செய்திகள்

வங்கதேச பொதுத் தேர்தல்: 5-வது முறையாக வெற்றி பெற்று பிரதமர் ஆகிறார் ஷேக் ஹசீனா

டாக்கா, ஜன. 8–

வங்கதேசத்தின் 12-வது பொதுத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. முதல்கட்ட முடிவுகளின்படி, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா தொடர்ந்து 5வது முறையாக வெற்றி பெற்றுள்ளார். தேர்தலில் அவரது கட்சியான அவாமி லீக் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெற்று வெற்றி பெற்றுள்ளது.

நேற்று அனைத்து இடங்களிலும் வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி மொத்தமுள்ள 300 இடங்களில் 200 இடங்களை கைப்பற்றியுள்ளது. கிட்டத்தட்ட 90 சதவீத முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் மூன்றில் இரண்டு பங்கு வெற்றியை அவாமி லீக் பெற்றுள்ளதாக அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

ஷேக் ஹசீனா கோபால்கஞ்ச்-3 தொகுதியில் தொடர்ந்து 8வது முறையாக அவர் வெற்றி பெற்றுள்ளார். 1986ல் இருந்து இத்தொகுதியில் போட்டியிட்டு வரும் அவர், இம்முறை 2,49,965 வாக்குகளைப் பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட போட்டியாளர்களில் முக்கியமானவரான பங்களாதேஷ் சுப்ரீம் கட்சியைச் சேர்ந்த எம் நிஜாம் உதின் லஷ்கர் வெறும் 469 வாக்குகள் மட்டுமே பெற்றார். இதன்மூலம் ஷேக் ஹசீனா, அந்நாட்டின் பிரதமராக 5வது முறையாக பதவி ஏற்க இருக்கிறார். அதேபோல் தொடர்ச்சியாக நான்காவது முறையாக பதவி ஏற்கவுள்ளார். இது ஒட்டுமொத்தமாக அவரது கட்சிக்கு கிடைத்த 5வது வெற்றியாகும். வங்கதேச பொதுத்தேர்தலை பிரதான எதிர்க்கட்சியான வங்கதேச தேசியவாத கட்சி புறக்கணித்துள்ளது.

ஹசீனா பதவி விலக வேண்டும் என்ற தங்களின் கோரிக்கையை நிராகரித்ததைத் தொடர்ந்து தேர்தலை புறக்கணிப்பதாக பிஎன்பி கட்சியைச் சேர்ந்த முன்னாள் பிரதமர் கலீதா ஜியா அறிவித்தார். தேர்தலுக்கு முன்பாக நாட்டில் பல்வேறு இடங்களில் வன்முறைகள் நிகழ்ந்தன. பல்வேறு இடங்களில் வாக்குச்சாவடிகள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன.

நட்பு நாடு இந்தியா

இந்தியா ஒரு நம்பகமான நட்பு நாடு, 1971-ம் ஆண்டு விடுதலைப் போரின்போது எங்களுக்கு அடைக்கலம் கொடுத்தது என்று வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார். தேர்தல் நாளில் இந்தியாவுக்கு அவர் அனுப்பிய செய்தி குறித்து அவரிடம் கேட்டபோது, “நாம் மிகவும் அதிர்ஷ்டசாலிகள். இந்தியா எங்களின் நம்பகமான நட்பு நாடு. எங்களின் விடுதலைப் போரின் போது எங்களுக்கு ஆதரவளித்தது. 1975-க்கு பின்னர் நாங்கள் எங்கள் ஒட்டுமொத்த குடும்பத்தையும் இழந்தோம். அவர்கள் எங்களுக்கு அடைக்கலம் கொடுத்தார்கள். இந்திய மக்களுக்கு எங்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள்” என்று தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *