தலைமைச் செயலாளரை சந்தித்த பீகார் குழுவினர் பேட்டி
சென்னை, மார்ச் 8–-
தமிழகத்தில் தங்கி வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு இருந்த பயம் நீங்கிவிட்டதாக தலைமைச் செயலாளரை சந்தித்த பிறகு பீகார் குழுவினர் தெரிவித்தனர்.
தமிழகத்தில் பீகார் உள்ளிட்ட வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக போலி வீடியோ மற்றும் தகவல்கள் பரப்பப்பட்டன. இதுபற்றி விசாரிக்க பீகார் மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களில் இருந்து கடந்த 4-ந் தேதி சென்னைக்கு அதிகாரிகள் குழு வந்தது.
பீகாரில் இருந்து அந்த மாநிலத்தின் ஊரக வளர்ச்சித்துறை செயலாளரும், ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான பாலமுருகன் தலைமையில் உளவுத்துறை ஐ.ஜி. கண்ணன், தொழிலாளர் ஆணையர் அலோக்குமார், போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ்குமார் வந்தனர். அவர்கள் கோவை, திருப்பூர் உள்ளிட்ட சில மாவட்டங்களுக்கு சென்று பீகார் மாநில தொழிலாளர்களை நேரில் சந்தித்து விசாரித்து கருத்துகளை பெற்றனர்.
இறுதியாக நேற்று சென்னைக்கு வந்து சில இடங்களில் தங்கி வசிக்கும் பீகார் தொழிலாளர்களை சந்தித்து விசாரித்தறிந்தனர்.
தமிழக அரசுக்கு நன்றி
அதன் பின்னர் சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் இறையன்புவை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
இந்த கூட்டத்தில் உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பணீந்திர ரெட்டி, வருவாய் நிர்வாக ஆணையர் எஸ்.கே.பிரபாகர், வருவாய்த்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் குமார் ஜெயந்த், பொதுத்துறை செயலாளர் ஜெகநாதன் ஆகியோர் உடன் இருந்தனர்.
பின்னர் பீகார் ஐ.ஏ.எஸ். அதிகாரி பாலமுருகன் நிருபர்களிடம் கூறியதாவது:-– திருப்பூர், கோவை மாவட்டங்களில் பல்வேறு சங்கங்களின் பிரதிநிதிகளை சந்தித்தோம். பீகார் தொழிலாளர்களை குழுவாகவும், தனித்தனியாகவும் சந்தித்து பேசி கருத்துகளை கேட்டறிந்தோம். அவர்களுக்கு செல்போனில் பீகார் தொழிலாளர்கள் பற்றி என்னென்ன தகவல்கள் வந்தன? இந்த பிரச்சினையில் அவர்கள் என்ன நினைக்கிறார்கள்? அவர்களுக்கு உண்மையிலேயே பிரச்சினைகள் உள்ளனவா? இப்படி அவர்கள் எந்த சம்பவத்தையும் எதிர்கொண்டனரா? என்றெல்லாம் கேட்டோம். அவர்களின் அனுமதியுடன் அவர்களின் செல்போனை ஆய்வு செய்தோம்.
40 ஆயிரம் தொழிலாளர்களை
அழைத்து கூட்டம்
போலி வீடியோ வெளியான பிறகு எவ்வளவு சீக்கிரமாய் தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது என்பது பற்றி தமிழக அரசு எங்களுக்கு விளக்கம் அளித்துள்ளது. நேரடியாக சென்று பார்த்தபோதே அது தெரிந்தது. திருப்பூரில் 40 ஆயிரம் தொழிலாளர்களை அழைத்து கூட்டம் நடத்தி அவர்களுக்கு தமிழக வருவாய் மற்றும் போலீஸ் அதிகாரிகள் நம்பிக்கை வரச்செய்துள்ளனர்.
புலம்பெயர் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு தர தமிழ்நாடு அரசு எடுத்துள்ள நடவடிக்கை திருப்திகரமாக உள்ளது. எங்கள் குழு சார்பாகவும் பிகார் அரசு சார்பாகவும் தமிழ்நாடு அரசுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்
போலி வீடியோக்களை கவனித்தால் ஒன்று (கொலை சம்பவம்) ஜோத்பூரிலும், மற்றொன்று ஐதராபாத்திலும் நடந்துள்ளன என்பது தெரிந்தது. கோவையில் ஒரு சம்பவம் நடந்திருந்தாலும், அது பீகார் மாநிலத்தவர் சம்பந்தப்பட்டதல்ல. உள்ளூர் மக்களுக்கு இடையே நடந்த சம்பவம் அது. இவற்றுடன் பீகார் தொழிலாளர்களை இணைத்து வந்த தகவல்கள் அனைத்தும் போலி என்பதை அவர்கள் புரிந்துகொண்டனர். ஒரு கட்டத்தில் அவர்களிடையே பீதி பரவினாலும் தமிழக அரசு எடுத்த நடவடிக்கையால் அது தணிந்தது. தமிழக ஊடகங்களின் செய்திகளும் பீகாரில் இருக்கும் இங்குள்ள அம்மாநில தொழிலாளர்களின் உறவினர்களின் பயத்தை போக்கியது.
இந்த பிரச்சினையில் தமிழகம் முழுவதும் என்னென்ன நடவடிக்கை களை அரசு மேற்கொண்டது? என்பதற்கான அறிக்கையை தலைமைச் செயலாளர் எங்களிடம் கொடுத்துள்ளார். அதில், பீகார் தொழிலாளர்களின் பீதியை போக்குவதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் விவரமும் உள்ளது.
பீகார் தொழிலாளர்களிடம் தனிப்பட்ட முறையில் உங்களுக்கு ஏதாவது சம்பவம் நடந்துள்ளதா என்று நாங்கள் கேட்டபோது, ஒருவருக்கு கூட பிரச்சினை ஏற்பட்டதாக குற்றம்சாட்டவில்லை. 4 மாதங்களுக்கு முன்பு தமிழகத்திற்கு வந்தவர்களும் சரி, 30 ஆண்டுகளுக்கு முன்பே வந்தவர்களும் சரி, தனிப்பட்ட அளவில் அவர்களுக்கு அதுபோன்ற பிரச்சினை வந்ததாக கூறவில்லை. வீடியோக்களை பார்த்தபோது அவர்களுக்கு சற்று பயம் ஏற்பட்டது உண்மைதான். ஆனால் அவர்களுக்கு அதுபற்றிய நம்பிக்கையை ஏற்படுத்திய பிறகு பயம் போய்விட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.