செய்திகள்

வங்கி கணக்கில் அதிகளவு பணப் பரிவர்த்தனை:3 இளைஞர்களிடம் அமலாக்கத் துறை விசாரணை

Makkal Kural Official

திருவள்ளூர், செப். 12–

வங்கிக் கணக்குகளில் அதிக அளவில் பணப் பரிவர்த்தனைகள் நடந்துள்ளது தொடர்பாக பள்ளிப்பட்டு அருகே இரண்டு கிராமங்களைச் சேர்ந்த 3 இளைஞர்களிடம் அமலாக்கத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே உள்ள குமாரராஜபேட்டை, மோட்டூர் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த சில இளைஞர்களின் வங்கி கணக்குகளில் அதிகளவில் பண பரிவர்த்தனைகள் நடந்திருப்பது அமலாக்கத் துறையினரின் கவனத்துக்கு வந்துள்ளது. இதையடுத்து, இன்று காலை 8.30 மணியளவில், அமலாக்கத் துறை அதிகாரிகள் 20-க்கும் மேற்பட்டோர், 5 வாகனங்களில் குமாரராஜபேட்டை, மோட்டூர் கிராமங்களுக்கு வருகை தந்தனர்.

அவர்கள், வங்கிக் கணக்குகளில் அதிக பண பரிவர்த்தனைகள் நடந்திருப்பது தொடர்பாக இரண்டு கிராமங்களைச் சேர்ந்த தமிழரசன், அரவிந்தன், பிரகாஷ் ஆகிய 3 இளைஞர்களின் வீடுகளில் சோதனை நடத்தினர். பணப் பரிவர்த்தனைகள் தொடர்பாக அந்த இளைஞர்களிடம் விசாரணையில் ஈடுபட முயன்றனர். இதற்கு அந்த இளைஞர்களின் உறவினர்களும் பொதுமக்களும் ஆட்சேபம் தெரிவித்தனர்.

இதனையடுத்து அவர்களிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் மற்றும் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதன் தொடர்ச்சியாக காலை 11 மணி முதல் அந்த 3 இளைஞர்களின் வீடுகளில் சோதனை நடத்திய அமலாக்கத் துறை அதிகாரிகள் தற்போது அந்த 3 இளைஞர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இளைஞர்கள் என்ன வேலை செய்கிறார்கள், அவர்களின் வங்கி கணக்குகளுக்கு பணம் அனுப்பியவர்கள் யார், எதற்காக அவர்கள் அனுப்பினர் என்பது உள்ளிட்ட விவரங்களை கேட்டு அமலாக்கத் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையின் முடிவில், அதிகளவில் வங்கிக் கணக்குகளில் பண பரிவர்த்தனைகள் நடந்தது தொடர்பான முழுமையான தகவல்கள் கிடைக்கும் என அமலாக்கத் துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *