சென்னை, ஜன.6–
வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ், 6,309 கோடி ரூபாய் மதிப்பீட்டில், பள்ளிகள், மருத்துவமனைக் கட்டடங்கள், நீர்நிலைகள், பூங்காக்கள், விளையாட்டுத் திடல்கள், பேருந்து முனையங்கள் போன்ற 252 பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இன்று சட்டசபையில் சபாநாயகர் அப்பாவு வாசித்த கவர்னர் உரையில் கூறப்பட்டிருப்பதாவது:–
தமிழ்நாடு புத்தொழில் இயக்க நிதியம், ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கான புத்தொழில் நிதி மற்றும் தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்கக் கொள்கை போன்ற மாநில அரசின் திட்டங்களின் மூலம், நாட்டிலேயே அதிக எண்ணிக்கையிலான புத்தொழில்கள் தொடங்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு உருவெடுத்துள்ளது.
பல்வேறு துறைகளில் அமைப்புசாரா தொழிலாளர்களின் நலனை மேம்படுத்த அரசு சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. தமிழ்நாடு அரசின் சீரிய நடவடிக்கைகளின் மூலம், 18 அமைப்புசாரா
தொழிலாளர் நலவாரியங்களில் 2.85 லட்சம் தொழிலாளர்கள் புதிதாகச் சேர்க்கப்பட்டு, மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை சுமார் 46 லட்சமாக உயர்ந்துள்ளது. இந்த நிதியாண்டில் மட்டும் பல்வேறு நலத்திட்டங்கள் வாயிலாக அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியத்தின் 6.88 லட்சம் பயனாளிகளுக்கு 576 கோடி ரூபாய் உதவித்தொகையாக வழங்கப்பட்டுள்ளது. அரசின் இத்தகைய நடவடிக்கைகள், தமிழ்நாட்டின் அனைத்து தொழிலாளர்களின் நலன் மற்றும் முன்னேற்றத்திற்கு உந்துசக்தியாக அமைந்துள்ளன.
நாட்டிலேயே அதிக அளவில் தமிழ்நாடு நகரமயமாகிய நிலையில், கலைஞர் நகர்ப்புர மேம்பாட்டுத் திட்டம்,
சிங்காரச் சென்னை 2.0, நகர்ப்புர சாலை மேம்பாட்டுத் திட்டம், கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம் போன்ற
திட்டங்களின் மூலம் வேகமாக வளர்ந்து வரும் நகர்ப்புரங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல், குடியிருப்புகளுக்கான கட்டமைப்பு மற்றும் சேவைகளை வழங்குதலை அரசு திறம்பட மேற்கொண்டு வருகிறது.
பெருங்குடியில் 96 ஏக்கர் மீட்பு
நகர்ப்புர சுற்றுச்சுழலை மேம்படுத்தி மற்ற மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் வகையில், தமிழ்நாட்டிலுள்ள 18 மாநகராட்சிகள் மற்றும் 93 நகராட்சிகளில் உயிரி-அகழ்ந்தெடுத்தல் திட்டங்களை மாநில அரசு தொடங்கியுள்ளது. இதன் மூலம் பல ஆண்டுகளாகக் குவிந்துள்ள பழைய கழிவுகள் அகற்றப்பட்டு, அப்பகுதிகள் பூங்காக்களாகவும், பசுமைப் பகுதிகளாகவும் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த முறையில், சென்னை. பெருங்குடி குப்பைக் கிடங்கில் குப்பைகளைத் தரம் பிரித்து அகற்றும் செயல்முறை மூலம் 96 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டுள்ளது.
நெடுஞ்சாலைகள் ஆணையம்
தமிழ்நாட்டில் அரசு – -தனியார் பங்களிப்பின் மூலம் சாலைக் கட்டமைப்பு மேம்பாட்டில் கணிசமான
முதலீடுகளை ஈர்க்கவும், உலகத் தரம் வாய்ந்த சாலைக் கட்டமைப்புத் திட்டங்களை தலைசிறந்த மேலாண்மை நடைமுறைகளைக் கொண்டு செயல்படுத்தவும், தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலைகள் ஆணையத்தை அரசு உருவாக்கியுள்ளது. அரசின் இத்தகைய முயற்சிகள், மாநிலம் முழுவதும் பாதுகாப்பான மற்றும் விரைவான போக்குவரத்திற்கு உதவும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.