சிறுகதை

லைக் – ஆவடி ரமேஷ்குமார்

காலை மணி 7.30

தனது வீட்டு வாசலில் நிறுத்தியிருந்த ஆட்டோவை ஒரு பக்கெட் தண்ணீர் மற்றும் துணி கொண்டு நன்கு கழுவி துடைத்துக் கொண்டிருந்தார் ஆட்டோ ஓட்டுனர் மூர்த்தி.

வீட்டுக்குள்ளிருந்து வந்த மனைவி மல்லிகா, “ரொம்ப நேரமா ஒரு போன் வந்திட்டே இருக்கு. யார்னு பார்த்து பேசுங்க” என்று சொல்லியபடி போனை மூர்த்தியின் கையில் கொடுத்துவிட்டுப் போனாள்.

வாங்கிப் பார்த்தார் மூர்த்தி.

டிஸ்பிளேவில் ‘இளங்கோ’ என்று வந்திருந்தது.

போன் செய்தார் இளங்கோவிற்கு.

“என்ன இளங்கோ”

“ரொம்ப பிஸியாண்ணே…நீங்க டூட்டிக்கு புறப்பட்டாச்சா?”

“இன்னும் இல்ல.ஒரு மணி நேரம் ஆகும்”

“உங்களை நேரில் பார்த்துப் பேச ஆசைண்ணே.வீட்டுக்கு வரட்டுமா?”

“தாரளமா வா. ஆமா என்ன விசேசம்?”

“எல்லாம் நீங்க முதன் முதலா நடிச்ச சினிமாவைப்பத்தி தாண்ணே”

“ஓ…அப்படியா…படம் பார்த்திட்டியா?”

“ம்….. பார்த்தேண்ணே. சூப்பரா கலக்கியிருந்தீங்க. அதுவும் ஆட்டோ ஓட்டற நீங்க ஒரு டாக்டர் நடிச்சு அசத்தியிருந்தீங்க. பத்து நிமிசத்துல அங்க வர்றேண்ணே”

கட் செய்தான் இளங்கோ.

மூர்த்திக்கு மிகவும் சந்தோஷமாயிருந்தது.

சொன்னபடி வந்து நின்றான் இளங்கோ.

வீட்டினுள் அழைத்துப் போய் நாற்காலியில் அமர வைத்து காபி கொடுத்து உபசரித்தார் மூர்த்தி.

“எனக்கும் சினிமால நடிக்கனும்னு ஆசை. முடியல. ஆனா நீங்க திடீர்னு எப்படி சினிமாவுல நடிச்சீங்க? வாய்ப்பு எப்படி கிடைச்சது? அதையை கேட்டுட்டு போகலாம்னு வந்திருக்கேன்ணே”

” ம்…. ஓ.கே. சொல்றேன்.. நான் ஃபேஸ்புக்ல இருக்கேன். உதவி இயக்குனர் செந்தில் ராஜாங்கிறவரோட புரொபைல் போட்டோவை பார்த்திட்டு பிரண்ட் ரிக்வெஸ்ட் கொடுத்தேன். அவரும் ஏத்துக்கிட்டார். நான் சும்மா ஜாலியாகத்தான் அவர் போடற ஸ்டேட்டஸ்களுக்கு லைக் போட்டுட்டு இருந்தேன். திடீர்னு ஒரு நாள் அவர் எனக்கு போன் பண்ணி,

‘நான் இப்ப இயக்குனர் ஆகிட்டேன். முதல் படம் இயக்கறேன். நீங்க என்னை வந்து அவசியம் பாருங்க’ னு அட்ரஸ் சொன்னார். போனேன்.’ நான் போட்ட ஸ்டேட்டஸ்களுக்கு எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாம லைக் போட்டு சூப்பரா கமெண்ட்டும் பண்ணிட்டே இருந்தீங்க. அது எனக்கு ரொம்ப ஊக்கத்தை கொடுத்திச்சு. உங்களுக்கு நான் பதில் மரியாதை செய்ய ஆசைப்படறேன். என் முதல் படத்துல உங்களை நடிக்க வைக்கலாம்னு இருக்கிறேன்.

நடிக்கிறீர்களா?’ னு கேட்டார். எனக்கு குஷியாவும்

ஆச்சரியமாகவும் இருந்தது.

‘ பழக்கமில்ல. சொல்லி கொடுத்தா நடிக்கிறேன் சார்’ னு சொன்னேன்.

தாழ்வு மனப்பாண்மையுள்ள ஹீரோவை உசுப்பேத்தி ஊக்கம் கொடுத்து தொல்லை கொடுக்கும் வில்லன் கூட மோத வச்சு ஜெயிக்க வைக்கிற ஒரு ‘டாக்டர்’ கேரக்டர்ல என்னை நடிக்க வச்சுட்டார்! அனுபவமே இல்லாத என் நடிப்பை பார்த்துட்டு

‘பரவாயில்லையே… நடிப்புல பின்னிட்டீங்களே… இனி என் அடுத்த படத்துலயும் உங்களை பயன்படுத்திக்கிறேன்’ னு சொன்னார். பத்தாயிரம் ரூபா சம்பளமா கொடுத்தார் இளங்கோ!”

“அப்படியாண்ணே…ரொம்ப சந்தோஷம்ண்ணே. வாழ்த்துக்கள்! நான் வரேண்ணே..”

இளங்கோ தன் வீட்டுக்கு வந்து விட்டு போனது மனதுக்கு மிகவும் இனிமையாக இருந்தது மூர்த்திக்கு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *