சிறுகதை

லைசன்ஸ் – ராஜா செல்லமுத்து

ரவிக்கு இருசக்கர வாகனங்கள் நான்கு சக்கர வாகனங்கள் நன்றாகத் தெரிந்தாலும் இதுவரை அவன் லைசென்ஸ் எடுத்துக் கொண்டதே இல்லை.

தன்னுடைய அண்ணன் ஒர்க் ஷாப் கடை வைத்திருந்ததால் சிறுவயதிலிருந்தே பழுது நீக்க வரும் வாகனங்களை எடுத்துக் கொண்டு வலம் வருவது என்று இருந்ததால் வண்டி ஓட்டுவது ஒன்றும் அவனுக்கு சிரமமில்லாமல் இருந்தது.

அதனால் எவ்வளவு பெரிய வண்டி ஆக இருந்தாலும் அதை லாவகமாக ஓட்டி செல்வான் ரவி.

அவன் பிறந்த ஊர் கிராமம் என்பதால் அங்கே எல்லாம் தெரிந்தவர்கள் என்று இருந்ததாலும் அவனிடம் லைசென்ஸ் இருக்கிறதா? இல்லையா? என்று யாரும் கேட்கவில்லை.

அதனால் அவன் எப்போதும் வண்டியை எடுத்துக் கொண்டு போவான். வருவான். கேட்பாரற்று இருந்தது.

இப்படிப் போய்க் கொண்டிருக்கும் உன் வாழ்க்கையில் வேலை விஷயமாக நகரத்திற்கு வர வேண்டியதாக சூழல் இருந்தது.

சென்னை நகரம் அவனுக்கு ரொம்பவே அன்னியமாக பட்டது. எங்கெங்கோ வேலைக்கு அலைந்து பார்த்தான். எந்த வேலையும் அவனுக்கு அகப்படவில்லை.

முடிவாக மறுபடி ஊர் திரும்பலாம் என்று முடிவெடுத்து அமர்ந்திருந்தபோது, அவன் ஊருக்கு பக்கத்து ஊர்க்காரர் ஒருவர் அவன் தங்கி இருக்கும் அறைக்கு வந்தார் .

என்ன ரவி? ஊருக்கு கிளம்பற போல என்றான்

ஆமா. நான் வந்து ஆறு மாசத்துக்கு மேல் ஆச்சு. ஒரு வேலையும் கிடைக்கல. கஷ்டமா இருக்கு. நான் ஊருக்கு போறேன் என்றான் ரவி

ஏன் ஊருக்கு போறேன்னு சொல்ற. இங்கேயே இரு என்றான் நண்பன்

இங்கே இருந்தா வீட்டு வாடகை கொடுக்கிறது. சாப்பிடுவது. வேற வழி இல்ல என்றான் ரவி.

உனக்குத்தான் டிரைவிங் தெரியுமே. நான் உனக்கு ஒரு இடத்துல வேலை வாங்கித்தரேன். செய்ய முடியுமா? என்றான் நண்பன்

ஓகே என்றான் ரவி

மறுநாள் காலை அவனை ஒரு பெரிய வீட்டுக்கு அழைத்துச் சென்றான்.

அவனுக்கு அங்கு டிரைவர் வேலை கிடைத்தது.

வீட்டு ஆட்களை வெளியில் கூட்டிப் போவது வருவது என்று அவன் அந்த வீட்டில் டிரைவராக அமர்த்தப்பட்டான்.

மாத சம்பளம், பேட்டா என்று அத்தனையும் கொடுத்தார்கள். அவனிடம் லைசென்ஸ் இருக்கிறதா? இல்லையா? என்பதை எல்லாம் அந்த வீட்டுக்காரர்கள் கேட்கவில்லை. அவன் தன்னுடைய வேலையைச் சரியாக செய்து கொண்டிருந்தான்.

அவன் வண்டி ஓட்டும்போது பாதுகாப்பாக செல்லும் விதம், இவை அத்தனையும் பார்த்து அந்த வீட்டுக்காரர்கள் அவனை விடவில்லை.

தன்னிடம் லைசென்ஸ் இல்லை என்று அவன் சொல்லவில்லை. அவர்களும் லைசன்ஸ் இருக்கிறதா? என்று கேட்கவும் இல்லை.

இவ்வளவு லாவகமாக வண்டி ஓட்ட தெரிந்தவரிடம் லைசன்ஸ் இருக்காதா? என்ன என்று அவர்கள் விட்டுவிட்டார்கள்.

ஆனால் அன்று ஒரு நாள் தெரிய வந்தது.

அவன் கார் வைத்திருந்த இடத்தில் இருந்து காரை வெளியே எடுப்பதற்கு பின்பக்கமாக பின்னால் வண்டியை எடுத்தான்.

அப்போது அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு இருசக்கர வாகனம் கீழே விழுந்தது.

அந்த வாகனத்திற்கு சொந்தக்காரர் தன் வண்டியை ரவி இடித்து தள்ளிவிட்டு சேதப்படுத்தியதாக குய்யோ முறையோ என்று சத்தமிட்டார்.

அதற்குள் அங்கு நிறைய பேர் கூடி ரவி தான் தவறு செய்தான் என்று அத்தனை பேரும் அவனை குற்றம் சாட்டினார்கள்.

இந்தக் குற்றத்தை செய்யவில்லை என்றான் ரவி.

ஆனால் டூவீலர் நொறுங்கி விட்டது என்று அந்தப் பெரியவர் புலம்பினார்.

அதற்குள்ளாக அங்கே போக்குவரத்து காவலர் வந்தார்.

என்ன இங்கு பிரச்சனை? என்று கேட்ட போது

இவன் என்னுடைய இரு சக்கர வாகனத்தை தள்ளிவிட்டான் என்று அந்தப் பெரியவர் புகார் செய்தார்.

எதையும் யோசிக்காத அந்த போக்குவரத்துக் காவலர் ரவியின் மீது குற்றம் சாட்டினார்.

அவன் லைசென்ஸ், ஆர்சி புக் இன்சூரன்ஸ் அத்தனையும் கேட்டார்.

திருதிருவென விழித்தான் ரவி.

என்ன முழிக்கிற? என்று கேட்க.

அப்போதுதான் காரில் இருந்த அந்த பெரிய வீட்டுக்காரர்களுக்கு தெரியவந்தது ரவியிடம் லைசென்ஸ் இல்லை என்று.

அவன் ஒருவாறாக புலம்பினான். தன்னுடைய லைசென்ஸ் வீட்டில் வைத்துவிட்டு வந்ததாக பொய் சொன்னான்.

பெரிய வீட்டுக்காரர்கள் என்பதால் ஒருவாறாக லஞ்சப் பணத்தை கொடுத்து, அங்கிருந்து தப்பினார்கள்.

அப்போதுதான் ரவியிடம் அந்த வீட்டுப் பெண்மணி கேட்டார்

உங்களிடம் லைசென்ஸ் இருக்கா? என்று.

இல்லை என்று ஒற்றை வார்த்தையில் பதில் சொன்னான் ரவி.

நீங்க தவறு செய்யலன்னாலும் கூட உங்ககிட்ட லைசென்ஸ் இல்லன்னா. எல்லாத்தையும் உங்க மேல தான் போடுவாங்க. அதனால நீங்க லைசென்ஸ் எடுத்துட்டு வேலைக்கு வரலாம் என்று சொல்லி அனுப்பினார் அந்தப் பெண் .

அன்று பெரிய வீட்டில் காரை நிறுத்தி, அவன் மறுநாளே டிரைவிங் ஸ்கூல் சென்று லைசன்ஸ் எடுப்பதற்கான எல்லா ஆவணங்களையும் கொடுத்து திரும்பினான்.

டிரைவிங் ஸ்கூலில் ஒரு விண்ணப்பத்தைக் கொடுத்து, நீங்கள் இதை வைத்து எங்கு வேண்டுமானாலும் வண்டி ஓட்டலாம் என்று அனுமதி அளித்தார்கள். டிரைவிங் ஸ்கூலில்.

அந்த எல்எல்ஆர் லைசென்ஸ் எடுத்துக் கொண்டு அவன் அந்த பெரிய வீட்டிற்கு விரைந்தான்.

அந்த வீட்டில் வேறு ஒருவர் காரை இயக்கிக் கொண்டிருந்தார்.

அம்மா நான் லைசென்ஸ் எடுத்துட்டேன் என்றான் ரவி.

நீங்க போகலாம்; அப்புறம் வாங்க என்று சொன்னார்கள்

எப்போ? என்று கேட்டான் ரவி

சொல்றோம் என்று பதிலை மட்டுமே அந்த வீட்டிலிருந்து சொல்லி அனுப்பினார்கள்.

கால்நடையாக வெளியே வந்தான். அன்று முதல் அந்த வீட்டில் அவனை கூப்பிடவில்லை. நிறைய இடங்களில் டிரைவர் வேலைக்கு கேட்டான். யாரும் அவனை வேலைக்கு சேர்க்க வில்லை.

அவன் மனதுக்குள் ஒரு உண்மை நிழலாடியது.

லைசென்ஸ் இல்லாத போது எத்தனையோ வாகனங்களை ஓட்டினேன்.

ஆனால் லைசென்ஸ் இருக்கிறது. எந்த வண்டியும் கிடைக்கவில்லை..

இதுதான் வாழ்க்கையின் சூத்திரம் என்று நினைத்துக் கொண்ட ரவி சாலை வழியே நடந்து கொண்டிருந்தான் லைசென்ஸ் எடுத்தே ஆக வேண்டும் என்ற எண்ணத்தோடு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *