என்று கைலாசம் சொன்னபோது

ரமேஷுக்கு தூக்கி வாரிப் போட்டது. என்ன சொல்றீங்க? என்றான் ரமேஷ்.

ஆமா சார் , ஆரம்பத்துல வெளியில தான் நான் சாப்பாடு வாங்கி கொடுத்துக்கிட்டு இருந்தேன். அதுக்கப்புறம் எனக்கு ஒரு ஆசை ஏன் நம்ம கையால சமைச்சு கொடுக்கக் கூடாதுன்று. அதுக்கப்புறம் என் கையாலே வாரத்துக்கு ஒரு முறை சமைச்சு கோயில், மசூதி, சர்ச் இங்க இருக்கவங்களுக்கு கொடுக்க மாட்டேன் சார் .

தனியா யாரும் இல்லாம இருக்காங்களோ? யார்யாரோ கைவிடப்பட்ட நிலையில இருக்கிறாங்களாே அவங்கள தேடி போய் உதவி செய்வேன் சார். இது எனக்கு சந்தாேஷமா இருக்கு .

என்னால முடிஞ்சத அதை நான் செய்றேன். தொடர்ந்து 15 20 வருஷமா பண்ணிட்டு இருக்கேன். சேவைங்கிறது போதை மாதிரி சார் என்னால இப்ப அதை நிறுத்த முடியல .ஆனா நிறைய பணக்காரங்க கை நிறைய சம்பாதிக்கிறாங்க. மனசு இறங்கி எதுவும் செய்றது இல்லை. எத்தனையோ பெரிய மனுஷன்ங்க என் ஆட்டோவில ஏறியிருக்காங்க. இறங்கியிருக்காங்க . ஆனா யார்கிட்டயும் நல்ல எண்ணம் இல்லை சார். அதுதான் வருத்தமா இருக்கு .

ஏன் இந்த மனுஷன்ங்க இப்படி இருக்காங்க. சம்பாதிச்சு, சம்பாதிச்சு என்ன பண்ண போறாங்க? எல்லா மனுஷங்களும் மரணத்தை நோக்கித் தான போயிட்டு இருக்காங்க. இத யாரு நினைக்கிறது இல்ல சார்.

நாம சம்பாதிக்கிறதுல கொஞ்சமாவது அடுத்தவங்களுக்கு உதவி செய்யணும்ன்ற மனப்பான்மை ஏன் வர மாட்டேங்குதுன்னு தெரியல? ஆனா என் உசுரு இருக்கிற வரைக்கும் நான் இந்த உதவிய செய்வேன் சார் இப்ப 10, 15 பேருக்கு கொடுக்கிறேன். இன்னும் கொஞ்ச நாள்ல 50 பேரா ஆக்குவேன். நூறு பேர் ஆக்குவேன். அதை 500 , ஆயிரம் ஆக்குவேன். இப்படி சேவை செய்யணும்னு மனசு சொல்லுது சார் .நல்லாச் சம்பாதிக்கிறவங்க இதை நினைக்க மாட்டேன்கிறாங்க என்றார் ஓட்டுநர் கைலாசம்.

ஆவேசமாகச் சொல்லிக் கொண்டே வந்தார் கைலாசம்.

ரமேஷ் இறங்க வேண்டிய இடம் வந்தது .

அதுவரையில் அவனுக்குள் அப்படி ஒரு எண்ணம் துடித்தது இல்லை.

அவனுடைய ஆட்டோ கட்டணம் 187 என்று காட்டியது . அதற்குப் பதில் 200 ரூபாயைக் கொடுத்தான், ரமேஷ்.

மீதச் சில்லறை கொடுக்கப் பாேனார் கைலாசம்.

இல்ல வேண்டாம். அத நீங்களே வச்சுக்கங்க என்று சொன்ன ரமேஷ்.

சார் நீங்க ஒரு விஷயத்தை எனக்கு சொல்லிக் கொடுத்திருக்கீங்க. நான் மனுசனா இருந்தாலும் உங்கள மாதிரி நல்லது செஞ்சது இல்ல.

நீங்க சொன்ன விஷயத்துல இருந்து நான் ஒன்ன கத்துக்கிட்டேன். உங்கள மாதிரி நானும் ஒரு வாரத்துக்கு இல்ல, ஒரு மாசத்துக்கு ஒருத்தருக்காவது உதவி செய்யணும்னு எனக்கு தோணுது சார். இத படிப்படியா உயர்த்துவேன். நல்லது செய்யணும்ன்ற எண்ணத்த எனக்குள்ள விதைச்சு இருக்கீங்க . நான் அடுத்த வாரத்தில் இருந்து முயற்சி பண்ணறேன் சார். என்னால முடிஞ்சத உதவி செஞ்சிட்டு, இந்த மனித வாழ்க்கையை சந்தோஷப்படுற அளவுக்கு வாழணும் சார்.

அதுக்கு வித்திட்டது கைலாசமாகிய நீங்க தான்னு நான் எல்லார்கிட்டயும் சொல்லுவேன் சார் நன்றி என்று கைலாசத்திற்குக் கைகொடுத்து விட்டு, ஆட்டாேவை விட்டு இறங்கி நடையைக் கட்டினார் ரமேஷ்.

அடுத்த வாரம் எப்படியாவது சிலருக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் ரமேஷுக்குள் துளிர்த்தது.


Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *