டாக்கா, ஆக. 2–
வங்கதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 10 பேர் டெங்கு காய்ச்சலுக்கு பலியாகியுள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு 261 ஆக உயர்ந்துள்ளன.
இதுதொடர்பாக வங்கதேச மருத்துவ சேவைகள் இயக்குநரகம் வெளியிட்ட தகவலில், வங்கதேசத்தில் டெங்கு பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தலைநகர் டாக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் டெங்கு காய்ச்சல் அறிகுறி காணப்பட்ட 1,131 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், மொத்தம் 4,869 பேர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வங்கதேசம் முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் மொத்தம் 9,264 பேர் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தாண்டில் டெங்கு பாதித்த 54,416 பேரில் 44,891 பேர் குணமடைந்துள்ளனர். டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தும் வகையில், பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அந்நாட்டின் அதிபர் ஷேக் அஸீனா சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.