செய்திகள்

வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம்: தமிழக அரசுக்கு சமரச சுத்த சன்மார்க்க சங்கம் நன்றி

சென்னை, ஜூலை 19–

வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்ததைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் பி.கே. சேகர்பாபு ஆகியோருக்கு சமரச சுத்த சன்மார்க்க சங்கம் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

வடலூரில் வள்ளல் பெருமானின் பெயரில் சர்வதேச மையம் அமைக்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பு உலகெங்குமுள்ள சன்மார்க்க அன்பர்கள் இடமும் தமிழ் மக்களிடமும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. சர்வதேச மையம் வள்ளல் பெருமான் அருளிய சன்மார்க்கத்தை போலவும் கொண்டுசெல்லும் என்பதில் ஐயமேதுமில்லை.

பசிப்பிணி போக்கிய வள்ளலார் பெருமானின் பெயரில் அமைய உள்ள இந்த சர்வதேச மையத்திற்கு ஹலோ ஒத்துழைப்பை நல்க உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இயங்கிவரும் சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஆய்விருக்கை, வடலூர் தலைமைச் சங்கம், தமிழகம் மற்றும் இந்தியாவில் உள்ள சன்மார்க்க சங்கங்கள், அமெரிக்கா, இங்கிலாந்து, மலேசியா, சிங்கப்பூர், நைஜீரியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் உள்ள சன்மார்க்க சங்கங்கள் கூட்டமைப்புகள் அனைத்தும் இணைந்து வள்ளலார் சர்வதேச மையத்திற்கு தேவையான பொருள் உதவியை வழங்க முடிவு செய்துள்ளனர். மேலும் பல்வேறு நாடுகளில் உள்ள தமிழ் அமைப்புகளிடம் நிதியினை திரட்டித் தரவும் ஏற்பாடு செய்து வருகின்றன. அரசு காட்டும் வழிமுறைகளைப் பின்பற்றி இந்த சர்வதேச மையமும் அதைச் சார்ந்த பணிகளையும் முழு ஈடுபாட்டோடு செய்வதற்கு சன்மார்க்க அன்பர்கள் அனைவரும் மகிழ்ச்சியோடு காத்திருக்கின்றனர்.

முதலமைச்சருக்கு நன்றி

உலகின் மிகப்பெரிய புரட்சியாளர்களில் ஒருவரான வள்ளல் பெருமானின் பெயரில் அமைய உள்ள இந்த சர்வதேச மையம் தமிழின் பெருமையையும், தமிழரின் பெருமையும் , சன்மார்க்கக் கொள்கைகளை உலகம் கொண்டு செல்லவும் இந்த சர்வதேச மையம் உறுதுணையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை

இந்த மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்டு அதை செயல்படுத்த நடவடிக்கை எடுத்து வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், மிகச் சிறந்த முறையில் அதை செயல்படுத்தி வரும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவுக்கும் இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

அதன் ஒரு பகுதியாக தமிழக அரசு அறிவித்துள்ள வள்ளலார் சர்வதேச மையத்திற்கு நன்றி தெரிவிக்கவும், சர்வதேச மையத்திற்கான பொருள் உதவி உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் செய்து தரவும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இயங்கிவரும் சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஆய்விருக்கை சார்பாக அதன் பொறுப்பாளரும் எஸ்.எஸ்.எம் கல்லூரி தமிழ்த்துறைத் தலைவருமான பா மஞ்சுளா, ஒருங்கிணைப்பாளர் நா. சங்கரராமன், செயற்குழு உறுப்பினர்கள் இந்திரஜித், சந்திரசேகர், விக்னேஷ், ஞானசம்பந்தம், அமெரிக்க வாழ் சன்மார்க்க சங்கத்தை சார்ந்த முருகேசன் ஆகியோர் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவை சந்தித்து வாழ்த்துக்களையும் , வள்ளலார் பல்கலைக்கழகம் அமைய வேண்டி விண்ணப்பத்தையும் வழங்கினார். தலைமைச் சங்க பொதுச்செயலாளர் வெற்றிவேல் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து அரசின் துணையோடு பல சர்வதேச மையத்திற்கான பணிகளில் பங்கு பெறவும் அதற்கான திட்டங்களை அரசின் அனுமதியோடு மேற்கொள்ளவும் உறுதி அளித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *