நியூயார்க், செப். 28–
மத்திய கிழக்கில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ளதால், அமெரிக்க படைகள் எச்சரிக்கையாக இருக்க, அதிபர் ஜோ பிடன் உத்தரவிட்டுள்ளார்.
லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் ஹிஸ்புல்லா ஆயுதங்களை பதுக்கி வைத்திருந்த கட்டடத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இதில் 6 பேர் பலியாகிவிட்டதாகவும், 91 பேர் காயமடைந்திருப்பதாகவும் லெபனான் கூறியுள்ளது. கட்டட இடிபாடுகளுக்கு இடையே மீட்புப் பணி தொடர்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெற்கு பெய்ரூட்டில் பொதுமக்கள் வாழும் கட்டடத்திற்கு அடியில் ஆயுதங்களை ஹிஸ்புல்லா மறைத்து வைத்திருந்ததாக இஸ்ரேல் ராணுவம் குற்றம் சாட்டியுள்ளது. ஆனால், அந்த கட்டடத்தில் இஸ்ரேல் கூறுவது போல் எந்த ஆயுதங்களும் பதுக்கி வைக்கப்படவில்லை என்று ஹிஸ்புல்லா கூறியுள்ளது.
அதேநேரத்தில், நேற்று மாலையில் ஹிஸ்புல்லா தலைமையகத்தை குறிவைத்து துல்லிய தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் ராணுவ செய்தி தொடர்பாளர் டேனியல் ஹகாரி தெரிவித்தார். ஹிஸ்புல்லா தலைமையகத்தை தாக்கியதாக கூறினாலும், ஹிஸ்புல்லா தலைவர் ஹஸன் நஸ்ரல்லா பெயரையோ, அவர்தான் தாக்குதலின் இலக்காக இருந்தார் என்றோ அவர் ஏதும் குறிப்பிடவில்லை.
ஜோ பைடன் உத்தரவு
மேலும் ஹிஸ்புல்லா இயக்கத்தின் மற்ற மூத்த தலைவர்கள் கொல்லப்பட்டதாக லெபனான் ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியை உறுதி செய்ய முடியவில்லை என்று அமெரிக்க அதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், மத்திய கிழக்கில் நிலைமையை ஆய்வு செய்து அதற்கேற்ப, அங்குள்ள அமெரிக்கப் படையினரை உஷாராக இருக்கச் செய்யுமாறு அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகனை அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டிருப்பதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
“மத்திய கிழக்கில் நிலைமையை முழுமையாக ஆராய்ந்து, அந்த பிராந்தியத்தில் அமெரிக்காவின் நலன்களை காக்கவும், தற்காப்பை உறதிப்படுத்தவும் தேவைக்கேற்ப அமெரிக்கப் படைகளை உஷார் நிலையைல் வைத்திருக்க பென்டகனுக்கு பைடன் உத்தரவிட்டுள்ளார். அத்துடன் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க தூதரகங்களும் தேவையான தற்காப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பைடன் உத்தரவிட்டுள்ளார்.