செய்திகள்

வடகொரியாவில் தொடரும் ஏவுகணை சோதனை: அமெரிக்கா கடும் கண்டனம்

வாஷிங்டன், மார்ச் 11–

வடகொரியா ஏவுகணை சோதனைக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. வடகொரியா கடந்த பல ஆண்டுகளாக ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. இதற்கு பல்வேறு நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில் சமீபத்தில் வடகொரியா கண்டம் விட்டும் கண்டம் பாயும் ஏவுகணை அமைப்பின் சில பகுதிகளை சோதித்து பார்த்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இது குறித்து பென்டகன் செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி கூறுகையில், வடகொரியா 2 சோதனைகளை நடத்தியுள்ளது. இதில் ஒன்று கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையாகும். எந்த ஏவுதலும் ஐ.சி.பி.எம் வரம்பு அல்லது திறனைக் காட்டவில்லை. ஆனால் இந்த சோதனைகள் எதிர்காலத்தில் முழு வீச்சில் ஒரு சோதனையை நடத்துவதற்கு முன்பு புதிய அமைப்பை மதிப்பிடுவதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த ஏவுகணை தாக்குதலை அமெரிக்கா கடுமையாக கண்டிக்கிறது. இது பல ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களை மீறிய செயலாகும் என்றார்.

வரும் காலங்களில் வடகொரியா இதுபோன்று ஏராளமான பெரிய, சிறிய அளவிலான ஏவுகணை சோதனைகள் நடத்த வாய்ப்புள்ளதாக அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.