செய்திகள்

வண்டலூர் உயிரியல் பூங்காவில் 33 முட்டையிட்ட நெருப்புக்கோழிகள்

வண்டலூர், செப். 14–

வண்டலூர் உயிரியல் பூங்காவில் நெருப்புக்கோழிகள் 33 முட்டைகளிட்டன.

வண்டலூர் பூங்காவில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விலங்குகள் மற்றும் பறவைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இதனால் அதிகமான பார்வையாளர்கள் வந்து செல்லும் முக்கியமான சுற்றுலா தளமாக விளங்கி வருகிறது. பூங்காவில் மொத்தம் 17 நெருப்புக்கோழிகள் உள்ளன. இதில் 2 ஆண், 5 பெண் நெருப்புக்கோழிகள் ஆகும். மேலும் 10 நெருப்புக்கோழிகள் இன்னும் வளரவேண்டி உள்ளதால் அவற்றின் இனம் இன்னும் அறியப்படாமல் உள்ளது.

இந்தநிலையில் தற்போது பூங்காவில் உள்ள நெருப்புக்கோழிகள் மொத்தம் 33 முட்டையிட்டுள்ளது. அதனை நெருப்புகோழிகள் குஞ்சு பொரிப்பதற்காக அடைகாத்து வருகின்றன. பொதுவாக நெருப்புக்கோழிகளின் முட்டையில் இருந்து குஞ்சு வெளியே வர சுமார் 42 நாட்கள் ஆகும். அதிக அளவில் முட்டைகள் இருந்தாலும் அதில் 6 அல்லது 8 முட்டைகளில் இருந்து மட்டுமே நெருப்புக்கோழி குஞ்சு பொரிக்கும் என்று கூறப்படுகிறது. மீதமுள்ளவை வீணாகிவிடும் என்று பூங்கா ஊழியர்கள் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து நெருப்புகோழியின் முட்டை மற்றும் நெருப்புகோழிகளின் செயல்பாடுகளை பூங்கா ஊழியர்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

இயக்குநர் மணிகண்ட பிரபு

இதுகுறித்து வண்டலூர் பூங்கா உதவி இயக்குனர் மணிகண்டபிரபு கூறியதாவது:

நெருப்புகோழிகளின் இனப்பெருக்கத்திற்கு சென்னையில் உள்ள தட்பவெப்ப நிலையே முக்கிய காரணம். சென்னையில் ஆண்டின் பெரும்பகுதி நிலவும் வறண்ட தட்பவெப்ப நிலைகள் இவற்றிற்கு மிகவும் ஏற்றது. நெருப்புக்கோழி பராமரிப்புகள் அதிகம் உள்ள ஒரு பறவை. இவை ஈரப்பதத்தை விரும்பாது. இதற்கு நல்ல காய்ந்த மணல் பரப்பைக் கொண்டு இருக்க வேண்டும். இயற்கையாக இனப்பெருக்கம் செய்ய தனித்துவமான சூழல் மற்றும் குறிப்பிட்ட பராமரிப்பு நடைமுறைகள் தேவை. நெருப்புகோழிகள் பறக்க முடியாத பறவை என்பதால் அவை சுதந்திரமாக ஓடுவதற்கு போதுமான இடம் தேவை. தற்போது மழையும் குளிருமாய் இருப்பதால் அதன் முட்டைகள் பொரிக்க தாமதம் ஆகிறது. எனவே அதற்கான வெப்பம் குறையாத வகையில் முட்டைகளை பாதுகாத்து வருகிறோம் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *