செய்திகள்

வங்கியில் பணம் போட சென்ற பெண்: காட்டில் சடலமாக மீட்பு

பெரம்பலூர், செப்.22–

பெரம்பலூர் அருகே வங்கிக்கு பணம் போடச் சென்ற பெண், 15 நாட்களுக்கு பிறகு காட்டில் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூர் அருகே உள்ள மேட்டூர் பகுதியை சேர்ந்தவர் விஜயன். இவரது மனைவி புஷ்பா (வயது 43). இவர் கடந்த 7ம் தேதி அரும்பாவூரில் உள்ள பேங்க் ஆப் இந்தியா வங்கியில் பணம் செலுத்த 32 ஆயிரம் பணத்தை எடுத்துக் கொண்டு சென்றுள்ளார். பல மணி நேரம் ஆகியும் அவர் வீடு திரும்பவில்லை.

பதற்றமடைந்த அவரது கணவர் கிராமம் முழுவதும் தேடியுள்ளார். புஷ்பா பற்றிய தகவல்கள் கிடைக்காத நிலையில் கடந்த 9ஆம் தேதி புஷ்பாவின் தாயார் அரும்பாவூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் போலீசார் அவரை தேடும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

பணத்துக்காக கொலையா?

இந்த நிலையில் நேற்று மாலை அன்னமங்கலம் பகுதியில் உள்ள வனப்பகுதியில் ஒரு சடலம் அழுகிய நிலையில் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. உடனடியாக போலீசார் புஷ்பாவின் குடும்பத்தினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அங்கு இருந்த உடைகளை வைத்து புஷ்பா தான் என்பதை உறவினர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இதையடுத்து, அவரது உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். வங்கியில் புஷ்பா பணம் போட சென்றதை அறிந்து மர்ம நபர்கள் பணத்தை பறித்துச் சென்று விட்டு அவரை கொலை செய்தார்களா என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *