நியூயார்க், மே 4–
சாதாரண பயனர்களுக்கு டுவிட்டர் இலவசமாகவும், வர்த்தக ரீதியாக பயன்படுத்துவோர், அரசாங்கம் சார்ந்தோருக்கு சிறிய அளவில் கட்டணம் வசூலிக்கப்படலாம் என்றும் டெஸ்லா தலைமைச் செயல் அதிகாரி எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
எலான் மஸ்க் 44 பில்லியன் டாலர் விலை கொடுத்து டுவிட்டர் நிறுவனத்தை வாங்கியுள்ளார். இதையடுத்து, நாள்தோறும் பல்வேறு அறிவிப்புகளை எலான் மஸ்க் வெளியிட்டு வருகிறார்.
மக்களுக்கு இலவசம்
இந்நிலையில், அண்மையில் அவர் பதிவிட்ட டுவிட்டர் பதிவில், டுவிட்டர் சாதாரண பயனர்களுக்கு எப்போதும் இலவசமாகத்தான் இருக்கும். ஆனால், வர்த்தக ரீதியாக அல்லது அரசாங்கம் சார்ந்து டுவிட்டரைப் பயன்படுத்துவோருக்கு சிறிய அளவில் கட்டணம் வசூலிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
கடந்த மாதத்தில் இருந்தே டுவிட்டர் தளத்தில் அதிரடி மாற்றங்கள் கொண்டு வரப்படும் என்று எலான் மஸ்க் தெரிவித்துவந்தார். எடிட் பட்டன், அனைவருக்கும் வெரிஃபிகேஷன், ஓப்பன் அல்காரிதம் என்று பல மாற்றங்கள் குறித்து தொடர்ந்து பேசி வருகிறார். டுவிட்டர் ப்ளூ பிரீயம் சந்தா சேவைக் கட்டணத்தைக் குறைப்பது குறித்தும் பேசியிருந்தார்.
கடந்த வாரம் நடைபெற்ற மெட் காலே நிகழ்ச்சியில் பேசிய எலான் மஸ்க், டுவிட்டர் பதிவுகள் எப்படி புரோமோட் மற்றும் டிபுரோமோட் செய்யப்படுகின்றன என்ற மென்பொருள் குரித்து பொதுவெளியில் விமர்சனத்துக்கு விட வேண்டும் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.