டாக்கா, ஆக. 7–
வங்கதேசத்தில் இட ஒதுக்கீடு தொடர்பாக நடந்த போராட்டம் வன்முறை கலவரமாக மாறியதில், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா பதவியை ராஜினாமா செய்துவிட்டு, இந்தியாவில் தஞ்சமடைந்தார்.
அதைத் தொடர்ந்து, இடைக்கால ஆட்சியமைக்க ராணுவம் அனைத்து கட்சிகளிடமும் கோரிக்கை முன்வைத்த நிலையில், வங்கதேசத்தின் இடைக்கால அரசின் தலைவராக நோபல் பரிசு பெற்ற முஹம்மது யூனுஸ் நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்திருக்கிறார். தற்போது வங்கதேசத்தில் அமைதி திரும்புவதாக செய்திகள் வெளிவருகின்றன.
முஹம்மது யூனுஸ்
இடைக்கால அரசுக்கு தலைமையேற்க, போராட்டத்தை முன்னெடுத்த மாணவர்களின் முதன்மைத் தேர்வாக, வறுமையை எதிர்த்துப் போராடியதற்காக ‘ஏழைகளின் வங்கியாளர்’ (banker to the poor) என்று அழைக்கப்படும் முகம்மது யூனுஸ் முன்மொழியப்பட்டார். மில்லியன் கணக்கான மக்களுக்கு வறுமையிலிருந்து விடுபட உதவும் முன்னோடி பணிக்காக, 83 வயதான முகம்மது யூனுஸுக்கு 2006-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. ஆனால், ஷேக் ஹசீனா அரசு இவர்மீது 190-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், தொலைத்தொடர்பு மற்றும் ஐசிடி முன்னாள் அமைச்சர் ஜுனைத் அஹமத் பாலக் (Zunaid Ahmed Palak), அவாமி லீக் அரசின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஹசன் மஹ்மூத் ஆகியோர் ஹஸ்ரத் ஷாஜலால் சர்வதேச விமான நிலையத்தில் விமான நிலைய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
இதற்கிடையில், வீட்டு காவலில் வைக்கப்பட்டிருந்த வங்கதேசத்தின் முதல் பெண் பிரதமரான கலிதா ஜியா, ஜனாதிபதியின் உத்தரவின் அடிப்படையில், வீட்டுக் காவலில் இருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறார்.