எத்தனை எத்தனை கனவுகளைச் சேமித்து வைத்த இடம் . எத்தனை எத்தனை லட்சியங்கள் உருவான இடம். எதுவுமில்லாத இதயத்திற்குள் உலகத்தையே உள்ளடக்கிய இடம். சிறகுகள் இல்லாமலேயே வானத்தில் வட்டமடிக்க வைத்த இடம். ஞானமற்ற மூளையில் அறிவைப் போதித்த இடம். கோயில் கருவறையை விட உயர்ந்தது ஒவ்வொரு பள்ளியிலும் இருக்கும் வகுப்பறை.
வழக்கமாக அன்றும் மாணவர்களோடு இயங்கிக் கொண்டிருந்தது தேனி மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் உள்ள ஓர் அரசுப் பள்ளி.சீருடைகள் அணிந்த மாணவ பட்டாம்பூச்சிகள் காலை எட்டரைக்கு மணிக்கெல்லாம் பிரேயர் நடக்கும் இடத்திற்கு வந்து விடுவார்கள்.
” காலையில் எழுந்திரு …பல் துலக்கு…தேய்த்துக் குளி…தூய்மையாக இரு…உண்மையைப் பேசு …தாய் சொல் தட்டாதே…தந்தை சொல் கேள்…நல்லர்களுடன் பழகு… எல்லோரும் படிப்போம்…ஒன்றாகப் படிப்போம்…நன்றாக படிப்போம்” என்று ஒரு மாணவன் சொல்லச் சொல்ல அதைத் திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருப்பார்கள், மாணவர்கள் . அந்தப் பிரேயர் முடிந்து, அன்றைய நாளிதழில் வந்த முக்கியமான செய்திகளை ஒரு மாணவர் வாசிக்க அதை ஆர்வத்தோடு கேட்பார்கள் மற்ற மாணவர்கள் .
பிரேயர் முடிந்து ஒழுங்குபடுத்தப்பட்ட ராணுவ அணிவகுப்பு மாதிரி வகுப்பறைக்கு செல்வார்கள் மாணவர்கள் . வகுப்பறையில் ஒதுக்கப்பட்ட அவரவர் இருக்கையில் பாேய் அமர்வார்கள். மூன்று பேர் அமரும் பெரிய இருக்கையாக இருக்கும் வகுப்பறையில் உள்ள இருக்கை.
முத்து, ராஜன், காளியம்மாள், சித்ரா , விமலா,பால்பாண்டி, சேது, பாண்டிய நேரு என்று முப்பது மாணவர்களுக்கு மேல் அந்த வகுப்பறையில் அமர்ந்து படிப்பார்கள். அதுவரையில் அமைதியாக இருந்த வகுப்பறை அப்போது கூச்சல் குழப்பமாக மாறும்.எதிர் திசையில் இருப்பார் தலைமையாசிரியர். மாணவர்களின் கூச்சல் கேட்டு அங்கிருந்து வேகமாக கம்பு எடுத்து வருவார்.
” இதென்ன பள்ளிக்கூடமா ? சந்த மடமா ? இப்படி பேசிட்டு இருக்கீங்க? பேசாம இருக்க மாட்டீங்களா? இனி எவனாவது பேசுனீங்க, கன்னம் பழுத்துப் போகும்.டேய் முத்து எவனாவது பேசுனா , பேசுறவன் பேர எழுதி என்கிட்ட கொடு .அப்புறம் வச்சிக்கிறேன் ” என்று அரட்டி விட்டுச் செல்வார் தலைமை ஆசிரியர்.
முத்து பேப்பரையும் பேனாவையும் எடுத்துக்கொண்டு தேர்வு எழுதும் மாணவர்களைக் கவனிப்பது போல யார் பேசுகிறார்கள்? என்று எழுத ஆரம்பிப்பான். அவனைப் பார்த்தாலே மாணவர்களுக்கு சிரிப்பு தான் வரும். சிரிப்பு வரும் வாயை இரு கைகளாலும் பொத்திக் கொண்டு சிரிக்க முடியாமல் சிரித்துப் பயத்தில் கண்ணீர் விட்ட மாணவர்களும் அங்கிருந்தார்கள்.
” டேய் முத்து ஒரே ஒரு விஷயம் நான் சித்ரா கிட்ட கேட்டுக்குறேன்டா” என்று சைகையில் கேட்ட ராஜனைப் பார்த்து பேசக்கூடாது என்பான் முத்து.
“ஒரு முக்கியமான விஷயம் நான் சித்ரா கிட்ட பேசட்டுமா? என்று மறுபடியும் கேட்க, அக்கம்பக்கம் ஆசிரியர்கள் வருகிறார்களா? என்பதைக் கவனித்த முத்து,
” சீக்கிரம் ” என்பான். அதற்குள் சித்ராவிடம் ஏதோ குசு குசு என்று பேசிய ராஜன்
“ரொம்ப நன்றி என்பான்.
அடுத்து சேது, முத்துவை கூப்பிட்டான்
நிர்மலா கிட்ட நான் பேசணும் என்று சைகையில் சேது கேட்க
முடியாது என்றான் முத்து.
“ராஜன மட்டும் பேச சொன்ன ” என்று அவன் வம்பு இழுக்க
“இது என்னடா வம்பா போச்சு பேசறவன் பேர் எழுதச் சொன்னா கடைசியில என் பேர எழுதிக் குடுத்துடுவானுங்க போல ” என்ற முத்து இனிமேல் இந்த வேலைய நாம செய்யக்கூடாது என்று ஓடி ஒதுங்குவான் .
” சரி பேசு” என்ற சொல்ல அப்போது பார்த்து வகுப்பறைக்குள் வந்தார் கணக்கு வாத்தியார்
” என்ன முத்து எவனாவது பேசுனானா ?என்று கணக்கு வாத்தியார் கேட்க
“இல்லை சார்” என்று வெறும் பேப்பரைக் காட்டினான், முத்து
” நீ ரொம்ப கெட்டிக்காரன் ஆச்சே? உன்ன பாத்தா, எல்லாரும் பயப்படுவாங்க .பெறகு எப்படி பேசுவானுங்க? என்று முத்துவுக்குச் சான்றிதழை கொடுத்துவிட்டு கணக்குப் பாடத்தை ஆரம்பிப்பார் கணபதி வாத்தியார்.
அது யாருக்கும் புரியாத அல்ஜிப்ரா அவர் ஏதேதோ சொல்லி கரும்பலகையில் எழுதிக் கொண்டிருக்கும் போது கணக்குப் பாடத்தைக் கவனிக்காமல் தின்பண்டங்களைத் தின்று கொண்டு பின்னால் திரும்பி இருக்கும் கணக்கு வாத்தியாரை கிண்டல் செய்து கொண்டிருப்பார்கள், மாணவர்கள்
“என்னடா முத்து இருக்கும் போது யாரும் பேசுறது இல்ல. நான் வந்தா பேசுறீங்களா? என்ன பாத்தா உங்களுக்கு தமாசா போச்சா? என்று கணக்கு வாத்தியார் திரும்பாமலே மாணவர்களை அரட்டுவார். அதுவரையில் பேசிக் கொண்டிருந்தவர்கள் வாயடைத்து அமர்வார்கள்.
கணக்குப் பாடம். முடிந்து ரீசஸ் பீரியட் வரும். பள்ளியின் வாசலில் , கொய்யாப்பழத்தை வெட்டிப் போட்டு, அதில் உப்பு, மிளகாய் மஞ்சள் தூள் தடவி விற்றுக் கொண்டிருப்பார்கள். கொய்யாப்பழத்தைப் வாங்கி சாப்பிட்டு விட்டு, ஒதுக்குப் புறமாக ஒதுங்கி விட்டு, திரும்பி வந்து வகுப்பறைக்குள் நுழையும் போது, மாணவிகள் அவர்கள் இருக்கையில் அமராமல் மாணவர்கள் இருக்கையில் அமர்ந்திருப்பார்கள். இதைப் பார்த்ததும் மாணவர்களுக்கு ஏகபோக சந்தோசம் உண்டாகும் .
“அவ என்ன லவ் பண்றா போலடா இவ்வளவு இடம் இருக்கு அதெல்லாம் விட்டுட்டு, என் இடத்தில் உட்கார்ந்து இருக்கிறா பாரு” என்று ஒருவன் சொல்ல
“ஆமாடா நீ சொல்றது உண்மைதான் ” என்று இன்னொருவன் ஆமோதிக்க
“நிர்மலா என்னிடத்தில் உட்கார்ந்து இருக்கிறா . அவ என்ன லவ் பண்ற போல ” என்று இன்னொருவன் சொல்ல,இப்படியாக ஆளாளுக்கு சொல்லிக் கொண்டு வகுப்பறைக்குள் நுழையாமல் வெளியே நின்று பார்த்துக் கொண்டே இருப்பார்கள். மாணவிகள் எழுந்து போகும் வரை,அவர்களைப் பார்த்துப் பார்த்து மனதுக்குள் காதல் கணக்கு போட்டுத் திருப்தி அடைந்த மாணவர்கள் எத்தனையோ பேர்.
அந்த வகுப்பறை. மதிய உணவு இடைவேளைகளில் உணவறையாகவும் மாறும். வீடுகளிலிருந்து கொண்டு வந்த உணவுகளை மாணவர்களும் மாணவிகளும் பகிர்ந்து சாப்பிட்டுவிட்டு, அந்த மதிய இடைவேளையில் அந்தப் பெஞ்சு மேலேயே சிறிது நேரம் தூங்கிவிட்டு, மதிய வகுப்பிற்குத் தயாராகி, சாயங்காலம் வரை வகுப்பறையில் இருந்து விட்டு அந்த வகுப்பறையை விட்டுப் பிரிய மனம் இல்லாமல் பிரிந்து செல்வார்கள். மறுநாள் காலை, அதே பிரேயர் அதே வகுப்பறை இப்படியாகத் தொடர்ந்து இயங்கும் அந்தப் பள்ளியும் மாணவர்களும் வகுப்பறையும்.
நடந்து முடிந்த பழைய நாட்களை எல்லாம் அசைபோட்டு நின்று கொண்டிருந்தார்கள் முப்பது வருடங்களுக்கு முன்னால் அந்த அரசுப் பள்ளியில் படித்த, பழைய மாணவ மாணவிகளான முத்து ராஜன், விமலா ,நிர்மலா காளியம்மாள், பாண்டிய நேரு என்று அந்த முப்பது மாணவர்கள். அவர்கள் கண்களில் பழைய வகுப்பறை ஞாபகங்கள் வந்து விழுந்தன.
வந்திருந்த அத்தனை பேர்களின் கண்களிலும் கண்ணீர் துளிகள். அதே முத்து, அதே ராஜன், காளியம்மாள், பாண்டிய நேரு, சேது நிர்மலா, விமலா,நிர்மலா சிறுவயதுப் பருவம் முதிர்ந்து தலையில் கொஞ்சம் நரை தட்டுப்பட்டிருந்தது.
அன்று பழைய மாணவர்களெல்லாம் ஒன்று கூடி தாங்கள் படித்த பள்ளியைப் பார்க்க வந்திருந்தார்கள்.
அவர்கள் இதயத்திலும் கண்களில் வந்து வந்து போயின அந்தப் பள்ளியின் பழைய வகுப்பறை ஞாபகங்கள். தாங்கள் அமர்ந்திருந்த அதே இருக்கையில் அமர்ந்து தங்களை தாங்களே திரும்பிப் பார்த்துக் கொண்டார்கள். இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தார்கள், தற்போது அந்தப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த புதிய மாணவர்கள் .
அவர்கள் என்ன நினைத்தார்களோ தெரியவில்லை. அவர்களுக்குள்ளே சிரித்துக் கொண்டார்கள். இவர்களின் செயல் புதிய மாணவர்களுக்கு வியப்பாகவும் ஏளனமாகவும் தெரிந்தது .
அவர்களுக்கு இப்போது தெரியாது. இன்னும் சில ஆண்டுகள் கழித்து அவர்களும் இந்த வகுப்பறைக்கு வரலாம். நம்மைப் போலவே அவர்களுக்கும் இந்த எண்ணம் இந்த அழுகை, இந்த உணர்ச்சி, அவர்களுக்கும் மேலிடலாம். ஏனென்றால் தாயின் கருவறையும் வகுப்பறையும் ஒவ்வொரு மனிதனுக்கும் முக்கியமான ஒன்று ” என்று அந்த வகுப்பறையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள் அந்த அரசுப் பள்ளியில் படித்த பழைய மாணவர்கள் .
தற்போதுள்ள வகுப்புகள் ஆரம்பமாகின. அவர்களிடம் சொல்லிவிட்டு விடை பெற்றார்கள் பழைய மாணவர்கள் . அவர்களுக்குச் சொல்லிக் கொடுத்த ஆசிரியர்கள் இப்போது அந்தப் பள்ளியில் இல்லாமல் இருந்தார்கள்.ஆனால், பழைய பள்ளியின் ஞாபகம். அந்தப் பிரேயர் குரல், ஆசிரியர்களின் பாடம் சொல்லும் சத்தம் இவைகள் எல்லாம் அவர்கள் காதில் ஒலித்துக் கொண்டிருந்தன. “டேய் ஏன் பேசுற
பேசாத? பாடத்தைக் கவனி” என்று ஒரு வகுப்பறையில் சொல்லிக் கொண்டிருந்தார் ஆசிரியர்.
“சரிங்க சார்” என்ற மாணவர்களின் குரல், பழைய மாணவர்களின் காதில் விழ,
கண்ணீரோடு அந்தப் பள்ளிக்கூடத்தை விட்டு வெளியேறினார்கள் பழைய மாணவர்கள் .
ஆசிரியர்கள் பாடம் நடத்திக் கொண்டிருந்தார்கள். அதை மாணவர்கள் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.
சத்தமின்றி இருந்தன வகுப்பறைகள்.
#சிறுகதை