செய்திகள்

வணிகவரி, பத்திரப்பதிவுத் துறைகள் வருவாய் இலக்கை கடந்து சாதனை

தமிழ்நாடு அரசு தகவல்

சென்னை, மார்ச் 26–

வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறையில் இதுவரை இல்லாத அளவு வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசின் 2021-22 ஆம் ஆண்டுக்கான திருத்திய வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளில் வணிகவரி வருவாய் இலக்காக ரூ.96,109.66 கோடி நிர்ணயிக்கப்பட்டது. கடந்த 15.03.2022 அன்று இந்த இலக்கை வணிகவரித்துறை கடந்து, 24.3.2022 தேதிவரை வணிகவரித்துறையில் ரூ.1,00,346.01 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.

இலக்கை கடந்து சாதனை

அதுபோன்று பதிவுத்துறையில் 2021-22 ஆம் ஆண்டு திருத்திய வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளின்படி நிர்ணயிக்கப்பட்ட இலக்கு ரூ.13,252.67 கோடியாகும். இந்த இலக்கை பதிவுத்துறை 23.03.2022 அன்று கடந்து, 24.3.2022 ஆம் தேதி வரை பதிவுத்துறையில் ரூ. 13,406.51 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.

அந்த வகையில் நடப்பு நிதியாண்டுக்கான நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை வணிகவரி மற்றும் பதிவுத் துறை ஆகிய இரு துறைகளும் கடந்து சாதனை புரிந்துள்ளது என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.