விரிந்து பரந்து கிடந்த ஒரு ஏற்றுமதி இறக்குமதி நிறுவனத்தில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் வேலை செய்து கொண்டிருந்தார்கள். அலுவலகத்தில் நிறுவனப் பணியாளர்கள், அலுவலகப் பணியாளர்கள் என்று தனித்தனியாக இருந்தார்கள். விஞ்ஞானம் வளர்ந்து கைபேசியும் இன்டர்நெட்டும் நம்மைத் தூக்கி நிறுத்தி இருந்தாலும் லேண்ட்லைன் என்னும் நிலைத் தொலைபேசி இன்றும் எல்லா இடங்களிலும் இயங்கிக் கொண்ட தான் இருக்கிறது. அந்த ஏற்றுமதி இறக்குமதி நிறுவனத்தில் லேண்ட்லைன் இருந்ததில் வியப்பு ஒன்றுமில்லை . இருநூறு பேருக்கும் மேற்பட்ட அலுவலக ஊழியர்கள் இருக்கும் இடத்தில் ஒவ்வொருவரின் அருகிலும் லேண்ட்லைன் இருக்கும். எழுந்து வந்து ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு முறையும் சொல்லிக் கொண்டிருக்க முடியாது என்பதற்காக அவரவர் இருந்த இடத்திலேயே அமர்ந்து விவரங்களை இண்டர்காம் மூலம் சொல்வார்கள். அப்படி விவரங்களைச் சொல்லும் போது அமர்ந்த இடத்திலேயே அத்தனையும் சரி செய்வார்கள் அலுவலக ஊழியர்கள் .
ராகவன், நிர்மல், ரஞ்சித் இன்னும் பெயர் சொல்லி அழைக்கக்கூடிய அலுவலக ஊழியர்கள் அந்த அலுவலகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தார்கள்.ராகவனின் லேண்ட்லைனுக்கு அடிக்கடி போன் வந்து கொண்டிருந்தது.
அதை எடுத்து ராகவன் “ஹலோ” என்று சொல்வதற்குள் கட்டாகிவிடும்.
“என்ன இது ? உடனே கட் ஆயிருச்சு” என்று நினைத்த ராகவன், மறுபடியும் அலுவலக வேலையில் மூழ்கினான். லேண்ட் லைன் மறுபடியும் மறுபடியும் அலறியது. எடுப்பான் ஹலோ என்று சொல்வதற்குள் மறுபடியும் கட் ஆகிவிடும். இப்படியாக அவனுக்கு லேண்ட் லைனிலிருந்து இருந்து போன் வரும். ஆனால் கட் ஆகிவிடும். அவன் அருகில் இருந்த பார்த்திபன் கூட
என்ன ராகவன் உங்களுக்கு அடிக்கடி லேண்ட்லைன்ல கால் வருது .ஆனா கட் ஆகுது? யாரோ உங்ககிட்ட முக்கியமான விஷயம் சொல்லனும்னு நினைக்கிறாங்க. ஆனா அது ரீச் ஆக மாட்டேங்குது. ஏன் உங்க செல் நம்பர் அவங்ககிட்ட கொடுக்கலையா ? என்று பார்த்திபன் கேட்டபோது
” என் செல் நம்பர் எல்லோருக்கும் தெரியும் .ஆனா லேண்ட் லைன்ல இருந்து வர்றவங்க அலுவலக ரீதியா ஏதாவது பேசுவாங்கன்னு நினைக்கிறேன் .அதுதான் சரியா எனக்கு ரீச் ஆகல. அதனால யார் எனக்கு லேண்ட் லைன்ல போன் பண்றாங்கங்கிறத கண்டுபிடிக்கணும். அந்த நம்பர் எடுத்துட்டோம்னா யார் பண்றாங்கன்னு தெரிஞ்சுக்கலாம்”
என்று உறுதியாகச் சொன்னான் ராகவன்.
நாட்கள் சென்றன
மறுபடியும் மறுபடியும் தினமும் லேண்ட் லைனிலிருந்து அடிக்கடி கால் வருவதும், அதை எடுத்து ராகவன் ஹலோ என்று சொல்வதற்குள் கட்டாவதும் வாடிக்கையாகவே இருந்தது. சில நேரங்களில் அவனால் எந்த வேலையும் செய்ய முடியவில்லை. இந்த லேண்ட்லைனால பிரச்சினையா இருக்கு என்று ரிசீவரைத் தூக்கி கீழே வைத்த நாட்களும் உண்டு.
அந்த அலுவலகம் மொத்தத்திலும் லேண்ட்லைனுக்கு ஃபோன் லிங்க் ஆவதும் ராகவன் எடுத்துப் பேசும்போது அது கட்டாவது எல்லோருக்கும் தெரிந்தது. ஆனால் யார் பேசுகிறார்கள் ?என்ற விவரம் தெரியாததால் அந்த அலுவலக ஊழியர்கள் யாரும் அதற்கு பதில் சொல்லாமல் இருந்தார்கள் .
ஒரு நாள் ராகவன் தன் இருக்கையில் அமர்ந்திருந்த போது மறுபடியும் அதே லேண்ட் லைன் அலறியது “
யார்ரா இவன் ? என்று சொல்லியபடியே அலுவலகத்தைத் திரும்பி ஒரு நோட்டமிட்டான் தன்னிலிருந்து தள்ளி அமர்ந்திருந்த குருநாதன் தான் தன் காதில் லேண்ட் லைனை வைத்தபடி அமைதியாக இருந்தார்.
“இவரும் பேச மாட்டேங்கிறாரு? யாருக்காக போன் பண்ணி இருக்காரு “
என்று ராகவன் யோசிக்க குருநாதன் ஃ பாேனை வைத்தான்.
“என்ன ராகவன் கண்டுபிடிச்சிட்டான் போல ? என்று அந்த அலுவலகத்தில் இருந்தவர்கள் கடகடவென சிரித்தார்கள் …
ராகவன் வேலை செய்றான் சரி. இருந்தாலும் அவன அலர்ட்டா வைக்கிறதுக்காகத்தான் அடிக்கடி நம்ம லேண்ட்லைன்ல போன் பண்ணி கலாட்டா பண்றோம். இது அவனுக்கு தெரியாத வரைக்கும் நல்லது. ஏன்னா அவன் ஆபீஸ்ல அடிக்கடி தூங்கிட்டு இருக்கான். அவன ஒவ்வொரு நேரத்திலும் தட்டி எழுப்பாம இப்பிடி லேண்ட் லைன்ல ரிங் பண்ணி அவனுடைய தூக்கத்த கலச்சு விடுறதே நம்முடைய வேலையாக இருக்கு”
என்று அலுவலகத்தில் சிலர் சொல்லிச் சிரித்தார்கள் .வேலை செய்து கொண்டிருந்த ராகவன் லேசாக கண் அசந்தான். அப்போது அவன் அருகில் இருந்த லேண்ட்லைன் அடித்தது .பதறித் துடித்த ராகவன் ரிசீவரை எடுத்து தன் காதில் வைத்து
“ஹலோ” என்றான். இப்போது அவன் மொத்தத் தூக்கமும் கலைந்து போனது. சுற்றிலும் பார்த்தான். அவனைச் சுற்றியிருந்த ஊழியர்கள் ராகவனைப் பார்த்தும் பார்க்காதது போல இருந்தார்கள். இண்டர்காமிலிருந்து தான் நமக்கு கால் வருகிறது என்று ராகவனுக்குத் தெரியாது. அவன் கண்களை மூடும் போது, மறுபடியும் அவனுக்கு போன் வரலாம்.
#சிறுகதை