செய்திகள்

வங்கி இருப்பில் நாட்டில் முதலிடத்தில் மாயாவதி கட்சி: கணக்கில் இருப்பது ரூ.670 கோடி

புதுடெல்லி, ஏப்.15–

அதிகாரப்பூர்வ அரசு ஆவணங்களின் அடிப்படையில் நாட்டிலேயே மிக அதிக அளவில் வங்கியில் இருப்பு பணம் வைத்துள்ள கட்சி மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி என தெரிய வந்துள்ளது. அதன் இருப்பு ரூ.670 கோடி.

2018 டிசம்பர் 13–ந் தேதி நிலவரப்படி கட்சிகளில் வங்கி இருப்பு நிலவரம், பகுஜன்சமாஜ் – 670 கோடி, அடுத்து சமாஜ்வாதி – 471 கோடி, 3வது இடத்தில் காங்கிரஸ் – 196 கோடி, தொடர்ந்து தெலுங்குதேசம் கட்சி – 107 கோடி, பாரதீய ஜனதா – 83 கோடி, சிபிஎம் (இ.கம்யூனிஸ்ட்) – 3 கோடி, ஆம்ஆத்மி – 3 கோடி.

பிப்ரவரி 25 ம் தேதி மாநில தேர்தல் கமிஷனிடம் பகுஜன் சமாஜ் கட்சி சமர்பித்த செலவு கணக்கு விபரத்தில், அக்கட்சிக்கு பொதுத்துறை வங்கிகளின் 8 கிளைகளில் ரூ.669 கோடி இருப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2014 லோக்சபா தேர்தலின் போது வங்கி கணக்கில் பணம் இல்லை எனவும், கையில் ரூ.95.54 லட்சம் உள்ளதாகவும் இக்கட்சி குறிப்பிட்டிருந்தது.

வங்கிக் கணக்கில் அதிகமாக ரூ.471 கோடி பணம் வைத்து 2 வது இடத்தில் சமாஜ்வாதி கட்சி உள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த ம.பி., சத்தீஸ்கர், ராஜஸ்தான், தெலுங்கானா சட்டசபை தேர்தல்களில் போட்டியிட்டதன் மூலம் இக்கட்சியின் வங்கி சேமிப்பு ரூ.11 கோடி குறைந்து விட்டதாக கூறப்படுகிறது.

2017–18ம் ஆண்டில் நடந்து முடிந்த தேர்தல்களில் அதிகபட்சம் ரூ.758 கோடி செலவிட்டிருப்பதாக பாரதீய ஜனதா தெரிவித்துள்ளது. தேர்தல்களுக்கு முன் கட்சி திரட்டி இருப்பில் வைத்திருந்த தொகை ரூ.1027 கோடி. தேர்தலில் அதிகளவு செலவிட்டு முதலிடம் பிடித்திருக்கும் கட்சி இது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *