செய்திகள்

வண்ணாரப் பேட்டை – டி.எம்.எஸ். மெட்ரோ ரெயில்கள் ஓடத் துவங்கியது

சென்னை, பிப்.11-
சென்னை வண்ணாரப் பேட்டை – டி.எம்.எஸ். இடையே மெட்ரோ ரெயில்சேவையை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். தங்களின் நீண்டநாள் எதிர்பார்ப்பு நிறைவேறியதால் சென்னை மக்கள் உற்சாகமடைந்து ஆர்வமாக பயணம் செய்தனர்.
மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்வதை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால், தற்போதுள்ள பயணிகளின் எண்ணிக்கை பல ஆயிரமாக அதிகரிக்கும். 40 நிமிடங்களில் விமான நிலையம் – வண்ணாரப்பேட்டைக்கு செல்லலாம்.
மெட்ரோ ரெயில் பயண வசதியை மக்களிடம் கொண்டு செல்ல இன்று இரவு (11-ம் தேதி) வரையில் மக்கள் இலவசமாக மெட்ரோ ரயில்களில் பயணம் செய்யலாம். விமான நிலையம் – வண்ணாரப்பேட்டை, சென்ட்ரல் – கோயம்பேடு – பரங்கிமலை என மொத்தமுள்ள 45 கி.மீ தூரத்துக்கு கட்டணம் எதுவும் வசூலிக்கப்படாது. ஒவ்வொரு 10 நிமிடத்துக்கு ஒரு மெட்ரோ ரெயில் இயக்கப்படும் என்று மெட்ரோ ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னையில் மாநகரில் பெருகிவரும் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு மெட்ரோ ரெயில் திட்டத்தை செயல்படுத்த கடந்த 2007–ம் ஆண்டு முடிவு செய்யப்பட்டது. அதன்படி, சென்னை விமான நிலையம் முதல் வண்ணாரப்பேட்டை வரை முதல் வழித்தடத்திலும், சென்டிரல் முதல் பரங்கிமலை வரை 2-வது வழித்தடத்திலும் மெட்ரோ ரெயில் சேவைக்கான பணிகள் நடைபெற்று வந்தன.
அதில் பணிகள் முடிந்ததும், விமானநிலையத்தில் இருந்து தேனாம்பேட்டை (டி.எம்.எஸ்.) வரையிலும், பரங்கிமலையில் இருந்து சென்டிரல் வரையிலும் மெட்ரோ ரெயில் சேவை தொடங்கியது. மீதம் உள்ள டி.எம்.எஸ் – வண்ணாரப்பேட்டை இடையிலான பணிகள் முடிவடைந்து மெட்ரோ ரெயில் சேவை நேற்று தொடங்கப்பட்டது.
திருப்பூரை அடுத்த பெருமாநல்லூர் புதுப்பாளையம் பிரிவில் அரசு விழா நேற்று மாலை நடைபெற்றது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, கவர்னர் பன்வாரிலால் புரோகித், தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சபாநாயகர் தனபால் ஆகியோர் கலந்து கொண்டு காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தனர்.
விழாவில் புதிய திட்டங்களுக்கு பிரதமர் மோடி பொத்தானை அழுத்தி அடிக்கல் நாட்டினார். மேலும் நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார். விழா மேடையில் இருந்து, சென்னையில் மெட்ரோ ரெயில் சேவையை காணொலி காட்சி மூலமாக பச்சை கொடியசைத்து பிரதமர் தொடங்கிவைத்தார்.
சென்டிரல் ரெயில் நிலையத்தில் விழா: குதூகலம்
இதையடுத்து, சென்டிரல் மெட்ரோ ரெயில் நிலையத்தில் நடந்த விழாவில் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, தமிழக அமைச்சர்கள் ஜெயக்குமார், எம்.சி.சம்பத், டாக்டர் சரோஜா, அண்ணா தி.மு.க. எம்பிக்கள், அரசு சிறப்பு திட்டங்களின் செயலாக்க அதிகாரி சோமநாதன், ஜப்பான் தூதரகம் மற்றும் ஜெய்கா பன்னாட்டு நிதி முகமையின் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டு முதல் ரெயிலை வழியனுப்பி வைத்தனர். ரெயில் அதிகாரிகள், பணியாளர்கள் உற்சாகமாக குரல் எழுப்பி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பரஸ்பரம் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். வண்ணாரப்பேட்டையில் இருந்து விமான நிலையம் வரையில் மெட்ரோ ரெயிலில் நேற்று பயணம் செய்த பொதுமக்கள், தங்களது செல்போன் மூலம் உற்சாகமாக செல்பி எடுத்துக் கொண்டனர்.
சென்னை சென்ட்ரலில் உள்ள சுரங்க மெட்ரோ ரெயில் நிலையம் 70 ஆயிரத்து 60 சதுர அடியில், பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. ரூ.400 கோடி செலவில் பல்வேறு வசதிகள் இங்கு செய்யப்பட்டுள்ளன. இந்த ரெயில் நிலையத்தில், கோயம்பேடு, எழும்பூர் வழியாக வரும் மெட்ரோ ரெயில்கள் முதல் தளத்தில் வந்து நிற்கும். வண்ணாரப்பேட்டையில் இருந்து வரும் மெட்ரோ ரயில்கள், 2–வது தளத்துக்கு வந்து அண்ணாசாலை வழியாக விமான நிலையம் செல்கிறது. சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து பூங்கா நகர், ரிப்பன் மாளிகை, சென்ட்ரல் ரெயில் நிலையம், ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை, சென்னை மருத்துவ கல்லூரி செல்ல நுழைவாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன.
பின்னர் வண்ணாரப்பேட்டைக்கு மத்திய மந்திரி, தமிழக அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்தனர். இதையடுத்து வண்ணாரப்பேட்டையில் இருந்து டி.எம்.எஸ். வரை தொடர்ந்து மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டன. பொதுமக்களும் ஆர்வமாக மெட்ரோ ரெயிலில் பயணம் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *