நாடும் நடப்பும்

வணிகர் குடும்ப நலன் காக்க ஸ்டாலின் திட்டங்கள்


ஆர். முத்துக்குமார்


ஆன்லைன் வர்த்தகமும், டிஜிட்டல் பண பரிமாற்றமும் நமது வாழ்வியலில் பெரும் மாற்றத்தை கொண்டு வந்துள்ளதை பார்க்கும் போது விரைவில் சிறு, குறு வியாபாரிகள் நிலை எப்படி இருக்குமோ? என்ற கேள்வி எழுகிறது.

2005ம் காலக்கட்டத்தில் பெரிய வணிகர்கள் அதாவது சூப்பர் மார்க்கெட் துவக்குவதை எதிர்த்தது நினைவுக்கு வருகிறது.

ஆனால் நகரின் முக்கிய பகுதிகளில் எல்லா பொருட்களும் கிடைக்கும் ஷாப்பிங் கடைகள் வந்துவிட்ட நிலையில் சிறு, குறு வியாபாரிகள் இன்றும் வியாபாரம் செய்து கொண்டுதான் இருப்பதைக் காண முடிகிறது. ஆனால் பூக்காரர்கள், பிளாட்பாரக் காய் – கனி விற்பவர்கள் எல்லாம் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு மாறிவிட்டனர்!

ஆனால் மளிகைப் பொருட்கள் மட்டும் விற்கும் மளிகை கடைக்காரர் அடுத்த தலைமுறை வரை தாக்குப் பிடிப்பார்களா? என்ற அச்சக் கேள்வி எழத்தான் செய்கிறது. குறைந்தது ரூ.20,000 முதல் ரூ.50,000 வரை வாடகை செலுத்தி வர்த்தகம் புரிபவர்கள் எதிர்நோக்குவது எந்த பெரிய கட்டுமான முதலீடு இன்றி கணினி சேவை முகவர்களின் வர்த்தக போட்டி வியாபாரத்தை எப்படி சமாளிப்பார்கள்?

சொந்தக் கட்டிடத்தில் வியாபாரம் செய்பவர்கள் இன்றைய கட்டத்தில் சமாளித்து விடலாம், ஆனால் அடுத்த தலைமுறை இந்த வர்த்தக முறையைத் தொடர இதில் ஈடுபாடு காட்டுவார்களா?

இப்படிப் பல எதிர்கால சிக்கல்களை எதிர்நோக்கும் வர்த்தகர்கள் ஆண்டுக்கு ஆண்டு மே முதல் வாரத்தில் வணிகர் தினத்தையொட்டி மாநாடு நடத்தி வருவது வாடிக்கையாகி விட்டது.

இம்முறை 39 வது மாநாட்டில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று பல்வேறு நலத் திட்டங்களை அறிவித்து இருந்தார்.

இம்முறை மாநாட்டு மாநிலத் தலைவர் ஏ.எம். விக்கிரமராஜா தலைமையில் நடைபெற்றது. அந்நிகழ்வில் பேசிய முதல்வர் ஸ்டாலின், வணிகர்களுக்கு உதவி என்ற புதிய பிரிவை காவல்துறை செயலியில் அறிமுகப்படுத்த இருப்பதாக உறுதி தந்துள்ளார்.

அதில் வணிகர்களுக்கு யாராவது தொல்லை கொடுத்தால் எளிதில் காவல்துறைக்கு புகார் கொடுத்து விடலாம் என்று கூறி இருந்தார்.

அமேசான், பிளிப்கார்ட், டாட்டா நியோ போன்ற பல செயலிகள் உணவு டெலிவரி முதல் வீட்டு உபயோகப் பொருட்கள் வரை வீட்டு வாசலில் தந்து கொண்டிருக்கும் காலக்கட்டத்தில் வணிகர்களின் துயரை பதிவு செய்யவும், அவசர உதவிக்கு அழைக்கவும் செயலியை உருவாக்கிட உத்தரவு பிறப்பித்து இருப்பது வரவேற்கப்பட வேண்டிய ஒன்று தான்.

மேலும் ஸ்டாலின் தந்திருக்கும் உறுதி வணிகர் நல வாரியத்தை மேம்படுத்தும் வகையில் வணிகர்களிலிருந்து புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்படுவர். வாரிய உறுப்பினர் இறந்தால் குடும்ப நல இழப்பீடு நிதி ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.3 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும். தீ விபத்துகளால் பாதிக்கப்படும் வணிகர்களுக்கு வழங்கப்படும் உடனடி இழப்பீடு ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.20 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். உள்ளாட்சி அமைப்புகளில் கடைகள், வணிக இடங்களில் நிலவி வரும் வாடகை உள்ளிட்ட பிரச்சனைகளை தீர்ப்பதற்கான வழிமுறைகளை வகுக்க நகராட்சி துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தலைமையில் வழிகாட்டுக் குழு அமைக்கப்படும்.

ஆண்டுதோறும் வணிக நிறுவனங்களின் உரிமம் புதுப்பிக்கப்படும் நடைமுறை, 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

பாலங்கள் கட்டுவது உள்ளிட்ட பல்வேறு பணிகளால் கடைகளை இழக்கும் வணிகர்களுக்கு அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக வாடகைக்கு கடைகள் வழங்க முன்னுரிமை வழங்கப்படும்.

பெரிய நிறுவனங்கள் மட்டுமின்றி சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களும் வளர்ச்சி அடைவது தான் பொருளாதார வளர்ச்சி. பெரிய தொழில்கள் செழிக்கும்போது சிறிய தொழில்கள் வளரும். சிறு தொழில்கள் காலப்போக்கில் பெரு நிறுவனங்கள் ஆகும். எனவே ஒன்றுக்கொன்று எதிரானது அல்ல. ஒன்றின் வளர்ச்சியில் மற்றொன்றுக்கும் பங்கு உண்டு என்ற எண்ணத்துடன் வணிகர்கள் தங்கள் தொழிலில் முனைப்புடன் ஈடுபட வேண்டும். தொழில் முதலீடுகளை வரவேற்கும் அதே நேரத்தில் வணிகர்களின் நலன் நிச்சயம் பாதுகாக்கப்படும் என்று ஸ்டாலின் உறுதி தந்துள்ளார்.

உலக வர்த்தக முறைகள் மாறி வருகிறது. எந்த முதலீடும் செய்யாமல், உடல் உழைப்பையும், அறிவுத் திறனையும் மட்டுமே முதலீடு செய்து அயராது உழைக்கும் பலர் மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனமாக உயர்ந்து வரும் நிலையில் சிறு, நடுத்தர வியாபாரிகளும் நவீன டிஜிட்டல் உலகில் தங்களுக்கென ஒர் வர்த்தகத்தை பெறத்தான் செய்வார்கள். ஆனால் கொரோனா பெரும் தொற்றும், உலக வர்த்தக முடக்கத்தின் காரணமாகவும் வியாபாரம் தடை பெற்றுள்ள நிலையில் வியாபாரிகளுக்கு உதவிட பல திட்டங்களை அறிவித்திருக்கும் முதல்வர் ஸ்டாலினை தமிழகம் பாராட்டுகிறது.

Leave a Reply

Your email address will not be published.