சென்னை, மார்ச் 25–
வடசென்னை தொகுதிக்கு ஒரே நேரத்தில் அண்ணா தி.மு.க., தி.மு.க. வேட்பாளர்கள் வந்ததால் யார் முதலில் வேட்பு மனு தாக்கல் செய்வது என்பது குறித்து தி.மு.க. – அண்ணா தி.மு.க. இடையே தேர்தல் அதிகாரி முன்னிலையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. வடசென்னை தொகுதியில் தி.மு.க. சார்பில் கலாநிதி வீராசாமி, அண்ணா தி.மு.க. சார்பில் ராயபுரம் மனோ ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள வடக்கு வட்டார துணை கமிஷனர் அலுவலகத்தில் வேட்பு மனுவை தாக்கல் செய்ய கலாநிதி வீராசாமி மற்றும் ராயபுரம் மனோ ஆகியோர் இன்று வந்தனர்.
இந்த நிலையில், வேட்பு மனுவை தாக்கல் செய்ய தி.மு.க.விற்கு 2 ம் நம்பர் டோக்கனும், அண்ணா தி.மு.க.வுக்கு 7ம் நம்பர் டோக்கனும் வழங்கப்பட்டது.
இருவரும் ஒரே நேரத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்ததால் யார் முதலில் தாக்கல் செய்வது என்பது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது.
டோக்கன் வரிசைப்படி நாங்கள் தான் முதலில் வேட்புமனு தாக்கல் செய்வோம் என்று அமைச்சர் பி.கே.சேகர் பாபுவும், முதலில் நாங்கள் தான் வந்தோம் அதனால் எங்களுக்குத்தான் முதலில் வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும் என்று அண்ணா தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதிமுக வேட்பாளர் நேரடியாக வந்து டோக்கன் வாங்கியதாகவும், ஆனால் தி.மு.க. சார்பில் வேட்பாளர் அல்லாதோர் வந்து டோக்கன் வாங்கியதால், நாங்கள் தான் முதலில் வேட்பு மனுவை தாக்கல் செய்வோம் என்று ஜெயக்குமார் கூறினார். இதனால் அங்கு தி.மு.க.வினருக்கும் அண்ணா தி.மு.க.வினருக்கும் கடும் வாக்குவாதம் தேர்தல் அதிகாரி முன்னிலையில் சுமார் 1 மணி நேரம் நீட்டித்தது. அதன்பிறகே வேட்பு மனுவை தாக்கல் செய்தனர்.