டாக்கா, ஆக. 9–
வங்கதேசத்தில் அமைந்த இடைக்கால அரசில் ஷேக் ஹசீனாவின் ஆட்சியை கவிழ்க்க முக்கிய காரணமாக இருந்த, 26 வயது மட்டுமே நிரம்பிய 2 மாணவர்கள் ஆலோசகர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
பாகிஸ்தானில் இருந்து சுதந்திரம் பெற்று புதிய நாடாக கடந்த 1971 ஆம் ஆண்டில் வங்கதேசம் உருவானது. இந்த போராட்டத்தில் பங்கேற்று உயிரிழந்த தியாகிகளின் வாரிசுகளுக்கு அரசு வேலை, கல்வியில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்க அந்த நாட்டு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
மாணவர்கள் போராட்டம்
இதற்கு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்து கடந்த மாதம் முதல் தொடர்ந்து போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தின் காரணமாக கடந்த 5 ம் தேதி வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்து நம் நாட்டில் தஞ்சமடைந்துள்ளார். கடந்த 2009 முதல் 15 ஆண்டுகளாக தொடர்ந்து பிரதமராக இருந்த ஷேக் ஹசீனாவின் சாம்ராஜ்யம் ஆகஸ்ட் 15ம் தேதி முடிவுக்கு வந்தது.
இதையடுத்து இடைக்கால அரசின் தலைவராக நோபல் பரிசு பெற்ற பேராசிரியர் முகமது யூனிஸ் தேர்வு செய்யப்பட்டார். பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் மருத்துவ சிகிச்சையில் இருந்த இவர் நேற்று நாடு திரும்பினார். இதையடுத்து முகமது யூனிஸ் இடைக்கால அரசின் தலைவராக பதவியேற்றார். முகமது யூனுஸ் தலைமையிலான இந்த இடைக்கால அரசில் 16 உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்நிலையில் இந்த இடைக்கால அரசில் இடம்பெற்றுள்ள 2 மாணவர்கள் அதிக கவனம் பெற்றுள்ளனர்.
ஷேக் ஹசீனாவின் ஆட்சி கலைய காரணமான போராட்டத்தை முன்னெடுத்தவர்கள் நஹித் இஸ்லாம் மற்றும் ஆசிப் மஹ்மூத். இவர்கள் 2 பேருக்கும் வெறும் 26 வயது தான். இவர்கள் டாக்கா பல்கலைக்கழகத்தில் மாணவர்கள். தியாகிகள் இடஒதுக்கீடுக்கு எதிராக போராட்டத்தை முன்னெடுத்தவர்களிடம் இவர்கள் 2 பேரின் பங்கு மிகப்பெரியது. இதனால் தான் 2 பேரும் இடைக்கால அரசின் ஆலோசகர்களாகவும், அமைச்சர் பொறுப்பிலும் நியமனம் செய்யப்பட்டனர்.
மாணவர்கள் சித்ரவதை
இதில் நஹித் இஸ்லாம் சமூகவியல் (Sociology) பிரிவில் முதுகலை பட்டப்படிப்பை படித்து வருகிறார். அதேபோல் ஆசீப் மஹ்மூத் மொழியியல் (linguistics) பிரிவு மாணவர். இவர்கள் 2 பேரும் ஷேக் ஹசீனாவின் அடக்குமுறைக்கு ஆளாகினர். அதாவது போராட்டத்தை முன்னெடுத்த மாணவ பிரதிநிதிகள் சித்ரவதை செய்யப்பட்டனர். போராட்டத்தை தொடர்ந்து முதல் முறையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டபோது இவர்கள் 2 பேரையும் துப்பறியும் பிரிவை சேர்ந்தவர்கள் அழைத்து சென்றனர். அதன்பிறகு சித்ரவதை செய்யப்பட்டு சாலையோரத்தில் விடப்பட்டனர். இதுதொடர்பான விவகாரம் வெளியாகி பெரும் கொந்தளிப்பை மாணவர்கள் மத்தியில் உருவாக்கியது.
அதுமட்டுமின்றி அதுவரை இடஒதுக்கீட்டுக்கு எதிராக இருந்த போராட்டம் என்பது ஷேக் ஹசீனாவுக்கு எதிரான போராட்டமாக மாற இவர்கள் 2 பேரும் தான் முக்கிய காரணமாகும். தொடர்ந்து தீவிரமான போராட்டத்தை தொடர்ந்து கடந்த 5ம் தேதி ஷேக் ஹசீனா தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு நம்நாட்டில் தஞ்சமடைந்துள்ளார்.
இந்நிலையில் தான் இடைக்கால அரசின் இளம் ஆலோசகர்களாக பதவியேற்ற பிறகு நஹித் இஸ்லாம் மற்றும் ஆசீப் மஹ்மூத் கூறுகையில், ”நம் நாட்டின் இடைக்கால அரசின் இளம் ஆலோசகர்களாக சவாலை ஏற்க தயாராக இருக்கிறோம். பாசிச அரசாங்கத்தின் கீழ் அனைத்து அரசு நிறுவனங்களும் அழிந்துவிட்டன. இந்த நிறுவனங்களை சீர்திருத்துவதன் மூலம் பாசிசத்தை அகற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம் என்றனர்.