செய்திகள்

வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை


தலையங்கம்


கடந்த ஆண்டு மே மாதத்தில் ரிசர்வ் வங்கி – வங்கி வட்டிகளை வெகுவாக குறைத்தது அல்லவா ? அதை கடந்த வாரம் 7–வது முறையாக அப்படியே மாற்றமின்றி தொடரும் என்று அறிவித்துள்ளது ரிசர்வ் வங்கி.

அதன்படி வங்கியின் வட்டி விகிதம் 4 சதவிகிதமாகவும் ரெபோ விகிதம் 3.35 சதவிகிதமாகவும் தொடரும்.

2020–ம் ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து இதுவரை வட்டி விகிதத்தில் 115 புள்ளிகள் வரை ரிசர்வ் வங்கி குறைத்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலால் ஏற்பட்ட ஊரடங்கு மற்றும் அதைத் தொடர்ந்த நடவடிக்கைகளால் ஏற்பட்ட நிதி நெருக்கடியைச் சமாளிக்க வட்டி குறைக்கப்பட்டது.

கொரோனா பரவல் 2–வது அலை காரணமாக ஏற்பட்ட பாதிப்பிலிருந்து பொருளாதார நடவடிக்கைகள் தற்போது படிப்படியாக மீண்டு வருகின்றன. பொருளாதாரத்தை மீட்க சிக்கலில் உள்ள தொழில் துறைக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாக ஆர்பிஐ கவர்னர் சுட்டிக் காட்டினார்.

நுகர்வோர் பொருள் அடிப்படையிலான பண வீக்கம் கடந்த நிதி ஆண்டில் (2020–21) 5.7 சதவிகிதமாக இருந்தது. இதுவரும் நிதி ஆண்டின் (2022–23) முதல் காலாண்டில் 5.1 சதவிகிதமாகக் குறையும் என எதிர்பார்ப்பதாகவும் அவ்விதம் கட்டுக்குள் வைப்பதற்கான நடவடிக்கைகளை ஆர்பிஐ தொடர்ந்து மேற்கொள்ளும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பொருளாதாரத்தை மீட்பதற்கு ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை மிகவும் முக்கியமானது. அத்தகைய நடவடிக்கைகளை ஆர்பிஐ தொடர்ந்து மேற்கொள்ளும் என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.

ஜூன் மாததத்துடன் முடிந்த மாதத்தில் நுகர்வோர் பொருள் அடிப்படையிலான பணவீக்கம் 6.3 சதவீதமாக உள்ளது. உணவுப் பொருள்களின் விலை கணிசமாக உயர்ந்ததும் இதற்கு முக்கியக் காரணமாகும்.

எரி பொருள் விலை மே, ஜூன் மாதங்களில் இரட்டை இலக்க அளவுக்கு உயர்ந்துள்ளது. சமையல் எரிவாயு சிலிண்டர், கெரசின், விறகு உள்ளிட்டவற்றின் விலையும் கணிசமாக உயர்ந்து காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது வங்கிகளின் வீடு, கார் கடன்கள் மீதான வட்டி ஏற்றப்படவில்லை என்பதால் வங்கிகளின் வருமானம் குறைந்துவிடுமே! ஆனால் ஸ்டேட் வங்கி உட்பட பல்வேறு வங்கிகளின் நிதிநிலை அறிக்கைகள் அதிகரித்து தான் இருக்கிறது.

அதற்கு காரணம் என்ன? மறைமுகமாக வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வரும் சேவைக்கான கட்டணம் அதிகமாகி விட்டது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *