டாக்கா, ஏப். 8–
வங்காளதேசத்தில் இரண்டு ஆயுதக் குழுக்களிடையே நடந்த துப்பாக்கி சண்டையில் எட்டு பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வங்காளதேசத்தில் உள்ள பந்தர்பனில் இருக்கும் கம்டாங் பாரா பகுதியில் சாலை ஓரமாக பலர் பிணமாக கிடப்பதாக அந்த பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் காவல்துறையினர் அங்கு சென்று பார்த்தபோது 8 பேர் துப்பாக்கி குண்டு காயங்களுடன் பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அந்த 8 பேரின் உடல்களையும் மீட்டு உடற்கூராய்விற்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
8 பேர் பலி
மேலும் காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில், இரு தரப்பு ஆயுதக் குழுக்களிடையே உண்டான மோதல் துப்பாக்கி சண்டையில் முடிந்ததும், அதில் 8 பேர் பலியானதும் தெரியவந்துள்ளது. ஐக்கிய மக்கள் ஜனநாயக முன்னணி (ஜனநாயக) மற்றும் குகி-சின் தேசிய முன்னணியின் (KNF) இராணுவப் பிரிவான குக்கி-சின் தேசிய இராணுவம் ஆகியவை துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டதாக அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக கூடுதல் விவரங்கள் தெரியவராத நிலையில், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.