ஷேக் ஹசீனா மவுனம் கலைத்தார்
புதுடெல்லி, ஆக. 14–
வங்கதேச வன்முறையில் தியாகிகள் அவமதிக்கப்பட்டனர். எனது தந்தை ஷேக் முஜிபுர் ரஹ்மான் சிலையை சேதப்படுத்தியதற்கு நீதி வேண்டும் என முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்தார்.
வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டுக்கு எதிராக மாணவர்கள் கடந்த மாதமும், இம்மாதமும் நடத்திய போராட்டங்கள் பல இடங்களில் வன்முறைச் சம்பவங்களாக மாறியது. இதையடுத்து போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்தப் போராட்டத்தில் மாணவர்கள், காவல்துறையினர், அப்பாவி பொதுமக்கள் என 500-க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். இந்நிலையில் அந்நாட்டுப் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். அவர் இந்தியாவில் தற்போது ஒரு பாதுகாப்பான இடத்தில் இருக்கிறார். அவர் எங்கு இருக்கிறார் என்பது ரகசியமாகவே உள்ளது.
இந்நிலையில், அவருடைய மகன் சஜீப் வாசத்தின் எக்ஸ் சமூக வலைதளப் பக்கம் வாயிலாக ஷேக் ஹசீனா 3 பக்கங்கள் கொண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கை வங்க மொழியில் உள்ளது. இந்தியாவில் தஞ்சம் புகுந்த பின்னர் வங்கதேச கலவரம் பற்றி ஷேக் ஹசீனா முதன்முறையாக அந்த அறிக்கையின் வாயிலாக மவுனம் கலைத்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:–
லட்சக்கணக்கான தியாகிகளின் ரத்தத்தை போராட்டக்காரர்கள் அவமதித்தனர். நாட்டு மக்களிடம் இருந்து எனக்கு நீதி வேண்டும்.
எனவே, ஆகஸ்ட் 15ம் தேதியை வங்கதேச மக்கள் துக்க தினமாக உரிய கண்ணியத்துடனும், மரியாதையுடனும் கடைப்பிடிக்க வேண்டும். பங்கபந்து பவனில் திரண்டு வன்முறையில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துமாறு கோருகிறேன்.
பயங்கரவாதம் மற்றும் வன்முறையால் மாணவர்கள், ஆசிரியர்கள், காவலர்கள், ஊடகவியலாளர்கள் உயிரிழந்தனர். அன்புக்குரியவர்களை இழந்து வேதனையுடன் வாழ்பவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். நாட்டில் நடந்த கொலைகள் மற்றும் நாசவேலைகளுக்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடரும் வன்முறை மற்றும் உயிரிழப்புகள் கவலை அளிக்கிறது.
போராட்டக்காரர்கள் எனது வசிப்பிடத்தையும் தீக்கிரையாக்கியுள்ளனர். எனது நினைவுகளும் கூட சாம்பலாகிவிட்டது. நமக்கு விடுதலையும், அங்கீகாரமும், சுய மரியாதையும் பெற்றுத் தந்த எனது தந்தை ஷேக் முஜிபுர் ரஹ்மானுக்கு அவமரியாதை செய்துவிட்டனர். இதற்காக நாட்டு மக்களிடம் நான் நீதி கோருகிறேன். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.