தாழ்வான பகுதிகளில் வெள்ளப் பெறுக்கு
திருவள்ளூர், நவ. 2–
வடகிழக்கு பருவ மழையினால் திருவள்ளூர் மாவட்டம் புழல் ஏரிக்கு நீர் வரத்து தொடர்ச்சியாக உயர்ந்து வருவதைத் தொடர்ந்து 100 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. வட இலங்கை கடற்கரையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்து வருகிறது. இது வரும் நாட்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக நீர் பிடிப்பு பகுதிகளான செம்பரம்பாக்கம், புழல் உள்ளிட்ட ஏரிகள் நிரம்பி வருகின்றன. செங்குன்றத்தில் மிக கனமழையாக 13 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் காஞ்சீபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலார்ட் எச்சரிக்கையானது சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் விடுக்கப்பட்டு இருக்கிறது. விடிய விடிய கொட்டித்தீர்த்த கனமழையால் பல பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளன. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், தஞ்சை, விருதுநகர், ராமநாதபுரம், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல் ஏரிக்கு நீர்வரத்து கணிசமாக உயர்ந்துள்ளது. இதே போல செம்பரம்பாக்கம் ஏரியும் நீரின் வரத்தும் அதிகரித்துள்ளது. இதையடுத்து ஏரிகளை பொதுப்பணித்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். காஞ்சிபுரத்தில் உள்ள 381 ஏரிகளில் 24 ஏரிகளில் 100% நிரம்பி உள்ளன.
திருவள்ளூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக ஆவடியில் 16.7 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. மாவட்டம் முழுவதும் பரவலாக கனமழை பெய்துள்ளது. பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. பிரதான ஏரியான புழல் ஏரிக்கு விநாடிக்கு 2000 கனஅடி நீர் வந்து கொண்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பூண்டி அணைக்கு நீர் பிடிப்பு பகுதிகளில் 5.5 சென்டிமீட்டர் அளவிற்கு மழை பெய்ததால் வினாடிக்கு 280 கன அடியாக நீர்வரத்து உள்ளது.
முழு கொள்ளளவை எட்டிய புழல் ஏரி
சென்னையின் குடிநீர் வழங்கும் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றான திருவள்ளுர் மாவட்டம், பொன்னேரி வட்டம், புழல் ஏரியானது 20.86 சதுர கி.மீ பரப்பளவில் திருவள்ளுர் மாவட்டம், பொன்னேரி வட்டத்தில் அமைந்துள்ளது. ஏரியின் நீர்மட்ட மொத்த உயரம் 21.20 அடியாகும். இதன் முழு கொள்ளளவு 3300 மில்லியன் கன அடியாகும். இன்று காலை 6 மணி நிலவரப்படி நீர் இருப்பு 18.42 அடியாகவும் கொள்ளளவு 2692 மில்லியன் கன அடியாகவும் உள்ளது. புழல் ஏரியின் நீர்வரத்து காலை 6 நிலவரப்படி 1997 கன அடியாக உள்ளது. தற்போது வடகிழக்கு பருவ மழையினால் நீர்வரத்து தொடர்ச்சியாக உயர்வதால் புழல் ஏரியின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. ஏரியின் நீர்மட்ட உயரம் 18.42 அடியாக உள்ளது. புழல் ஏரிக்கு வடகிழக்கு பருவ மழையினால் நீர் வரத்து தொடர்ச்சியாக உயர்ந்து வருவதை தொடர்ந்து ஏரியிலிரந்து 100 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டது.
சென்னை, திருவள்ளூரில் விடாமல் பெய்து வரும் மழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. உடனுக்குடன் தண்ணீர் வெளியேற்றப்பட்டாலும் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். உபரி நீர் திறப்பு அதிகரிக்கும் பட்சத்தில் ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு உடனடியாக பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
கலெக்டர் எச்சரிக்கை
இந்நிலையில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:
அணையின் வெள்ள நீர் வழிகாட்டுதலின்படி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏரிக்கு வரும் உபரிநீரை அணையின் பாதுகாப்பு கருதி ஏரியிலிருந்து விநாடிக்கு 100 கனஅடி உபரி நீர் திறந்து விடப்படுகிறது. ஏரிக்கு வரக்கூடிய நீர்வரத்து தொடர்ந்து அதிகபடியாகும் நிலையில் கூடுதல் உபரிநீர் படிப்படியாக திறக்கப்படும் என முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படுகிறது.
எனவே, புழல் ஏரியின் மிகைநீர் வெளியேறும் வாய்க்கால் செல்லும் கிராமங்களான நாரவாரிக்குப்பம், வடகரை, கிராண்ட்லைன், புழல், வடபெரும்பாக்கம், மஞ்சம்பாக்கம், கொசப்பூர், மணலி மற்றும் சடையான்குப்பம் ஆகிய பகுதிகளில் கால்வாயின் இருபுறமும் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. மேலும் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களை உடனடியாக வெளியேற்ற சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு கலெக்டர் கூறியுள்ளார்.
செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு
இந்நிலையில் தொடர் மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து கொண்டிருக்கிறது. செம்பரம்பாக்கம் ஏரி பகுதியில் இன்று நல்ல மழை பெய்யக்கூடும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளதால் ஏரிக்கு வரும் நீரின் அளவு மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. செம்பரம்பாக்கம் ஏரியின் முழு கொள்ளளவான 24 அடியில் தற்பொழுது 20.64 அடியில் நீர் உள்ளது. தற்போது 1ஆயிரத்து 180 மில்லியன் கன அடி நீர் வரத்து உள்ளதாலும் , ஒரே நாளில் 89 மில்லியன் கன அடி நீரானது உயர்ந்துள்ளதாலும் ஏரியில் இருந்து இன்று பிற்பகல் 100 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது.
புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்படுவதால் அடையாறு ஆற்றங்கரையோரம் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.