சியோல், நவ.4–
வட கொரியா நேற்று நடத்திய ஏவுகணை சோதனை தோல்வியில் முடிந்ததாக தென் கொரியா தெரிவித்துள்ளது.
வட கொரியத் தலைநகர் பியோங்கியாங்கின் சுனான் பகுதியிலிருந்து நேற்று காலை 7.40 மணியளவில் கிழக்கு கடல் பகுதியிலிருந்து நீண்ட தூரம் சென்று தாக்கும் பாலிஸ்டிக் ஏவுகணையை வடகொரியா பரிசோதனை செய்தது. அதன்பிறகு, குறுகிய கால இடைவெளியில் அந்த நாடு குறுகிய இலக்குகளை சென்று தாக்கும் 2 ஏவுகணைகளையும் சோதனை செய்துள்ளது. இந்த இரு ஏவுகணைகளையும் தெற்கு பியோங்கன் மாகாணம் கெய்சான் பகுதியிலிருந்து காலை 8.39 மணி அளவில் ஏவி அந்த நாடு சோதனை செய்தது. இதன் காரணமாக வடக்கு ஜப்பான் மற்றும் தென்கொரியாவில் இருக்கும் மக்களை பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.
மேலும் வட கொரியாவின் சோதனைகளை அமெரிக்கா கடுமையாக விமர்சித்தது. இதுகுறித்து அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், “வட கொரியாவின் ஏவுகணை சோதனை சட்டவிரோதமானது மற்றும் பொறுப்பற்ற தன்மை கொண்டது. அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளி நாடுகளுக்கு எதிரான அணு ஆயுத சோதனைகளுக்கு நிச்சயம் கடுமையான விளைவு உண்டு” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
நேற்றைய ஏவுகணை சோதனை குறித்து தென் கொரிய ராணுவம் தரப்பில், “வட கொரியா நேற்று நடத்திய ஏவுகணை சோதனை தோல்வி அடைந்தது” என்று தெரிவித்துள்ளது.