சென்னை, ஜூலை 9–-
தமிழ்நாடு வணிகர் நல வாரியத்துக்கு உறுப்பினர்கள் நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழக வணிக வரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் ஜோதி நிர்மலாசாமி வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது:-–
தமிழ்நாடு வணிகர் நல வாரியத்தை மாற்றி அமைத்து அரசு உத்தரவிடுகிறது. அதன்படி அதன் தலைவராக முதலமைச்சரும், துணை தலைவராக வணிக வரித்துறை அமைச்சரும் இருப்பார்கள்.
அலுவல் சார்ந்த உறுப்பினராக வணிக வரி மற்றும் பதிவுத்துறை செயலாளர், வணிக வரி கமிஷனர், நிதித்துறை முதன்மை செயலாளர் உள்பட 5 பேர் இருப்பார்கள். தற்போது வணிக வகைகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்து உள்ளதால் அனைத்து பிரிவுகளுக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில், அலுவல் சாரா உறுப்பினர்களின் எண்ணிக்கையை 20-–ல் இருந்து 30 ஆக உயர்த்தி அரசு நியமனம் செய்கிறது.
சென்னையை சேர்ந்த வி.பி.மணி, எ.எம்.சதக்கத்துல்லா, ஆர்.ஆர்.ஜெயராம் மார்த்தாண்டன், மதுரையை சேர்ந்த எஸ்.ரத்தினவேலு, தூத்துக்குடி ரெங்கநாதன், திருச்சி எம்.கண்ணன் உள்பட 30 அலுவல் சாரா உறுப்பினர்களை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிடுகிறது. இவர்களின் பதவிக்காலம் 2 ஆண்டுகள் நீடிக்கும். மற்றவர்கள் 3 ஆண்டுகள் செயல்படுவார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.