ராணுவத்தை களமிறக்க அரசு திட்டம்
டாக்கா, ஜூலை 20–
வங்கதேசம் முழுவதும் பரவியுள்ள மாணவர்களின் கலவரத்தை ஒடுக்க, காவல்துறை தவறியுள்ள நிலையில், ஊரடங்கு மற்றும் ராணுவத்தை களமிறக்க இருப்பதாக வங்காளதேச நிர்வாகம் அறிவித்துள்ளது.
சுதந்திர போராட்ட தியாகிகளின் குடும்பங்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு கொடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அங்குள்ள மாணவர் அமைப்பினர் கடந்த ஒரு வாரமாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வங்கதேசத்தில் ஒரு வாரத்தில் மட்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் மற்றும் போலீசாருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை 105 என தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், பொது பாதுகாப்பை உறுதி செய்ய ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தவும் இராணுவத்தை நிலைநிறுத்தவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது என பிரதமரின் பத்திரிகைச் செயலர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். ஊரடங்கு உத்தரவானது உடனடியாக அமுலுக்கு கொண்டு வரப்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குற்றம்சாட்டும் மாணவர்கள்
தலைநகர் டாக்காவில் பொதுக் கூட்டங்களுக்கு மறுப்பு தெரிவித்து, போலீசார் தடை விதித்தனர். இதனால் வன்முறை சம்பவங்கள் கட்டுப்படுத்த முடியும் என போலீசார் நம்பிக்கை தெரிவித்திருந்தனர். ஆனால், தங்கள் ஆர்ப்பாட்டம் தொடரும் என்றே மாணவர் அமைப்பினர் தெரிவித்துள்ளனர். அத்துடன், பிரதமர் ஷேக் ஹசீனா உடனடியாக பதவி விலக வேண்டும் என்றும், இந்தக் கொலைகளுக்கு அரசாங்கமே பொறுப்பு என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
நேற்று ஒரே நாளில் மட்டும் 52 பேர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கையில் போலீசாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு பலியானவர்களே அதிகம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, அதிகாரத்தை நிலைநிறுத்தவும், அதிருப்தியாளர்களை அகற்றவும் அரசு நிறுவனங்களை தவறாகப் பயன்படுத்துவதாக மனித உரிமைக் குழுக்கள் ஹசீனா அரசாங்கத்தை குற்றஞ்சாட்டியுள்ளது.