சிறுகதை

வடக்கிருத்தல் – ராஜா செல்லமுத்து

ஊர் குளத்தின் அருகே ஊர் மக்கள் எல்லாம் திரண்டு நின்றார்கள். சிறுசுகள் முதல் பெருசுகள் வரை வயது வித்தியாசமின்றி அத்தனை பேரும் பொன்னுச் சாமியையே விடாமல் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

பொன்னுச்சாமி ஊர் குளத்தின் நடுவே இருந்த தீவு போன்ற மண் திட்டில் வடக்கு நோக்கி அமர்ந்த படி உண்ணா நோன்பு இருந்தார். அவரை எத்தனை பேர் கூப்பிட்டுப் பார்த்தார்கள். பொன்னுச்சாமி அந்த இடத்தை விட்டு வருவதாகத் தெரியவில்லை.

பொன்னுச்சாமி உனக்கு என்ன கிறுக்கு புடிச்சிருக்கா? ஏன் இப்படி உட்கார்ந்து இருக்க. எந்திரிச்சு வா என்று உறவுகள் எல்லாம் ஒப்பாரி வைத்து அழுதார்கள். அந்த ஓலக் குரல்கள் ஒன்று கூட பொன்னுச்சாமியின் காதில் போய் சேரவில்லை.

எதையோ வெறித்துப் பார்த்தபடி வடக்கு திசையை நோக்கி கைகள் இரண்டையும் கட்டிக் கொண்டு ஏகாந்தமாய் அமர்ந்திருந்தார் பொன்னுச்சாமி.

அவரைச் சுற்றி தீவு பாேல் தண்ணீர் நின்றது. ஒருசிலர் தண்ணீருக்குள் இறங்கி நீச்சலடித்து பொன்னுச்சாமி இருக்கும் இடத்தை அடைவதற்கு முயற்சி செய்து கொண்டிருந்தார்கள்.

ஆனால் இது எதையும் சட்டை செய்யாமல் பொன்னுச்சாமி அமர்ந்திருந்தார். காலையில் அவர் எத்தனை மணிக்கு அந்தக் குளத்தில் உள்ள மண் திட்டில் போய் அமர்ந்தார் என்பது யாருக்கும் தெரியாது.

இப்போது பொழுது நடுநிசி தொட்டு நின்றது.

நாவில் எச்சில் கூடப் படாமல் அமர்ந்திருந்தார் பொன்னுசாமி. அவரின் வைராக்கியம் எதற்கு என்பது ஒரு சிலருக்குத் தெரிந்தாலும் அதை வெளியில் சொல்ல பயப்பட்டார்கள்.

‘பொன்னுச்சாமி இவ்வளவு வைராக்கியமா வடக்கிருக்கிறதுக்காக ஏதோ ஒரு காரணம் இருக்கு’ என்று அங்கு கூடியிருந்த மக்கள் முணுமுணுத்துக் கொண்டார்கள்.

ஒரு சிலர் உண்மையைப் போட்டு உடைத்தார்கள்.

‘அப்படியா உண்மையா இது?’ என்று சொந்தங்கள் கூட வாய்பிளந்து கேட்டார்கள்.

‘பொன்னுச்சாமி மகன் சொன்னபடியே கேட்பதில்லை; அவர எதுத்து பேசுறவன். கஷ்டப்பட்டு படிக்க வச்சு அவனை நல்ல இடத்தில உயத்திப் பாக்க ஆசைப்பட்டார் பொன்னுச்சாமி. ஆனா அவன் கூட்டுக்காரன் கூட சேர்ந்துக்கிட்டு சரியாப் படிக்காம எப்பப் பார்த்தாலும் சண்டை போட்டு இவருடைய மானத்தையும் உயிரையும் வாங்குறான். எவ்வளவோ சொல்லிப் பார்த்தார் பொன்னுசாமி. ஆனா அவ கேட்கிறதா தெரியல. முன்னாடி இருக்குற அப்பான்னா மகன்களை அடித்து திருத்தி ஒரு வழிக்கு கொண்டு வந்துருவாங்க. ஆனா பொன்னுச்சாமி புள்ள மேல பாசம் வச்சவன்; அதனால தான் தன்னுடைய பிள்ளையைச் சுண்டு விரல் படாம கூட தன் உயிர விட தண்ணிக்குள்ள வடக்கிருக்கிறான்’ என்று அந்த கிராமத்து மக்கள் பேசிக் கொண்டார்கள்.

இப்போது இருக்கும் இளசுகளுக்கு வடக்கிருத்தல் என்பதெல்லாம் தெரியாததுதான். இலக்கியம், இதிகாசம் படித்தவர்கள் தமிழ் படித்தவர்களுக்கு மட்டும்தான் வடக்கிருத்தல் என்பது தெரியும்.

இது ஒரு வகையான உண்ணா நோன்பு. மானம், வெட்கம், ரோசம் இழந்த மனிதர்கள் பாேரில் விழுப்புண் பட்டவர்கள் அந்த அவமானம் தாங்க முடியாமல் வடக்கு திசை நோக்கி அமர்ந்து உணவு உண்ணாமல் பட்டினிச்சாவு இருந்து அவர்கள் உயிர் விடுவதற்குப் பெயர்தான் ‘வடக்கிருத்தல்’ என்று அந்த கிராமத்தில் இலக்கியம் படித்த ஒருவர் சொல்ல …….

அத்தனை பேரும் அந்த சொல் புதிதாக இருந்ததாகச் சொல்லி மெச்சி உச்சுக் காெட்டினர். பொன்னுச்சாமி காலையிலிருந்து வடக்கிருத்தல் ஆரம்பித்து இப்பொழுது உச்சியைக் கடந்திருந்தது. பாெழுது தண்ணீரில் நீந்திப் போன சில உறவினர்கள் பொன்னுசாமியை வடக்கிருத்தலைக் கைவிடச் சொல்லி என்னென்னமோ சொல்லிப் பார்த்தார்கள்.

ஆனால் பொன்னுச்சாமி அந்த இடத்தை விட்டு வரவே இல்லை. அப்போது தண்ணீருக்குள் மூழ்கி நீச்சல் எடுத்தபடி பொன்னுசாமியின் மகன் கருணாகரன் அழுதபடியே அப்பாவைத் தொட்டான்.

‘அப்பா நான் பண்றது தப்பு தான். இனிமேல் அப்படி செய்ய மாட்டேன். வாங்க… இதைக் கைவிட்டு வாங்க…. இல்லனா நான் செத்துருவேன்’ என்று கண்ணீர் மல்க அழுதான்.

அப்போதுதான் பொன்னுச்சாமி அசைந்து கொடுத்தார்.

‘அதான் ஒம் மகன் சாெல்லிட்டான்ல. வடக்கிருத்தல விட்டுருப்பா. வீட்டுக்கு எந்திரிச்சு வா’ என்று சொல்ல…..

சோக முகாமிட்டிருந்த பொன்னுசாமியின் முகம் இப்போது சின்னதாக சந்தோசத்திற்கு வழி விட்டது.

வடக்கிருத்தலைக் கைவிட்டு வீடு நோக்கி நடந்தார் பொன்னுச்சாமி.

அவர் பின்னே அத்தனை கெட்ட பழக்கங்களையும் உதறித் தள்ளிவிட்டு வந்தான் கருணாகரன்.

பிள்ளைங்க தப்பு பண்ணா அவங்கள அடிக்கணும், திட்டனும்னு அவசியமில்லை.

இப்படி அப்பா, அம்மா உண்ணா நோன்பு இருந்தாலே போதும். அவங்க திரிந்திடுவாங்க என்று அந்தக் கூட்டத்தில் ஒரு சிலர் பேசிக் கொண்டது, தவறு செய்யும் பிள்ளைகளுக்குத் தவறு செய்யாமல் இருப்பதற்கு தூண்டுகோலாக இருந்தது.

வடக்கிருத்தல் என்ற ஒரு புதுச் சொல்லும் அந்த உண்ணா நோன்பும் அந்தக் கிராமத்து மக்களுக்கு புதிதாகத் தெரிந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *