புதுடெல்லி, டிச.4-
நாடாளுமன்ற மக்களவையில், வங்கி சட்டங்கள் திருத்த மசோதாவை சபையின் பரிசீலனைக்காக மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
அந்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. மசோதாவின்படி, ஒரு வங்கி கணக்குதாரர், தனது கணக்கில் 4 நியமனதாரர்கள் வரை சேர்த்துக்கொள்ளலாம். கூட்டுறவு வங்கிகளில் இயக்குனர்களின் பதவிக்காலம் 8 ஆண்டுகளில் இருந்து 10 ஆண்டுகளாக உயர்த்தப்படுகிறது. சட்டப்பூர்வ ஆடிட்டர்களுக்கு அளிக்க வேண்டிய ஊதியத்தை வங்கிகளே முடிவு செய்ய உரிமை அளிக்கப்படுகிறது.
மசோதா மீதான விவாதத்துக்கு பதில் அளித்த நிர்மலா சீதாராமன், வங்கித்துறையின் நிர்வாகத்தை வலுப்படுத்தவும், வாடிக்கையாளர்களின் வசதியை அதிகரிக்கவும் மசோதா பயன்படும் என்று கூறினார்.
மக்களவை கேள்வி நேரத்தில், மத்திய உள்துறை இணை மந்திரி நித்யானந்த் ராய் கூறியதாவது:-
நடப்பு நிதியாண்டில், தண்ணீர் மற்றும் வானிலைசார்ந்த பேரிடர்களால் 2 ஆயிரத்து 800-க்கு மேற்பட்டோர் பலியானார்கள். 3 லட்சத்து 47 ஆயிரம் வீடுகள் சேதம் அடைந்தன. 58 ஆயிரத்து 835 கால்நடைகள் உயிரிழந்தன. 10 லட்சத்து 23 ஆயிரம் ஹெக்டேர் விளைநிலங்கள் பாதிக்கப்பட்டன.
இவ்வாறு அவர் கூறினார்.