டாக்கா, மே 15–
வங்கதேசம்–மியான்மர் இடையே மோக்கா புயல் நேற்று கரையை கடந்த நிலையில் கடும் சேதத்தை ஏற்படுத்தி உள்ளது.
வங்க கடலில் உருவான மோக்கா புயல், வங்காளதேசம் மற்றும் மியான்மர் இடையே நேற்று கரையை கடந்தது. அப்போது மணிக்கு 200 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசியது. இதனால் வங்காளதேசத்தில் காக்ஸ் பஜார் மற்றும் சட்டோகிராம் நகரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. மேலும் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டனர்.
5 லட்சம் பேர் வெளியேற்றம்
புயல் கரையை கடந்தபோது வங்காளதேசம் மற்றும் மியான்மரின் கடலோர பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வங்காளதேசத்தின் காக்ஸ் பஜார் மற்றும் சட்டோகிராம் நகரங்களில் இருந்து சுமார் 5 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.
இதே போல் மியான்மரில் புயல், மழை, வெள்ளம் காரணமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அற்புறப்படுத்தப்பட்டுள்ளனர். புயலால் வடக்கு ராக்கைன் பகுதி முழுவதும் கடுமையான சேதத்தை சந்தித்துள்ளதாக ராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். சிட்வே நகரின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
மோக்கா புயல் காரணமாக இந்தியாவில் திரிபுரா, மிசோரம், மணிப்பூர், நாகாலாந்து மற்றும் அசாம் மாநிலங்களில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.