செய்திகள்

வங்கி ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்றவன் கைது

பெரம்பலூர், பிப். 12–

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து, கொள்ளையடிக்க நடைபெற்ற முயற்சியைத் தடுக்க முயன்ற காவலரை, கொள்ளையன் தாக்கியதால் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது.

பெரம்பலூர் வெங்கடேசபுரத்தில் ஐடிபிஐ வங்கி கிளையின் ஏடிஎம் மையம் உள்ளது. இன்று அதிகாலை 4.15 மணியளவில், முகமூடி அணிந்து கொண்டு கொள்ளையன் ஒருவன் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்துக் கொள்ளையடிக்க முயற்சித்துள்ளான். இதைகண்ட இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர், காவல்துறைக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்தத் தகவலின் பேரில் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பெரம்பலூர் நகர காவல்நிலைய உதவிக் காவல் ஆய்வாளர் பெரியசாமி, ஊர்க் காவல்படை வீரர் கண்ணன் இருவரும் ஏடிஎம் மையத்திற்குச் சென்றனர்.

கொள்ளையன் கைது

அப்போது, கொள்ளையன் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதைத் தடுக்க முயன்ற காவலர் கண்ணனை, கொள்ளையன் தாக்கியதில் அவர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதற்கிடையே அங்குத் திரண்ட பொதுமக்கள் கொள்ளையனை மடக்கிப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் அந்த மர்ம நபர் நாமக்கல் மாவட்டம் இடையப்பட்டியைச் சேர்ந்த துரைசாமியின் மகன் தனுஷ்(வயது 27) என்பதும், பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் காவலாளியாக வேலை செய்ததும் தெரியவந்தது. தொடர்ந்து வங்கி அதிகாரிகள் கொடுத்த புகாரின் பேரில், அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொள்ளையன் தாக்கியதில் படுகாயமடைந்த காவலர் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். முன்னதாக திருச்சி அருகே சமயபுரத்தில் பஞ்சாப் நேஷனல் வங்கியில் லாக்கர்களை உடைத்து கொள்ளையர்கள் பணம், நகைகளைக் கொள்ளையடித்து சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *