செய்திகள் வாழ்வியல்

வங்கக் கடலில் 5 கி.மீ. தூரத்தை 2 மணியில் நீந்தித் திரும்பிய 5 வயது லோகிதா!

அச்சமில்லை, அச்சமில்லை, அச்சமென்பதில்லையே … உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும்… அச்சமில்லை, அச்சமில்லை, அச்சமென்பதில்லையே

என்ற மகாகவி பாரதியாரின் பாடல்களை சற்று மாற்றிப் பாட வேண்டும் போல் இருக்கிறது 5 வயது பிஞ்சு மழலை சிறுமி யோகிதா சராக்ஷியை கண்ணெதிரில் பார்க்கிறபோது.

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே…

பொங்கி வீசும் கடலலையில்

எதிர் நீச்சல் அடித்து கரை திரும்பும் வரை

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே…

என்று நிரூபித்திருக்கும் அவளின் சாதனையை பார்த்தபோது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை சொல்ல வேண்டும் என்ற ஒரு துடிப்பு.

லோகிதா சென்னை மயிலாப்பூர் கச்சேரி ரோட்டில் உள்ள காவலர் குடியிருப்பில் வசிக்கும் மகிமை தாஸ் தம்பதியின் மகள். 5 வயது சிறுமி, சென்னை சர்ச் பார்க் ஸ்கூலில் 2ம் வகுப்பு படித்து வருபவள்.

சென்னை மெரீனா கடற்கரையில் வங்காள விரிகுடா கடலில் ஐந்து கிலோ மீட்டர் தூரத்தை (பட்டினப்பாக்கத்திலிருந்து கண்ணகி சிலை வரை) 2 மணி நேரத்தில் எதிர் நீச்சல் அடித்து கரைக்கு திரும்பி சாதனை படைத்திருக்கிறார்.

மகிமைதாஸ் ஏழுகிணறு காவல் நிலையத்தில் 2ம் நிலை கான்ஸ்டபிளாக பணி புரிந்து வருகிறார். தாய் திவ்யா. செயின்ட்ஸ் தாமஸ் சிஎஸ்ஐ பள்ளி ஆசிரியை. இவருடைய மூத்த மகள் கீர்த்தஹாசினியும் நீச்சல் வீராங்கனை தான். இவளுக்கு 9 வயது ஆகிறது. இப்போது 5ம் வகுப்புக்கு போகிறாள். இவள் 3 வயதிலிருந்து நீச்சல் போட்டியில் பங்கேற்று பல விருதுகளை பெற்றிருக்கிறாள். இவள் காட்டிய வழியில் இப்போது தங்கையும் கடலில் நீச்சலுக்கு களம் இறங்கி சாதனை படைத்திருக்கிறாள்.

தேனியில் மாநில அளவில் நடை பெற்ற குரூப் 8 பிரிவில் பங்கேற்ற லோகிதா, பதக்கங்களையும், கேடயங்களையும் வென்றாள்.

தன்னம்பிக்கை வரும்

‘‘நானும் ஒரு நீச்சல் வீரன் தான். கடந்த ஆண்டில் (2018) இலங்கையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு டிஜிபி சைலேந்திரபாபு நீச்சல் அடித்து சாதனை படைத்தார். அவரோடு கடலில் பாதுகாப்பாக அவரைத் தொடர்ந்து நீச்சலடித்து வந்தவன் என்ற பெருமைக்குரியவன் நான் என்று அடக்கத்தோடு குறிப்பிட்டார் மகிமைதாஸ்.

* நீச்சல் பயிற்சியால் உடல் ஆரோக்கியம் காணும்.

* தன்னம்பிக்கை ஏற்படும்.

* பயம் அடியோடு போகும்

என்பதால் நடைபயின்ற காலத்திலேயே என் குழந்தைகளுக்கு நீச்சல் பயிற்சியையும் ஆரம்பித்து விட்டேன். அது அவர்களுக்கும் பிடித்துப்போகவே ஆரம்பத்தில் நீச்சல்குளத்தில் பயிற்சி கொடுத்தேன். பின் படிப்படியாக அவர்களை பல்வேறு போட்டிகளுக்கும் அனுப்பினேன். அடுத்த கட்டமாக கடலில் நீச்சல் அடிக்கும் முயற்சியையும், பயிற்சியையும் துவக்கினேன். அதில் இன்று வெற்றி பெற்றிருக்கிறேன்’ என்று மகள் லோகிதவின் சாதனையை சந்தோஷத்தோடு வெளியிட்டார் மகிமை தாஸ்.

இந்திய மண்ணுக்கு பெருமை தேடு

கடற்கரை மணல் பரப்பில் இருந்து 150 மீட்டர் தூரம் கடந்ததும், கடல் எந்தவிதக் கொந்தளிப்பும், ஆர்ப்பரிக்கும் அலையும் இல்லாமல் அமைதியாகக் காணப்படும். இந்த இடத்தில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரத்தை நீச்சலடித்து கடந்து மீண்டும் கரைக்கு திரும்பி சாதனை படைத்த லோகிதாவுக்கு ரெயில்வே போலீஸ் டிஜிபி சைலேந்திரபாபு மாலை அணிவித்து வாழ்த்து கூறினார். அதோடு இனிப்பையும் கொடுத்து ஆசி கூறினார்.

‘சபாஷ், துணிச்சல்கார சிறுமி’: மலைத்து மனம் திறந்து பாராட்டிய டிஜிபி சைலேந்திர பாபு

‘‘5 வயதில் அபார சாதனை இது’’ என்று மனம் திறந்து பாராட்டிய அவர், ‘‘அடுத்தடுத்து இது போல பல சாதனைகளை உருவாக்கி தமிழ் மண்ணுக்கும், இந்திய மண்ணுக்கும் பெருமை சேர்க்க வேண்டும்’’ என்று அன்போடு ஆசி கூறினார்.

இரண்டடி உயரம் இருந்தாலும், அசைக்க முடியாத நம்பிக்கை உயரத்தில் நின்று கொண்டிருக்கும் லோகிதா, சாதனை படைக்கும் அன்றைய தினத்தில் தன் மூத்த அக்கா கீர்த்தஹாசினியோடு மணலில் விளையாடிக்கொண்டிருந்தாள். சாதனை படைக்கும் நேரம் வந்ததும்… மணலில் விளையாடிக் கொண்டிருந்த அவளை பெற்றோர்கள் கடற்கரை மணல் பரப்பிலிருந்து அழைத்து சாதனைக்கான இடம் எங்கு ஆரம்பிக்கிறதோ அந்த இடத்திற்கு கூட்டிச் சென்றார்கள். 5 வயது லோகிதாவுக்கு சுபாவத்திலேயே பயம் என்பது துளியும் கிடையாது. நீச்சல் போட்டிக்கு தயாராகும் போது கடல் நமக்கு சாதகமாக இருக்க வேண்டுமே என்று பயந்தோம். நல்ல வேளை, நாங்கள் நினைத்தது போலவே கடலலைகள் கடுமையாக இல்லை; கொந்தளிப்பும் இல்லை; அமைதியாகவே காணப்பட்ட நிலையில் லோகிதாவை போட்டிக்கு தயார்ப்படுத்தினோம்.

கூட்டம் கூட்டமாக வரும் ஜெல்லி மீன்களால் எவ்வித ஆபத்தும் ஏற்படக் கூடாது. அவை ‘வெடுக்கென்று’ கடிப்பதாலும், வாலால் தாக்குவதாலும் எந்த ஒரு காயமும் ஏற்படக்கூடாது என்பதில் கவனமாக இருந்தோம். உடல் முழுவதும் கிரீசை தடவி அவளை கடலில் இறக்கினோம். கிரீஸ் வாசனைக்கு ஜெல்லி மீன்கள் கிட்டே நெருங்காது என்று சொன்னார் பயிற்சியாளர் இளங்கோவன்.

ஜெல்லி மீன் தாக்கி கழுத்தில் காயம்

ஓரிரு சந்தர்ப்பங்களில் இது மாதிரி பயிற்சியில் இறங்கியபோது எதிர்பாராமல் ஜெல்லி மீன்கள் தாக்கியது. இதில் லோகிதாவுக்கு நெஞ்சிலும் கழுத்திலும் சிறுசிறு காயங்கள் ஏற்பட்டு சிகிச்சைக்குப் பிறகு நலம் பெற்றாள் என்ற ஒரு தகவலையும் வெளியிட்டார்.

“நீச்சல் போட்டியில் ஏற்கனவே இருக்கும் சாதனையை முறியடிப்பது லட்சியமாக இருக்க வேண்டும் என்று அவளுக்கு ஒவ்வொரு நாளும் பயிற்சி அளித்து வருகிறோம். எதிர்காலத்தில் அவளை என்னுடைய காவல்துறை யில் ஒரு அதிகாரியாக உயர்த்திப் பார்க்க வேண்டும் என்பதே எங்களின் கனவு ” என்று பெருமிதத்தோடு குறிப்பிட்டார் தந்தை.

கடலில் லோகிதா நீந்தும் போது அதற்குரிய பாதுகாப்பு கவச ஆடைகளை அணிந்து தான் நீந்துவாள்; 3 பயிற்சி பெற்ற நீச்சல் வீரர்கள் அவள் பின்னால் நீந்தி செல்வார்கள். சிறுமியின் சாதனையைப் படம் பிடிப்பதற்காக வீடியோ புகைப்படக் கலைஞர் ஒருவர் கட்டுமரத்தில் பயணிப்பார்.

பொழுதுபோக்க பீச்சுக்கு பெற்றோருடன் வரும் குழந்தைகள், சிறுவர் – சிறுமிகள் கணுக்கால் அளவு தண்ணீரில் இருக்கும்போது ஓங்கி வீசி வரும் அலையைக் கண்டாலே பயந்து நடுங்கும் பெற்றோர்களுக்கு மத்தியில்.. கடல் அலையில் எதிர்நீச்சல் போட்டு சாதனை படைக்க தன்னுடைய பிஞ்சு மகளை செயற்படுத்தும் பெற்றோர்கள் சபாஷ், இவர்கள் மற்றவர்களிடம் இருந்து விதிவிலக்கு.

தந்தையின் நீச்சல் ரத்தம் மகள்களுக்கும் உடம்பில் ஓடியிருக்கிறது. அதன் காரணமாக அவர்கள் அந்த பிஞ்சு வயதில் பங்கேற்கும் போட்டிகளில் வெற்றி மேல் வெற்றி குவித்து வருகிறார்கள். எதிர்காலத்தில் தமிழக நீச்சல் வீராங்கனை, இந்தியாவின் நீச்சல் வீராங்கனை, அடுத்து சர்வதேச நீச்சல் வீராங்கனையாக சரித்திரம் படைக்க வேண்டும் என்ற லட்சியத்தில் லோகிதா, அக்கா கீர்த்தனாவை உருவாக்கி வருகிறார்கள் பெற்றோர்கள்.

பகலவனுக்கு அடியில் எல்லாமே சாத்தியம் என்பதை தாரகமந்திரமாக கொண்டு செயல்பட்டு வரும் மகிமை தம்பதிகளின் கனவுகள் நனவாகும், வாழ்த்துக்கள்!

* * * 

ஐந்து வயது லோகிதா. இன்னும் மழலைப் பேச்சு போகவில்லை சன்னமான குரல்

முன்பின் தெரியாதவராக அதிகம் பழக்கம் இல்லாதவராக இருந்தால் யாருக்குமே கூச்சம் இருக்கும். அதே கூச்சம் அவளிடமும்.

பேரு என்னம்மா…

லோ … ஹி … தா!

என்ன படிக்கிற?

செகண்ட் கிளாஸ்!

எங்க படிக்கிற?

சர்ச் பார்க் ஸ்கூல்!

என்ன வயசாறது…?

அஞ்சு !

தண்ணின்னா பயப்படுவியா ?

மாட்டேன் … மாட்டேன் !

தண்ணின்னா ஜாலியா?

ஆமா குஷி !

யாரு கூட ‘ஸ்விம்மிங்குக்கு’ போவ?

அக்கா கூட, அப்பா கூட!

ட்ரெய்னிங் யார் குடுப்பா?

இளங்கோ அங்கிள் !

தினமும் குடுப்பாரா…!

ஆமாம்

அம்மா பயபடுவாங்களா?

மாட்டாங்க!

டீச்சர் என்ன சொல்லுவாங்க?

சந்தோஷமா பாராட்டுவாங்க !

ஸ்கூலுக்கு ரெகுலராப் போவியா?

ஆமாம்

ஸ்விம்மிங் ட்ரெயினிங்க்…?

அதுக்கும் தான் !

பிரைஸ் வாங்குறப்போ எப்படி இருக்கும்?

ஜாலியா இருக்கும் !

உனக்கு என்ன புடிக்கும்?

எல்லாமே புடிக்கும்.

மேலே மேலே பேர் அவார்டு வாங்குவியா?

வாங்கணும்…

வாங்குவேன் !

அந்த நம்பிக்கை, அந்த சிரிப்போடு லோகிதாவைப் பார்த்தபோது எதிர்காலத்தில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் இந்த அலைமகள் என்பதை அடித்து சொல்லலாம் என்ற உணர்வு மனசுக்குள் அலையடித்தது!

அச்சமில்லை, அச்சமில்லை, அச்சமென்பதில்லையே … உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும்… அச்சமில்லை, அச்சமில்லை, அச்சமென்பதில்லையே

என்ற மகாகவி பாரதியாரின் பாடல்களை சற்று மாற்றிப் பாட வேண்டும் போல் இருக்கிறது 5 வயது பிஞ்சு மழலை சிறுமி யோகிதா சராக்ஷியை கண்ணெதிரில் பார்க்கிறபோது.

– வீ. ராம்ஜீ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *